Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள்: எதிர்நிற்கும் சவால்கள்

நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காகக் காத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதைப் பற்றி வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறது. இவ்வழக்கு விசாரணையின்போது, விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று, நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் திட்டமிருப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதால், அங்கும் இடைத்தரகர் முறை ஊடுருவிவிட்ட நிலையில், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் அதற்கு ஒரு தீர்வாக அமையக்கூடும். ஆனால், கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் உரிய நேரத்தில் கிடைக்காதது, எடைபோடவும் லாரிகளில் ஏற்றவும் போதுமான ஊழியர்கள் இல்லாதது என்று ஏற்கெனவே நிலவிவரும் குறைபாடுகள் சரிசெய்யப்படாத நிலையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களுக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் எவ்விதம் அமையக்கூடும் என்ற நியாயமான சந்தேகங்களும் எழுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகப் பருவம் தப்பிய மழையை விவசாயிகள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது. அறுவடைக் காலத்தில் மழை பெய்யும்போது அறுவடை இயந்திரங்கள் வயலில் இறங்க முடியாமல் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துவிடுகிறது. கொள்முதலின்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை என்பது அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகும். எனினும், நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரங்களை வடிவமைப்பதற்குக் காவிரிப் படுகை விவசாயிகளே முன்முயற்சி எடுத்து அவை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டும் உள்ளன. அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட வேண்டும். அறுவடையின்போது ஒரு மாத கால அளவுக்குக் கூடுதல் பணியாளர்களையும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தலாம்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் என்பது பொது விநியோகத்துக்குச் செல்லும் அரிசியின் தரத்தையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியது. வங்கம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இந்திய உணவுக் கழகம் ஈரப்பதத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் கொள்முதல் செய்வதால், அரிசியின் தரம் ஒப்பீட்டளவில் நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் அரைக்கப்பட்டு, பொது விநியோகத்துக்கு வரும் அரிசியைக் காட்டிலும் இந்திய உணவுக் கழகத்தின் வழியாகப் பெறப்படும் மற்ற மாநிலங்களின் அரிசி தரமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மற்ற மாநிலங்களின் ஆலைகளில் அரிசியின் நிறமாற்றத்தைச் சரிசெய்ய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டு அரிசி ஆலைகள் அதற்கான கூடுதல் செலவுகளைத் தமது பொறுப்பில் ஏற்றுக்கொண்டால்தான் உண்டு. நெல் கொள்முதலோடு மட்டும் அரசின் பொறுப்பு முடிந்துவிடவில்லை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் நியாயவிலைக் கடை வரைக்கும் தர நிர்ணயக் கண்காணிப்புகளை நீட்டிக்கவும் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x