Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

ஒருங்கிணைந்த தேசிய அமைச்சரவைக்கான நேரமா?

மே 31, 2021 நிலவரப்படி இந்தியாவில் உறுதிசெய்யப்பட்ட கரோனா தொற்றுகள் 28,047,534. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,29,100. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற ஐந்து பெரும் போர்களில் ஏற்பட்ட இழப்புகளைவிட இது அதிகம். வாழ்வாதாரத்தைப் பொறுத்தமட்டில், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, குறைந்தபட்சம் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்தப் பெருந்தொற்றால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்றம், “குடிமக்களால் நாட்டைத்தான் நம்பியிருக்க முடியும். ஆகவே, நீங்கள்தான் பிச்சையெடுத்தோ கடன் வாங்கியோ திருடியோ இந்த மிக மோசமான நெருக்கடி காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என்று ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளின் அமர்வானது, இந்த இடர்ப்பாட்டைக் கையாளும் வகையில் ஒரு தேசியத் திட்டத்தைத் தீட்டுமாறு ஒன்றிய அரசிடம் கோரியுள்ளது.

வழக்கமில்லாத நிகழ்வுகள்

இந்தப் பெருந்தொற்று, இயல்புக்கு மாறான பல நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, கரோனா விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்கத் தவறியதால், தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொலைக் குற்றம் புரிந்தவர்களாகக் கருத வேண்டும் எனக் கூறுவது; மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் தேவைக்காக நீதிமன்றங்களை நாடுவது; ஒரு மாநிலத்தின் சுகாதார அமைச்சர், அண்டை மாநிலம் ஆக்ஸிஜன் டேங்கர்களைச் சூறையாடுவதாகக் குற்றஞ்சாட்டுவது; தங்களின் ஒப்புதல் இல்லாமல் தம் மாநில வளங்களைப் பிறருக்குக் கட்டாயத் திருப்பம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒரு மாநில முதல்வர் ஒன்றிய அரசிடம் முறையிடுவது; ஒன்றிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சீரம் நிறுவனத்தின் தலைமை அலுவலரைக் கொள்ளைக்காரனோடு ஒப்பிடுவது; இதுபோல இன்னும் பல நிகழ்வுகள்.

இந்த இடர்ப்பாட்டைச் சமாளிப்பது நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நமது நாட்டின் கூட்டாட்சிக் கூறுகளும் நெருக்கடியில் உள்ளன. இத்தகைய காலகட்டத்தில் அரசியல் சதுரங்க விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுவது இன்றியமையாததாகும். விவிலியத்தில் வரும் கட்டிமுடிக்கப்படாத பேபல் கோபுரத்தில் மொழி புரியாத மக்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொள்வதைப் போல, இப்போது நிலவும் கருத்துபேதம், மாறிமாறி குறைகூறிக்கொண்டிருக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு இந்தப் பெருந்தொற்றை நாம் தோற்கடித்து மக்களைக் காப்பாற்ற இயலாது. ஒரு முழுமையான, சமரசமிக்க, கருத்தொருமித்த அணுகுமுறையே உடனடித் தேவை.

வரலாறு சொல்லும் பாடம்

கரோனா போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய பாடம் என்னவென்றால், ஒருங்கிணைந்த போர்க்கால தேசிய அமைச்சரவைகள். பொதுவாக, ஓர் ஒருங்கிணைந்த அமைச்சரவை என்பது எதிர்க்கட்சியைச் சார்ந்தோர், வல்லுநர்கள், தொழில் துறைத் தலைவர்கள் என நிபுணத்துவம் பெற்றவர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் தனிப்பட்ட கொள்கைச் சார்புகளால் பாதிக்கப்படாமல் இருக்கும். கூட்டுப் பொறுப்பு மற்றும் பதிலளிக்கும் கடமை – இதுவே அவ்வமைச்சரவையை வழிநடத்திச் செல்லும் மந்திரமாக இருக்கும். இடர்ப்பாட்டைச் சரிசெய்த பின் அமைச்சரவையைக் கலைத்துவிடலாம்.

“இது நடத்தற்கரிய கனவு” என்று இந்த எண்ணத்தை எளிதாக ஒதுக்கலாம்; ஆனால், வரலாறு உணர்த்துவது வேறு. ஆபிரகாம் லிங்கன் தனது போட்டியாளர்களைக் குழுவாகச் சேர்த்து ஓர் அமைச்சரவையை உருவாக்கினார். அதுவே அமெரிக்க உள்நாட்டுப் போரில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இங்கிலாந்து பிரதமர் ஆஸ்குயித் முதல் உலகப் போர் சமயத்தில் செய்ததுபோல, வின்ஸ்டன் சர்ச்சில் 1940-ல் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்டு பிரிட்டிஷ் போர்க்கால அமைச்சரவையை உருவாக்கினார். பிரிவினைக்குப் பின்னர், ஆகஸ்ட் 15, 1947-ல் பதவியில் அமர்ந்த சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையுமேகூட ஓர் ஒருங்கிணைந்த தேசிய அமைச்சரவையையே பிரதிபலித்தது. ஜவாஹர்லால் நேருவும் சர்தார் பட்டேலும் அதை உறுதிப்படுத்தினர். 14 அமைச்சர்களில், ஆர்.கே.சண்முகம் செட்டி, ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, பி.ஆர்.அம்பேத்கர், பல்தேவ் சிங் நால்வரும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தீவிர அரசியல் எதிர்ப்பாளர்கள். ஜான் மத்தாய், சி.ஹெச்.பாபா இருவரும் தனித்துவம் மிக்க நபர்கள். மிகச் சமீபத்திய உதாரணம் என்றால், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன், கரோனா இடர்ப்பாடுகளைக் கையாள்வதற்கு 2020-ல் ஒரு தேசிய அமைச்சரவையை உருவாக்கினார்.

கரோனாவுக்கென முழுமையான சட்டம்

இது ஒரு நம்பிக்கை உணர்வை விதைப்பதோடு மட்டுமல்லாமல் கலந்துவிட்ட பொருளாதார, சமூக, சுகாதாரப் பிரச்சினைகளைத் திறம்படக் கையாள வழிவகுக்கும். தேசிய மற்றும் மாநில அளவுகளில் கரோனா சூழலைக் கையாளும் வகையில் ஒரு முழுமையான சட்டத்தை இந்தியா இன்னும் இயற்றவில்லை. நியூஸிலாந்தின் கோவிட்-19 ‘பொதுச் சுகாதாரத் தயார்நிலைச் சட்டம் 2020’, அமெரிக்காவின் ‘கரோனா தயார்நிலை மற்றும் கூடுதல் ஒதுக்கீடுகள் சட்டம் 2020’, இங்கிலாந்தின் ‘கரோனா வைரஸ் சட்டம் 2020’ போன்றவை அந்தந்த நாடுகளில் வைரஸைக் கட்டுப்படுத்த தக்க சமயத்தில் இயற்றப்பட்ட மிக முக்கியமான சட்டங்களாகும்.

நாடாளுமன்றம் இடைக்கால ஓய்வில் இருப்பதாலும், நாடாளுமன்றக் குழுக்கள் மெய்நிகர் வாயிலாகவும் கூட்டப்படாத நிலையில், ஒருங்கிணைந்த தேசிய அமைச்சரவை, குறிப்பிட்ட பிரச்சினைக்காகத் தொடுக்கப்படும் அரசாணைகளை நம்பியிராமல், திட்டங்கள் அடிப்படையிலான அணுகுமுறைக்கு முன்கூட்டியே அனுமதியளிக்கும் வகையில் தற்காலிகச் சட்டம் இயற்றலாம். அந்தச் சட்டமானது தடுப்பூசி விலை நிர்ணயம் மற்றும் விநியோகம், மாநிலங்களிடையே இன்றியமையாத் தேவைகளின் தடையில்லா நகர்வு மற்றும் பங்கீடு, ஒருங்கிணைந்த நிதிநிலை மேலாண்மை, நேரடிப் பணப் பரிமாற்றத்துக்காக வளங்களைத் திரட்டுதல் போன்ற பிரச்சினைகளைத் திறம்படக் கையாண்டு, நாடு இந்தப் பெருந்தொற்றையும் அதன் விளைவுகளையும் நிலையாக வெற்றிகொள்ள உதவலாம்.

ஒருங்கிணைவோம்

சாதுரியமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், இந்தப் பேரிடர் நமது தலைமுறை எதிர்கொள்ளும் மிக ஆபத்தான சவால் என்பது நிதர்சனமான உண்மை. ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்ற குறளுக்கேற்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அண்மையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கரோனாவால் நம் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை உருவாக்கி முக்கிய முடிவுகளை எடுப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுபோல, நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உணர்ந்து நமது ஒன்றிய அரசு, ஒருங்கிணைந்த அமைச்சரவையை உருவாக்கி, அரசியல் நோக்கங்களை ஒன்றிணைத்து, கரோனா நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நாட்டின் மிகச் சிறந்த, ஆற்றல்மிக்க ஆன்றோரை ஒருங்கிணைப்பது, தேசத்தின் கூட்டுத் தலைமையின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை மீட்டெடுக்கும். நாம் இந்தத் துணிவுமிக்க முடிவை எடுத்தால், வரும் தலைமுறையினர் இந்தத் தருணத்தைத் திரும்பிப்பார்த்து, அதுவே நமது பொற்காலம் என நினைவுகூர்வர்.

- சி.ஆர்.கேசவன், அறங்காவலர், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை.

கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக், கிங்க்ஸ் காலேஜ் லண்டன் கிங்க்ஸ் இந்தியா கல்லூரியின் ஆய்வு மாணவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x