Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகள்…ஏமாற்றங்கள்…

தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக, இயற்றப்படும் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதை முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை வாயிலாக அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது. அதே நேரத்தில், தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பல வாக்குறுதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் எண்ணத்தில் இல்லை என்பதும் தெரிகிறது. பெட்ரோல் விலைக் குறைப்பு, எரிவாயு மானியம், மாதம்தோறும் மின்கட்டண நிர்ணயம், கலைஞர் உணவகங்கள், இரவுநேரக் காப்பகங்கள், ஆறுகள் பாதுகாப்புத் திட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம், மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள், கல்விக் கடன்கள் தள்ளுபடி, மாநகர எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடிகள் நீக்கம் உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புக்குரிய பல வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகளே இந்த உரையில் இல்லை.

சுயாட்சி பெற்ற மாநில அரசுகளால் இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்துவது எனும் திமுகவின் கொள்கையை இந்த உரையிலும் பார்க்க முடிகிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கோரும் தனிச்சட்டம் இயற்றுவதே தமிழக அரசின் முடிவு என்று தெளிவாகத் தெரிகிறது. இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்றுக்கொள்ளுதல், கச்சத்தீவு மீட்பு, தமிழகத்திலுள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட மற்ற அனைத்து விஷயங்களிலும் வழக்கம்போல நீண்டதொரு கோரிக்கைப் பட்டியலை மட்டுமே பார்க்க முடிகிறது. பெருந்தொற்றுச் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், ஆளுநர் உரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள அரசாணை எண் 293, முந்தைய திமுக ஆட்சியின்போது 2009-ல் வெளியான அரசாணையின்படி, அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை ஊதிய உயர்வு வாய்ப்புகளுக்கு மாறாக, அவர்களில் சிலருக்கு மட்டும் ஊதியப் படிகளை அளித்திருக்கிறது.

பொதுவாக, ஆளுநர் உரையானது அடுத்து வெளிவரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக்கான முன்னறிவிப்பாக அமையும். கரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த முறை அரசியல் கொள்கை விளக்கமாக மட்டுமே அமைந்துவிட்டது. மாநில அரசை அழுத்திக்கொண்டிருக்கும் நிதிச்சுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. மாநிலத்தின் நிதிநிலை குறித்து அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் வெள்ளை அறிக்கை அதை இன்னும் தெளிவுபடுத்தக்கூடும். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உலகத்தின் தலைசிறந்த மேம்பாட்டுப் பொருளியலாளர்கள் இடம்பெறவுள்ளனர் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் மாநில வளர்ச்சிக் குழுவுக்குப் பொருளியலாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொருளியலில் நிபுணத்துவம் பெற்றவர்களின் வழிகாட்டலோடுதான் இந்த அரசு செயல்படுகிறது என்பதே மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் செய்தி. ஆளுநர் உரையில் கவனத்தை ஈர்த்திருப்பதும் அதுவாகத்தான் இருக்கிறது. ஏ.பி.வாஜ்பாய் காலத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றிய எஸ்.நாராயணன், மேம்பாட்டுப் பொருளியலாளர்களான ழீன் தெரெசே, எஸ்தர் டப்லோ தவிர ஏனையவர்கள் தமிழகச் சூழலின் கள நிலவரத்தை நெருக்கமாக அறியாதவர்கள் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. தமிழகத்தை ஆய்வுக் களமாகக் கொண்ட பொருளியல் அறிஞர்களையும் ஆலோசனைக் குழுவில் உள்ளடக்குவது குறித்து யோசிக்க இன்னமும்கூட அவகாசமிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x