Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

இனஅழிப்பில் ஈடுபடுகிறதா சீனா?

நிக்கோலஸ் கிறிஸ்டோஃப்

உய்கர் பூர்வகுடி முஸ்லிம்களை சீனா இனஅழிப்பு செய்கிறது என்று அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்த ஆண்டில் அறிவித்தாலும் அதனால் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்தச் செயல்படாமையானது உச்சபட்சக் குற்றமான இனஅழிப்பின் பயங்கரத்தைக் கண்டுகொள்ளாமல் விடுகிறது. நம் கண் முன்னே வெளிப்படும் நிகழ்வுகளைப் பார்த்து நாம் மரத்துப் போகாமல் இருப்பதற்கு நான் ஒரு உய்கர் பெண்ணை அறிமுகப்படுத்துகிறேன்: தன்னை ‘நான்சி’ என்று அழைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவர் தற்போது அமெரிக்காவில் பத்திரமாக இருந்தாலும் தான் வெளிப்படையாகப் பேசுவது தனது பெற்றோரைப் பாதித்துவிடுமோ என்று அரண்டுபோயிருக்கிறார்.

சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஜின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினர்தான் உய்கர்கள். நவீன வதை முகாம்களில் பத்து லட்சம் உய்கர் மக்கள் அடைக்கப்பட்டிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதில் அதிகம் கவனிக்கப்படாத விஷயம் எதுவென்றால், உய்கர் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள்தான்.

மகப்பேறு மருத்துவரான தன் உறவினர் பற்றி நான்சி கூறுகிறார். இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு வதைமுகாமுக்கு அந்த மருத்துவர் அனுப்பப்பட்டிருக்கிறார். அங்கே இரண்டு பெண்களின் உடல்நலனை முன்னிட்டு அவர்களின் கருத்தடைச் சாதனத்தை அகற்றியதால் அந்த மருத்துவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது மற்றுமொரு உறவினர் ஒரு உய்கர் கிராமத்தில் குடும்பக் கட்டுப்பாடு பணியாளராக இருந்தார். அந்தக் கிராமத்தில் அனுமதி இல்லாமல் ஒரு பெண் கர்ப்பமடைந்ததால் நான்சியின் உறவினருக்கு வதைமுகாமில் இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் கர்ப்பிணியின் கணவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று தான் கேள்விப்பட்டதாகக் கூறும் நான்சி அந்தப் பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் என்ன ஆனது என்பது பற்றித் தனக்குத் தெரியாது என்கிறார்.

நான்சி கூறுவதை உறுதிப்படுத்துவது மிகவும் கடினம், ஆனால் ஜின்ஜியாங்கில் நடைபெற்றுவரும் ஒடுக்குமுறையை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், மனித உரிமைக் குழுக்கள் போன்றவற்றின் பதிவுகளுடன் நான்சி கூறுவது ஒத்துப்போகிறது.

ஆக, என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? கடந்த காலத்தில் அவ்வப்போது வன்முறையில் ஈடுபட்ட பிரிவினைவாதக் குழு ஒன்றால் சீனா எச்சரிக்கையடைந்தது. அதனால், ஹான் சீனர்களின் மக்கள்தொகை மிகுந்த அந்தப் பிரதேசத்தில் உய்கர் மக்கள்தொகையைக் குறைப்பதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டுக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. ‘தெற்கு ஜின்ஜியாங்கின் மக்கள்தொகை அமைப்பை மாற்றியமைப்பதற்கான’ தேவையைப் பற்றியும், ‘உய்கரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான’ தேவையைப் பற்றியும் சீன அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள்.

இதன் விளைவுதான் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும், கருத்தடைச் சாதனத்தைக் கட்டாயமாகப் பொருத்துதலுக்குமான இயக்கம். சீனாவில் கருத்தடைச் சாதனங்கள் பொருத்தப்படுவதில் ஜின்ஜியாங்கில் மட்டும் 80% அளவுக்குப் பொருத்தப்படுகின்றன. இந்தப் பகுதியில் ஒட்டுமொத்த நாட்டின் மக்கள்தொகையில் 2%-க்கும் குறைவானவர்கள்தான் வசிக்கிறார்கள்; உய்கர் முஸ்லிம்கள் வசிக்கும் இரண்டு பெரிய மாவட்டங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 84% அளவுக்குக் குறைந்திருக்கிறது; இந்தத் தகவல்களெல்லாம் அட்ரியன் ஜென்ஸ் என்ற அறிஞருடையவை. உய்கர் முஸ்லிம்களின் மக்கள்தொகையை வரும் ஆண்டுகளில் குறைப்பதற்கான சீனாவின் திட்டத்தை இவர் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

இது ஜின்ஜியாங்கின் முஸ்லிம் சிறுபான்மையினரிடம் மனிதத்தன்மை நீக்கும் செயல்திட்டத்தின் ஒரு பகுதி. பன்றிக்கறி உண்ணுதல், மது அருந்துதல் ஆகிய செயல்களை மேற்கொண்டு முஸ்லிம்கள் தங்கள் மதநம்பிக்கையைக் கைவிடும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு சித்தாந்தத் திணிப்பு செய்வதற்காக உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். உய்கர் ஆண்கள் சிறைக்கு அனுப்பப்படும்போது, அவர்கள் வீட்டை ஆக்கிரமிக்க ஹான் சீனர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

சீனா உய்கர் முஸ்லிம்களைக் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யவில்லை; ஆகவே, இது வழக்கமான அர்த்தத்தில் இனஅழிப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால், இனஅழிப்பு தொடர்பான 1948-ம் ஆண்டின் உடன்படிக்கையின் சட்டப்படி, குறிப்பிட்ட இனக்குழுவின் பிறப்பு எண்ணிக்கையை ஒடுக்கும் சீனாவின் நடவடிக்கைகள் இனஅழிப்பு என்ற வரையறைக்கு உட்படுபவையாகவே தோன்றுகின்றன.

உய்கர்களின் ஆதரவை நாடிய நிலையிலிருந்து அவர்களை நசுக்கும் நிலைக்கு சீன அரசு எப்படி வந்தது என்பதை நான்சியின் சொந்த வாழ்க்கைப் பயணம் பிரதிபலிக்கிறது. அவருடைய குடும்பம் மதப் பற்று கொண்டதல்ல. அவருடைய அம்மா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அரசுப் பணியில் உயர் இடத்தில் இருந்தார். அவர்களின் குடும்பமும் அமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து இயங்கத் தயாராகவே இருந்தது. நான்சி மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, கிழக்கு சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அங்குள்ளவர்களோடு இரண்டறக் கலப்பதற்காகவும் செல்வாக்கு கொண்ட உய்கர் முகவராக அவரை மாற்றுவதற்காகவும் இப்படி அனுப்பப்பட்டார்.

ஆனால், ஹான் சீனர்களுக்கும் உய்கர்களுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது. நன்கு படித்த உய்கர்களுக்குக்கூட சீனாவில் நல்ல வேலைகள் கிடைக்காத நிலையால் விரக்தியடைந்த நான்சி, கடைசியில் துருக்கியில் ஒரு வேலையில் சேர்ந்தார். அந்த நேரத்தில் அதை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால், 2016-ல் சீனா தனது கிடுக்கிப்பிடியை இறுக்க ஆரம்பித்த பிறகு, உய்கர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட்டது.

நான்சி துருக்கியில் இருந்தபோது அவரது பெற்றோர் அவரை அங்கே சந்தித்ததால், மறுகற்றலுக்காக அவர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். முகாம்களிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதும் நான்சியை சீனாவுக்குத் திரும்பும்படி ஒரு குரல் தகவல் அனுப்பினார்கள். “உன் நாடு உன்னை நேசிக்கிறது. நீ இங்கே இருக்க வேண்டும் என்று உன் நாடு விரும்புகிறது” என்பதுதான் அந்தக் குரல் தகவல். உடனேயே நான்சிக்குச் சந்தேகம் ஏற்பட்டது, நான்சி கர்ப்பமாக இருப்பதால் அது நாடு திரும்புவதைக் கடினமாக்கிவிடக்கூடும் என்று அவர் அம்மா கூறியதும் இரண்டு மடங்கு சந்தேகம் அதிகமானது. உண்மையில் நான்சி கர்ப்பமாக இல்லை. ஆகவே, தன்னை நாடு நோக்கித் திரும்பவைக்கத் தன் அம்மாவை யாரோ ஒருவர் தூண்டுகிறார் என்றும், நான்சியை நாடு திரும்ப வேண்டாம் என்று மறைமுகமாக அவரது அம்மா சமிக்ஞை செய்கிறார் என்றும் நான்சி புரிந்துகொண்டார்.

வதைமுகாம்களில் அடித்துச் சித்ரவதை செய்ததால் நான்சியின் மாமா ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது என்றும், இன்னொரு உறவினர் வதைமுகாமிலேயே உயிரிழந்தார் என்றும் நான்சி கூறுகிறார். ஒன்றுவிட்ட உறவினர்கள் நான்கு பேர் கட்டாய உடலுழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் ஒருவர் பட்டினியிலிருந்து தப்பிப்பதற்கு அவரிடமிருந்து காவலர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்றும் நான்சி கூறுகிறார். இந்தப் பயங்கரங்களுக்கு மத்தியில் உலகம் என்ன செய்ய முடியும்? இதற்கிடையே ஹாங்காங்கின் அழிவையும், கடத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட இரண்டு கனடா பணயக் கைதிகளின் நிலையையும் ஜி ஜின்பிங்கின் முரட்டுத்தனமான நடத்தையையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். அறிவார்ந்த ஒரு எதிர்வினை: அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் ‘இனஅழிப்பு ஒலிம்பிக்’ போட்டிகளைப் பகுதியளவு புறக்கணிக்கலாம்; விளையாட்டு வீரர்கள் மட்டும் கலந்துகொண்டு, அதிகாரத் தரப்பினர் போன்றோர் புறக்கணிப்பு செய்யலாம். இரண்டாவது: நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளில் பருத்தி, சூரியசக்தித் தகடுகள் போன்ற ஜின்ஜியாங் தயாரிப்புகளைத் தவிர்க்கலாம்.

இவையெல்லாமுமே திருப்திகரமானவையோ போதுமானவையோ அல்ல, இவை ஜி ஜின்பிங்கின் நெஞ்சத்தை அசைத்துப்பார்க்காது. ஆனால், இனஅழிப்பு என்று நாம் அறிவிக்கும்போது, நம்மால் அலட்சியமாகவோ ஒன்றும் செய்யாமலோ இருந்துவிட முடியாது.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x