Published : 22 Jun 2021 03:11 am

Updated : 22 Jun 2021 05:37 am

 

Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 05:37 AM

பள்ளிக்கல்வி: தமிழக அரசின் முன்னுள்ள சவால்கள்

school-education

வே,வசந்திதேவி

பள்ளிக்கல்வித் துறை பெரும் சவால்களும் சாத்தியங்களும் கொண்டது. ஒரு நாட்டின் தலைவிதி அதன் வகுப்பறைகளில்தான் வார்க்கப்படுகிறது. சமூகத்தின் மனித வளம் முழுதும் அனைத்துத் தளங்களிலும் சிறந்து ஒளிர அடித்தளம் அமைப்பது பள்ளிக்கல்வியே. புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசானது பள்ளிக்கல்வியில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த சில கருத்துகளை இங்கு அளிக்கிறேன்.

மூன்று முன்னுரிமைகள்


ஒன்றிய அரசு 2020-ல் வெளியிட்டு நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கையானது, முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். அது பெரும் அபாயங்களின், அச்சுறுத்தல்களின் மொத்த வடிவமாக வந்திருக்கிறது. அவற்றைச் சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மரண அடி எனலாம். தங்கு தடையற்ற தனியார்மயம், வணிகமயம் எனலாம். இடஒதுக்கீட்டுக்கு முடிவு எனலாம். இந்துத்துவமயமாக்கல் எனலாம். மொத்தத்தில், தமிழ்நாடு கல்வியில் பெற்றிருக்கும் முன்னேற்றத்தை இழக்கும் அபாயம். இவை ஒவ்வொன்றைக் குறித்தும் இந்தக் கட்டுரையில் ஆழமாக விளக்க இடமில்லை என்பதால், தவிர்க்கிறேன். தமிழகம் இந்தக் கொள்கைகளுடன் எத்தகைய சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.

கல்வி பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த கல்வியானது, ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பெரும் தவறு. ஆனால், இன்றைய ஒன்றிய அரசோ கல்வியை ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து, மத்தியப் பட்டியலுக்கே மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த எதேச்சாதிகாரப் போக்குதான் வரும் நாட்களில் தொடரும் என்பது தெளிவு.

ஒன்றிய அரசு நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான ஒரே நுழைவுத் தேர்வு ‘நீட்’ (NEET) என்பதை நிறுவி, லட்சக்கணக்கான மாணவர்களுக்குப் பெரும் துரோகம் இழைத்திருக்கிறது. மருத்துவக் கல்வியானது வசதி படைத்தோருக்கு மட்டுமே உரியதாக மாறியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை-2020 இதற்கு மேலும் ஒரு படி சென்று, மத்தியிலிருந்து நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் அனைத்து உயர் கல்விக்கும் அவசியம் என்று அறிவித்திருக்கிறது. மத்தியிலிருந்து நடத்தும் நாடு முழுவதற்குமான ‘நீட்’ போன்ற ஒரே நுழைவுத் தேர்வுகள் என்பதை ஏற்றுக்கொள்ளவே இயலாது என்பதைத் தமிழக அரசு உரத்து அறிவிக்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட மூன்று முன்னுரிமைகளிலும் தமிழ்நாடு மட்டும் தனித்து நின்று போராடி வெல்வது கடினம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தையும், நாட்டின் அடித்தளமாகிய கூட்டாட்சியை அழித்தொழிக்கும் முயற்சியையும் எதிர்த்து ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். ஜனநாயகத்தைக் காக்கும் இந்தத் தேசிய இயக்கத்துக்குத் தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டும். அந்தத் தலைமைக்கான முழுத் தகுதியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. மாநில சுயாட்சி என்பது தமிழ் மண்ணின் நீண்ட கால ஆதார நம்பிக்கை. அண்ணா அளித்த ‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற சித்தாந்தத்தின் வழித் தோன்றலான திமுக அரசு, மற்ற மாநிலங்களை இந்தப் பெரும் பணிக்குத் திரட்டும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

காத்திருக்கும் பணிகள்

தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வியில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறையக் காத்திருக்கின்றன. அரசுப் பள்ளிகளின் தரம் பெருமளவு உயர்த்தப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள்தான் மக்கள் பள்ளிகள். தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் உள்கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், நிர்வாக முறை ஆகியவற்றில் மிகவும் தரம் குறைந்துள்ளன. பெரும்பாலான பெற்றோர், தனியார் பள்ளிகளை நாடிச்செல்வதற்கு இதுவே பிரதானக் காரணம். டெல்லி, கேரளம் போன்ற மாநிலங்கள் அரசுப் பள்ளிகளின் தரம் சிறப்பதற்குப் பல திட்டங்களை நிறைவேற்றியதால், இன்று மக்கள் மத்தியில் பெரும் புகழையும் ஆதரவையும் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தை நாம் அடைய வேண்டும். ‘கல்வி உரிமைச் சட்டம் – 2009’ வலியுறுத்தும் தர வரைவுகள் பலவும் தனியார் பள்ளிகளிலும்கூடக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சட்டப்படியான தரமானது அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

- வே.வசந்திதேவி, தலைவர், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம். தொடர்புக்கு: vasanthideviv@gmail.comதமிழக அரசின் முன்னுள்ள சவால்கள்பள்ளிக்கல்விSchool educationபள்ளிக்கல்வித் துறைNEETபள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x