Published : 21 Jun 2021 03:13 am

Updated : 21 Jun 2021 05:48 am

 

Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 05:48 AM

ஒரு கிராமத்துல ஏழு ஸ்டாலின்!

communist-names

சேலம் மாவட்டத்தின் சிபிஐ செயலாளர் மோகனின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ், தமிழ்நாட்டைத் தாண்டி இந்திய அளவிலும் பிரபலமாகிவிட்டது. மணமக்களின் பெயர்கள் மம்தா பானர்ஜி, சோசலிசம். மணமகனின் சகோதரர்கள் பெயர்கள் கம்யூனிசம், லெனினிசம்; லெனினிசத்தின் மகன் பெயர் மார்க்சிசம். பொதுவுடைமை இயக்கத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு இப்படிக் கொள்கை சார்ந்த பெயர்களைச் சூட்டுவது வழக்கம். இயக்கம் செல்வாக்குப் பெற்ற சில ஊர்களில் பெரும்பாலான பெயர்களில் சிவப்பு அடையாளங்கள் சேர்ந்துவிடும். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த ஆம்பலாப்பட்டு அதற்கு ஓர் உதாரணம்.

ஆம்பலாப்பட்டு கிராமத்தில் ஏழு பேருக்கு ஸ்டாலின் என்று பெயர். இன்னும் ஏழு பேருக்கு லெனின் என்று பெயர். ஆறு பேர் கார்ல் மார்க்ஸ். ஏங்கெல்ஸ் என்ற பெயரும் உண்டு. ஒன்பது பேர் ஜோதிபாசு. ஜீவானந்தம் பெயர் எட்டு பேருக்கு. ஜீவா என்பது மட்டும் நால்வருக்கு. மாஸ்கோ 3, காஸ்ட்ரோ 4. ஊர்கூடி அடைக்கலம் கொடுத்த போராளியான இரணியன் மட்டுமின்றி, அவரோடு உயிரிழந்த ஆம்பல் ஆறுமுகத்தின் பெயரும் சிலருக்கு உண்டு. தியாகி ஆறுமுகத்தின் நினைவுத் தூண்தான் ஆம்பலாப்பட்டின் அடையாளமே.


புரட்சிதாசன் என்ற பெயரில் மூன்று பேர் இருக்கிறார்கள். செவ்வியன், செங்கொடி என்றும் சிலருக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குருசேவ், மாசேதுங், அலெண்டே என்று சர்வதேச கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய, தமிழகத் தலைவர்களின் பெயர்களும் நிறைய பேருக்குச் சூட்டப்பட்டுள்ளன. அஜாய்குமார் கோஷ், டாங்கே, ரணதிவே, பூபேஷ் ஆகிய பெயர்களில் தலா இரண்டு பேர் இருக்கிறார்கள். பகத்சிங் பெயரை பகவத் சிங் என்று சூட்டுவது வழக்கமாக இருக்கிறது. கல்யாணசுந்தரம் என்ற பெயரில் பத்து பேருக்கு மேல் இருக்கிறார்கள். எம்.கல்யாணசுந்தரம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று இரண்டு பேருக்கும் பொதுவான பெயர் என்பதால், அந்தப் பெயர் அதிகமாக இருக்கிறது. பாலதண்டாயுதம், தங்கமணி, ராமமூர்த்தி, பரதன், கோபு தொடங்கி பாண்டியன், மகேந்திரன் வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.

பெண்களின் பெயர்களும் விதிவிலக்கல்ல. ரஷ்யா என்ற பெயர் மட்டும் ஆறு பேருக்கு வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவாணி என்ற பெயர் மூவருக்கு. புரட்சி என்ற முன்னொட்டுடன் புரட்சிவாணி மூவர். புரட்சி ரமா, புரட்சி பாரதி ஆகிய பெயர்களும் உண்டு. டானியாவும் வாலன்டீனாவும் சற்றே அதிகம். தவிர செவ்விழி, செவ்வானம், செங்கனி, செம்மலர் என்ற பெயர்களும் உண்டு. மார்க்ஸ் என்ற பெயரைப் போலவே அவரது மனைவி ஜென்னியின் பெயரும் சில பேருக்கு வைக்கப்பட்டுள்ளது. கியூபாராணி என்பது போன்ற வித்தியாசப் பெயர்களும் உண்டு.

கீழத்தஞ்சை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாகவே இருந்த காலம் ஒன்று உண்டு. இன்றும் கோட்டூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருமருகல் ஆகிய ஒன்றியங்களில் பல ஊர்கள் இப்படித் தலைவர்களின் பெயர்களைக் கொண்டவர்களால் நிறைந்திருக்கின்றன. தான் பின்பற்றும் தலைவரின் பெயரைக் குழந்தைக்கும் சூட்டி மகிழும் வழக்கம் அப்பூதியடிகள் காலத்திலேயே ஆரம்பமானதுதான். திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் அதை இன்னும் பரவலாக்கியிருக்கிறது. பொதுவுடைமை இயக்கமும் அந்த வழக்கத்திலிருந்து விலகவில்லை. ஊர்ப் பெயர் ஆராய்ச்சிகளைப் போல ஊர்களில் உள்ள பெயர்களையும் ஆராயலாம். அது சமூக அரசியல் வரலாறாக விரிவுபெறும் சாத்தியங்களைக் கொண்டது.ஒரு கிராமத்துல ஏழு ஸ்டாலின்!கம்யூனிசம் லெனினிசம்மார்க்சிசம்ஸ்டாலின்லெனின்கார்ல் மார்க்ஸ்ஆம்பலாப்பட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x