Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

முதல்வரின் டெல்லி பயணம் சொல்லும் சேதி

ரவிக்குமார்

தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பொறுப் பேற்றதற்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முதல் முறையாக மு.க.ஸ்டாலின் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த 25 தலைப்பிலான கோரிக்கைகளை விரிவான ஆவணமாகப் பிரதமரிடம் சமர்ப்பித்திருக்கிறார். முதல்வரும் பிரதமரும் சந்தித்துக்கொள்வது இயல்பானதுதான் என்றாலும், இந்தச் சந்திப்பு குறித்துப் பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்குக் காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதற்கு முன்பும் திமுக கடைப்பிடித்துவந்த பாஜக எதிர்ப்புதான். மாநில உரிமைகள், தமிழர் நலன் முதலானவற்றை முன்னிலைப்படுத்தி திமுக மேற்கொண்ட பாஜக எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு ஒப்புதல் அளித்துதான் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை இப்போது ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், இந்தச் சந்திப்பு முதல்வருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு என்பதைக் காட்டிலும், எதிரெதிர் கருத்து நிலைகளைக் கொண்ட இரு தலைவர்களின் சந்திப்பாகவே பார்க்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கைகளில் பெரும்பாலானவை திமுகவின் கொள்கைப் பிரகடனமாகவே இருந்தன. நீட் தேர்வை, புதிய கல்விக் கொள்கையை ரத்துசெய்ய வேண்டும்; மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும் முதலானவற்றைக் கோரிக்கைகள் என்று பார்ப்பதைவிடவும் பாஜக அரசின் கொள்கைகளுக்குத் தமிழ்நாட்டின் எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பதாகவே பார்க்க வேண்டும். செங்கல்பட்டு, ஊட்டியில் தடுப்பூசித் தயாரிப்புக்கான அனுமதி; புதிய ஜவுளிப் பூங்காக்கள்; சேலத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்கான அனுமதி; தமிழ்நாட்டில் விமான நிலையங்களின் மேம்பாடு; தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம்; சேதுசமுத்திரத் திட்டம்; கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தன.

வெற்றிகரமான பயணமா?

தமிழ்நாடு முதல்வரின் டெல்லிப் பயணம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைந்தது என்ற கேள்வியை இப்போது அதிமுக தரப்பில் எழுப்புகின்றனர். இந்தப் பயணத்தின் வெற்றியை இந்தக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டனவா, இல்லையா என்பதை வைத்து முடிவுசெய்யக் கூடாது. என்ன விதமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன என்பதை வைத்தே பார்க்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள் தமிழ்நாடு சார்ந்தவையாக மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைகள் தொடர்பான வழக்காகவும் அமைந்திருந்தன. இது பிற மாநில முதல்வர்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் வழிகாட்டுவதாகவும் இருக்கிறது. மாநில உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டில் இந்தியாவிலேயே அதிக விழிப்புணர்வு கொண்ட மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அந்தத் தகுதியைத் தவறவிட்டிருந்தது. இப்போது அதை மீட்டெடுத்திருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய செய்தி.

ஒன்றிய அரசோடு திமுக அரசு எம்மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்பதை ஆராய்வதுபோலவே தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய அரசு எம்மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். கரோனாவைக் கையாள்வதில் ஒன்றிய அரசு சந்தித்திருக்கும் தோல்வியும், விலைவாசி உயர்வும், பொருளாதார வீழ்ச்சியும் பிரதமர் மோடியின் செல்வாக்கில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில், பிரதமரின் செல்வாக்கில் ஏற்பட்டுள்ள சரிவு, பாஜகவுக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்றால்தான் 2024-ல் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது பற்றி பாஜக சிந்திக்க முடியும். எப்படியானாலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை 2019 தேர்தலைப் போல செல்வாக்கான நிலையில் பாஜகவால் சந்திக்க முடியாது.

மாநில அணிசேர்க்கை

தமக்குச் சவாலை ஏற்படுத்துகிற நிலையில் காங்கிரஸ் இல்லை என்று தற்போது அவர்கள் திருப்திப்பட்டுக்கொண்டாலும், காங்கிரஸ் தன்னைச் சீரமைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது. அதுபோலவே பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மாற்றை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி உருவாகாமல் தடுக்க வேண்டியது பாஜகவுக்கு மிக மிக அவசியம். அப்படிப் பார்க்கும்போது பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களில் கருத்தியல் வலிமை கொண்டவராகத் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார் என்பதையும், திமுகவை இந்த அணிசேர்க்கைக்குள் முனைப்பாக ஈடுபடாமல் தடுப்பது தேசிய அளவில் மாநிலக் கட்சிகளின் மாற்று உருவாகாமல் தடுப்பதற்கு அவசியம் என்பதையும் பாஜக நன்றாகவே அறியும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சருடன் ஒரு நல்லுறவைப் பேணுவது ஒன்றிய பாஜக அரசுக்குத் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் ஒருசிலவற்றையாவது ஒன்றிய அரசு நிறைவேற்றக்கூடும். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவதில் பெரிய தடை எதுவும் இல்லை. ஜிஎஸ்டி வரிவருவாயில் பாக்கியைக் கொடுப்பதும் சாத்தியம்தான். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தால் பாஜகவுக்கும் அது அரசியல்ரீதியில் அனுகூலமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணக்கூடும். இவை எல்லாவற்றையும்விட மீனவர்களுக்காகத் தேசிய ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றால், அது கடலோர மாநிலங்கள் எல்லாவற்றிலுமே பாஜகவுக்கு நற்பெயரை ஈட்டித் தரும் என்பதால் அதையும்கூட நடைமுறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

கோரிக்கைகளின் நோக்கம்

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாட்டின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாது என்பது தெரிந்தேதான் அவற்றை முதல்வர் முன்வைத்திருக்கிறார். அதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரானது என்பதை மக்களுக்கு உணர்த்துவது தமிழ்நாட்டின் முதல்வருடைய நோக்கமாக இருக்கலாம்.

2024 வரை தமிழ்நாட்டுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க ஒன்றிய பாஜக அரசு நிச்சயம் விரும்பாது. இந்த நிலையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை முன்வைத்து, அவற்றைப் பெறுவதில் கவனம் செலுத்துகிற அதே நேரத்தில், கருத்தியல் தளத்தில் பாஜக எதிர்ப்பை திமுக ஒருபோதும் கைவிடாது என்பதே முதல்வர் அளித்த கோரிக்கைகளின் சாரம். உறவுக்குக் கை கொடுப்பதைவிட உரிமைக்குக் குரல் கொடுப்பதையே தமிழ்நாட்டு மக்களும் விரும்புகிறார்கள் என்பதை அவர் அறியாதவரல்ல. ஒரு முதலமைச்சராக ஒன்றிய அரசின் நண்பனாகவும், திமுக தலைவராக மாநில உரிமைப் போராளியாகவும் இருப்பது எப்படி என்பதைத் தமிழ்நாட்டு முதல்வர் தனது தந்தையிடம் நன்றாகவே பயின்றிருக்கிறார். அந்தப் பாதையில்தான் அவர் செல்வார் என்பதே இந்தப் பயணம் உணர்த்தும் செய்தி.

- ரவிக்குமார், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்.

தொடர்புக்கு: writerravikumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x