Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

தமிழ் வளர்ச்சித் திட்டங்களில் அறிஞர்களை ஆதரிப்பதும் ஒரு பகுதியாக இருக்கட்டும்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு, சென்னை திரும்பியவுடன் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணமானது, தமிழ் வளர்ச்சியிலும் நூலக மேம்பாட்டிலும் அவர் காட்டிவரும் அக்கறையை எடுத்துரைப்பதாக அமைந்தது. அதற்கடுத்த இரண்டாவது நாளில், ஆளுநரின் உரையோடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா நூலகக் கட்டிடத்தில் நிரந்தரமாக இடம்பிடித்துவிட்டிருந்த கதண்டுகளின் கூடுகள், அங்கு செல்லும் வாசகர்களை நீண்ட காலமாகத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வந்த நிலையில், முதல்வரின் ஆய்வுப் பயணத்துக்கு முன்பாக அவை இரவோடு இரவாக அகற்றப்பட்டன. வாசகர்களின் நீண்ட நாள் வேதனைக்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் அறிவித்தபடி, மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஏழு தளங்களில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகின்றன. மேலும், ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர்கள் மூவருக்கு இலக்கிய மாமணி விருதுகள், தேசிய அளவிலும் மாநில அளவிலும் இலக்கியத்துக்காக விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டங்களில் கனவு இல்லம் ஆகிய அறிவிப்புகளும் அதே நாளில் அறிவிக்கப்பட்டன.

இந்தச் சூழலில், தமிழ் வளர்ச்சித் துறையிடமிருந்து சமீபத்தில் வெளிவந்துள்ள இரண்டு அறிவிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த புத்தகங்களுக்கான பரிசுக்குப் புத்தகங்கள் அனுப்பக் கோருவது ஒன்று. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடம் ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்கள் வேண்டுவது மற்றொன்று. 2016-ல் வெளிவந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசுகளே 2020 டிசம்பரில்தான் வழங்கப்பட்டன. இடைப்பட்ட ஆண்டுகளுக்கான பரிசுகளும் விரைந்து அளிக்கப்பட வேண்டியது அவசியம். கடைசியாக ஓய்வூதியம் அறிவிக்கப்பட்ட தமிழறிஞர்களுக்கு நான்கு மாதங்களாகியும் இன்னும் அது கிடைக்கவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

மூத்த தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் என்பது மாதம் ரூ.3,500 என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள். எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் போன்ற செலவு பிடிக்கும் திட்டங்களை அறிவிக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கான ஓய்வூதியத்தையும் வருமான வரம்பையும் இன்னும்கூட உயர்த்தலாம். தற்போது வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியமானது, அவர்களது அடிப்படைச் செலவுகளுக்கு உதவலாமே தவிர புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கப் போதுமானதாக இருக்காது. குறைந்தபட்சம், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியத்தையும் மருத்துவப் படியையும் இருமடங்காக உயர்த்தலாம். வாழும் காலத்தில் மேலும் அவர்களிடமிருந்து தமிழுக்குக் கூடுதல் பங்களிப்புகள் கிடைக்கும். தமிழுக்கு மட்டுமின்றி முதல்வருக்கும் அது பெருமை சேர்க்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x