Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

எதிர்க்கட்சிகளின் டெல்லி சந்திப்பு எழுப்பும் கேள்விகள்

சமீபத்தில் சரத் பவாரின் டெல்லி இல்லத்தில் நடந்து முடிந்திருக்கும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் சந்திப்பானது தேசிய அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவிடாதபோதும் சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கான நோக்கம் என்னவென்று இன்னமும்கூடத் தெளிவுபடுத்தப்படவில்லை. பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஒன்றிணைந்த கட்சிகளின் கூட்டமாக நடந்து முடிந்திருந்தபோதும், எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது சந்தேகங்களுக்கு இடமளிப்பதாகவே அமைந்துள்ளது.

ராஷ்டிர மஞ்ச் என்ற அமைப்பின் பெயரில், எட்டு அரசியல் கட்சிகளுடன் அரசியல் சாராத சில அமைப்பினரும் இந்தச் சந்திப்பில் பங்கெடுத்துள்ளனர். தேசிய அரசியலில் மிகவும் அனுபவம் கொண்டவரான யஷ்வந்த் சின்ஹா தலைமையில் செயல்பட்டுவரும் அமைப்பு இது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் பங்கு வகித்த சின்ஹா தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளார். சரத் பவாரின் டெல்லி இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு முன்பு அரசியல் வியூகவியலாளரான பிரசாந்த் கிஷோர், அடிக்கடி பவாரைச் சந்தித்துப் பேசியதும் சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் நோக்கம் மூன்றாவது அணியை உருவாக்குவது அல்ல என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தாலும், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படக்கூடியவர் என்று சரத் பவார் கருதப்படுகையில் அவரது இல்லத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

திரிணமூல், தேசியவாத காங்கிரஸ் தவிர ஆம் ஆத்மி, ராஷ்டிரிய லோக் தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கெடுத்துள்ளனர். இந்தக் கட்சிகளில் சில தங்களது மாநிலங்களில் செல்வாக்கு மிகுந்த கட்சிகள் என்றாலும் தேசிய அரசியலில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதவை. அதிலும், பெரும்பாலான கட்சிகள் தங்களது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்துகொண்டிருப்பவை. தற்போதைய நிலையில் இந்தச் சந்திப்பு பாஜகவின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

இந்தச் சந்திப்பில் திமுக கலந்துகொள்ளவில்லை என்பதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தக் கூட்டம் நடந்து முடிந்த அடுத்த சில நாட்களில், தமிழக நிதியமைச்சர் தனது பேட்டியொன்றில் ஒன்றிய நிதியமைச்சருடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அவர் அனுப்பிய உரையின் எழுத்து வடிவத்தை அனைத்து மாநிலங்களுடனும் பகிர்ந்துகொண்டதை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் அல்லாத மற்ற எதிர்க்கட்சிகளின் தனிச் சந்திப்பில் திமுக பங்கெடுக்கவில்லை என்பதற்கு ஒன்றிய - மாநில அரசுகளின் உறவை திமுக கவனத்துடன் அணுகிவருகிறது என்றும் பொருள்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x