Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

கோயில்களில் தமிழ் அர்ச்சனை- ‘தி இந்து’வுடன் அரை நூற்றாண்டுப் பயணம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அவ்வப்போது இந்த விஷயம் மக்களிடம் கவனம் பெற்றுப் பேசுபொருளாகும். இப்போது, இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் கூறியிருப்பதன் மூலம் இது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. ‘கோயில்களில் தமிழில் அர்ச்சனை’ என்ற விவகாரத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பாரபட்சமற்ற வகையில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைக் கோவையாகத் தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம். ‘தமிழ் அர்ச்சனை’ கோரிக்கையும் அதற்கான எதிர்வினைகள், தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் நிலைப்பாடுகள் ஆகியவை கடந்த அரை நூற்றாண்டில் எந்த வகையில் மாற்றம் அடைந்துள்ளன என்பதை அறிய இந்தத் தொகுப்பு உதவும்.

1955-ல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்துள்ளன. அதற்குத் தென்னிந்திய அர்ச்சகர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுபற்றி அப்போது ‘தி இந்து’வில் வெளியான செய்தி. ‘‘சென்னையில் தென்னிந்திய அர்ச்சகர்கள் சங்கத்தின் உயர் நிலைக்குழு கூட்டம் நடந்தது. இதில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை இருப்பதுபோலத் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திலேயே அர்ச்சனைகள் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.’’ (‘தி இந்து’ - 10.05.1955)

அகோபில மடத்தின் அப்போதைய ஜீயர் அழகிய சிங்கர் சுவாமிகள் தமிழ் வழி அர்ச்சனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ...‘‘குடவாசல் அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் பக்தர்களிடம் உரையாற்றிய அழகிய சிங்கர் சுவாமிகள், நமது முன்னோர்கள் ஆகம முறைப்படி மந்திரங்களை உருவாக்கியுள்ளனர். அவற்றை மொழிபெயர்க்கத் தேவையில்லை. பஞ்சாக்ஷசரம் (சிவாயநம), அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய) போன்றவற்றைப் புரிந்துகொள்வதற்கு ஒருவருக்குப் பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை. மந்திரங்களை மொழிபெயர்த்தால் அதன் முக்கியத்துவமும் சக்தியும் போய்விடும்’’ (‘தி இந்து’ - 05.05.1955)

அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மட்டுமின்றி காமராஜர் தலைமையிலான அப்போதைய தமிழக அரசின் பார்வையும் தமிழ் அர்ச்சனைக்கு எதிராகவே இருந்துள்ளது. 1961-ல் முதல்வராக காமராஜர் இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் இப்படிக் கூறுகிறார்…

“கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்றது. அர்ச்சனை என்பது இறைவனின் பல்வேறு பெயர்களைக் கூறிப் போற்றுவது. ஒருசிலரின் விருப்பத்துக்காக இந்தப் பெயர்களை மொழிபெயர்க்க முடியாது. அவர்களது நோக்கம் பாரம்பரியமாக இப்போது இருக்கும் நடைமுறைகளுக்கு எதிராகவோ, பழிவாங்கும் நோக்கத்துடனோ இருக்கக் கூடாது. மக்களிடம் பிரிவையும் குழு விரோதத்தையும் ஏற்படுத்தும் முயற்சி வருந்தத்தக்கது. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூச்சலிடுவதால் தமிழ் மொழிக்கு எந்த சேவையும் செய்ய முடியாது.” (‘தி இந்து’ - 05.07.1961)

இதனிடையே, 1955-ல் குன்றக்குடி மடத்தின் அப்போதைய ஆதீனம் தெய்வசிகாமணி அருணாசல தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருந்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். ‘‘கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்ப்பவர்கள் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்தால், மக்களிடம் சம்ஸ்கிருத மொழிக்கு எதிரான உணர்வு ஏற்படும். அதனால், தமிழகக் கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழும்.’’ (‘தி இந்து’ 14.05.1955)

பின்னர், 1969-ல் லால்குடியில் பூவாளூரில் உள்ள திருமூலநாத சுவாமி கோயிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இதற்கான விழா அப்போதைய திருச்சி மாவட்ட திமுக செயலாளரும் இப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவுமான அன்பில் தர்மலிங்கம் தலைமையில் நடந்துள்ளது. இந்தத் தமிழ் அர்ச்சனை தொடக்க விழாவில், அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.வி.சுப்பையா கலந்துகொண்டார். அவர் கூறுகையில், ‘‘தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் விரும்பினால், அதற்கு அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது. பக்தர்கள் கோரிக்கை வைத்தால், மற்ற கோயில்களிலும் தமிழ் அர்ச்சனை முறை விரிவுபடுத்தப்படும்.’’ (‘தி இந்து’ - 08.12.1969)

இந்நிலையில், 1971-ல் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அப்போதைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் எம்.கண்ணப்பன் தெரிவித்தார். சட்டமன்றத்தில் அமைச்சர் கண்ணப்பன் கூறுகையில், ‘‘1971 ஆகஸ்ட் 15-க்குள் தமிழ் அர்ச்சனையை அறிமுகப்படுத்த அனைத்துக் கோயில்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நடைமுறையில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணிக்குமாறு துணை மற்றும் உதவி ஆணையர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார். (‘தி இந்து’ - 13.07.1971)

கோயில்களில் தமிழ் அர்ச்சனை அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, கோயில்களில் தமிழில் அர்ச்சனை அறிமுகம் செய்யப்பட்டதை ஆதரித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி பேசுகையில், ‘‘கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதை விமர்சிக்கும் சிலர், சம்ஸ்கிருதம் தெய்வீக மொழி. அதனால், அர்ச்சனை செய்வதற்கு சம்ஸ்கிருத மொழியே ஏற்றது என்று கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது. தமிழும் தெய்வீக மொழிதான். பழங்காலத்திலேயே தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாராயணங்கள் தமிழில்தான் இயற்றப்பட்டன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கோயில் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்பட்டன என்ற வாதத்தையும் ஏற்க முடியாது’’ என்றார், (‘தி இந்து’-28.07.1971)

இந்நிலையில், கோயில்களில் தமிழ் அர்ச்சனை அறிமுகம் செய்யும் இந்து சமய அறநிலையத் துறையின் சுற்றறிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மடாதிபதிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் எதிராஜ ராமானுஜ ஜீயர் சுவாமிகள், காஞ்சிபுரம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மனு தாக்கல் செய்தனர். எதிராஜ ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தனது மனுவில், ‘‘கோயில்களில் வழிபாடு தொடர்பான விஷயங்கள் ஆகம மற்றும் சாஸ்திரங்களின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. சம்ஸ்கிருத மந்திரங்களும் ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்களும் கோயில்களில் ஓதப்படுகின்றன. குறைந்தது 2,000 ஆண்டுகளாகக் கோயில்களில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இப்போது அறநிலையத் துறை அதிகாரிகள் அழுத்தத்தின் பேரில் சம்ஸ்கிருத மந்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. அது சம்ஸ்கிருத மந்திரங்களின் அதே அர்த்தத்துடனும் ஒலி அமைப்புடனும் இருக்க முடியாது. பக்தர்கள் தங்கள் நலனுக்காக இறைவனுக்குச் செய்யும் அர்ச்சனை சம்ஸ்கிருதத்தில் இல்லாமல் இருந்தால் அந்த மந்திரங்கள் பலன் தராது” என்று கூறியிருந்தார். (‘தி இந்து’ – 25.09.1971)

இவ்வழக்கில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.வீராசாமி, நீதிபதி வரதராஜன் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘‘மத நடைமுறைப் பழக்கங்களில் சட்ட விரோதமாக தமிழ் அர்ச்சனை அறிமுகம் செய்யப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை. அர்ச்சனை என்பது மத நடைமுறைகளில் ஒன்றுதான். ஆனால், மொழி என்பது மதத்தின் ஒரு பகுதியல்ல. மேலும் சுற்றறிக்கையில் சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று கூறப்படவில்லை’’ என்று கூறப்பட்டது (‘தி இந்து’ – 12.01.1974)

இந்தத் தீர்ப்பு வந்த 3 மாதங்களில் புதிய திருப்பமாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களுக்கு மற்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அந்தச் சுற்றறிக்கையில், ‘சில கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதில்லை என்பது கவனத்துக்கு வந்துள்ளது. கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு அர்ச்சகர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தால், அந்த அர்ச்சகருக்குப் பதிலாக ஓதுவார்களை நியமித்துத் தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்படும்போது ஓதுவார்கள் பாராயணம் சொல்லச் சொல்ல அர்ச்சகர்கள் பூ மற்றும் குங்குமத்தைக் கடவுள் உருவத்துக்குச் சேர்க்கலாம். அதுபோன்ற சமயங்களில் அர்ச்சகருக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஓதுவாருக்கு அளிக்க வேண்டும்.’’ என்று கூறப்பட்டது. இந்தச் செய்தி 20.04.1974 ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது.

மேலும் அந்தச் செய்தியில், ‘தி இந்து’ தன் கருத்தாக, ‘பாரம்பரியமாகக் கோயில்களில் சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படும். பின்னர், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, தமிழில்தான் அர்ச்சனை செய்யப்படும் என்றும் பக்தர்கள் விரும்பினால் சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யலாம் என்றும் அரசு வலியுறுத்தியது. தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற அரசின் இப்போதைய சுற்றறிக்கையும் தமிழில் அர்ச்சனை செய்யாத அர்ச்சகர்களுக்குப் பதில் ஓதுவார்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலும் சம்ஸ்கிருதத்தை ஒழிப்பதற்கான மேலும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது’ என்று தெரிவித்திருந்தது.

கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் சுற்றறிக்கையை எதிர்த்து ராமேஸ்வரம் மகான் துளசிபாபா மடத்தின் மடாதிபதி கல்யாண் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி டி.ஜி.பலேகர், கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். (‘தி இந்து’ – 22.06.1974)

இந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசின் கொள்கையை அறநிலையத் துறை அதிகாரிகள் தவறாகப் புரிந்துகொண்டனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. (‘தி இந்து’ – 01.08.1974)

மேலும், அறநிலையத் துறை அதிகாரிகளின் சுற்றறிக்கையை ரத்துசெய்ய உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் கோவிந்த் சுவாமிநாதன் கூடுதல் மனு தாக்கல் செய்தார். சுற்றறிக்கையை ரத்துசெய்ய அரசு திட்டமிட்டுள்ள அந்த உத்தரவின் நகலை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை அமல்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்று அறிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர். (‘தி இந்து’ – 07.08.1974)

இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.சோந்தி மற்றும் உத்தர பிரதேசம், ஆந்திரம், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், தமிழில் மட்டுமே அர்ச்சனை என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். (‘தி இந்து’- 24.08.1974)

இந்நிலையில், தமிழில் மட்டுமே அர்ச்சனை என்ற உத்தரவுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்கள் விசாரித்து முடிக்கப்படும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் பாரம்பரியமாகச் செய்யப்பட்டுவந்த அர்ச்சனை முறையைப் பின்பற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழில் மட்டுமே அர்ச்சனை என்ற இந்து சமய அறநிலையத் துறையின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்படும் என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் கோவிந்த் சுவாமிநாதன் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததையடுத்து, நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். (‘தி இந்து’ – 27.08.1974).

பின்னர், எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், கோயில்களில் தமிழ் அர்ச்சனையை வலியுறுத்தினார். சென்னையில் ராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் நடந்த வள்ளலார் – மகாத்மா காந்தி விழாவில் பேசிய ஆர்.எம்.வீரப்பன், ‘‘தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகர்களை அரசு வலியுறுத்த முடியாது. இருந்தாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோர பக்தர்களுக்கு உரிமை உள்ளது. தமிழில் அர்ச்சனை முறையைப் பிரபலமாக்க முயற்சிகள் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது’’ என்றார். (‘தி இந்து’ 03.10.1980)

இந்தச் சூழலில் முக்கிய மைல்கல்லாக தமிழ் அர்ச்சனையை எதிர்க்கவில்லை என்று 1982-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள் அறிவித்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் 1982 ஜூன் 16-ம் தேதி முதல் தமிழிலேயே அர்ச்சனைகள் செய்யப்படும் என்று அறங்காவலர் குழு அறிவித்தது. புதிய விதிகளின்படி சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கெனத் தனியான அர்ச்சனை டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்றும் அறிவித்தது. தமிழில் அர்ச்சனை செய்வது என்ற முடிவை அர்ச்சகர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்த பிறகே எடுக்கப்பட்டதாகவும் அறங்காவலர் குழு தெரிவித்தது. தமிழிலேயே அர்ச்சனை என்ற அறங்காவலர் குழுவின் முடிவுக்கு அர்ச்சகர்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் பக்தர்கள் எந்த மொழியில் விரும்புகிறார்களோ அந்த மொழியில் அர்ச்சனை செய்கிறோம் என்றும் மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் சங்கமான ஆதிசைவ சிவாச்சாரிய சங்கம் அறிவித்தது. தமிழ் அர்ச்சனையை அர்ச்சகர்கள் எதிர்ப்பதாகச் சில பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறு என்றும் தமிழ் அர்ச்சனையை அர்ச்சகர்கள் ஆதரிப்பதாகவும் அறங்காவலர் குழுவிடம் கடிதமும் அளித்தது.

ஆண்டுகள் உருண்டோட, 1998-ல் அப்போது மீண்டும் முதல்வராக இருந்த கருணாநிதி ‘சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று தெரிவித்தார். சட்டமன்றத்தில் தமிழ் அர்ச்சனை தொடர்பாக நடந்த சுவாரஸியமான விவாதத்தில் கருணாநிதி இதைத் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.பாலகிருஷ்ணன், ‘‘கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இந்த விவாதத்தில் பங்குபெற வேண்டும்’’ என்று கூறினார். இதற்குப் பதிலளித்த கருணாநிதி, ‘‘பெரியாரின் கொள்கைகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘தமிழ் வழிபாட்டு மொழியாக இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். வேறு மொழிகளில் கடவுளை வழிபடக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை’’ என்றார். (‘தி இந்து’ – 27.11.1998)

இப்படியாக, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோயில்களில் தமிழ் அர்ச்சனை தொடர்பான அரசின் முடிவுகள், சட்டங்கள், உத்தரவுகள், வழக்குகள், வாதப் பிரதிவாதங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், மக்களின் கருத்துக்கள் என்று சென்றுகொண்டிருக்கும் இந்த நீண்ட பயணத்தில் இப்போது, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ‘தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். (‘தி இந்து’ – 13.06.2021)

இந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான காலகட்டத்தில் கோயில்களில் தமிழ் அர்ச்சனை குறித்து 1955-ல் அப்போது குன்றக்குடி மடத்தின் மடாதிபதியாக இருந்த தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முக்கியமான கருத்தைப் பதிவுசெய்துள்ளார். 1955-ம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி நகராட்சி மன்ற அரங்கில் அனைத்திலும் தமிழை வலியுறுத்திய ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.வின் உருவப் படத்தை குன்றக்குடி மடாதிபதி திறந்து வைத்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் இப்படிப் பேசுகிறார்…

“கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று கூறவில்லை.… நான் சம்ஸ்கிருதத்தையோ அதன் பண்பட்ட இலக்கியத்தையோ வெறுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் உலகில் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நியாயமான இந்தக் கோரிக்கையை நிராகரிக்கவோ தவறாகப் புரிந்துகொள்ளவோ கூடாது. சைவ சமயத்தின் மிகச் சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவராக திரு.வி.க. விளங்கினார். அவரது செய்தியைக் கடந்த தலைமுறையின் தலைவர்களும் மடாதிபதிகளும் கேட்டிருந்தால் தி.க., திமுகவால் ஊக்குவிக்கப்படும் மதத்துக்கு எதிரான, கடவுளுக்கு எதிரான விதத்தில் செயல்படும் இயக்கங்கள் அநேகமாக இருந்திருக்காது. திரு.வி.க.வின் குரலைக் கேட்காததால், அதன் விளைவுகள் என்ன என்பது அனைவரும் அறிந்ததே!’’ (‘தி இந்து’ 25.05.1955).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x