Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

கூடுதல் மாணவர்களுக்குத் தயாராக இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்?

அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14-ல் தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் பெருமளவில் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவதைப் பார்க்க முடிகிறது. பெருந்தொற்றால் வேலையிழப்புகள் அதிகரித்து, பெற்றோர்களின் வருமானம் குறைந்ததே இதற்கான காரணம் என்று அனுமானிக்கப்படுகிறது. தவிர, வேலைவாய்ப்புகளுக்காக நகர்ப்புறங்களில் தங்கியிருந்தவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பியிருப்பதால் குழந்தைகள் பள்ளி மாறுவது தவிர்க்க முடியாதது. ஆனால், நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படித்தவர்கள், ஊரகங்களில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளுக்குச் செல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவதற்குக் காரணம் மிகவும் வெளிப்படையானது. குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடுவதற்குப் பெற்றோர்களிடம் வருமான வாய்ப்புகள் இல்லை. போதிய மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்துப் பேசப்பட்டுவந்த நிலையில், கரோனா பாதிப்புகள் அந்த முடிவுகளைத் தள்ளிப்போட வைத்திருக்கின்றன. அதே வேளையில், கல்விக் கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை என்ற காரணத்துக்காக அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களுக்கு, அவர்கள் முன்பு பயின்ற தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித் தரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்கிறது.

அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் போதுமான ஆசிரியர்கள், வகுப்பறைக் கட்டிடங்கள், பாடத்திட்டங்கள், கற்றல் உபகரணங்கள் என்று உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் கற்பிக்கும் முறை சார்ந்தும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பணியிடைப் பயிற்சிகளின் தேவை மறுக்க முடியாத ஒன்று. தொற்றுக் காலத்தில் பள்ளி மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் ‘கல்வி' தொலைக்காட்சியில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டன. அவை இணையத்திலும் பதிவேற்றப்பட்டன. ஆனால், அந்த வகுப்புகள் மாணவர்களை ஈர்க்கவில்லை என்பதோடு, பெற்றோர்களையும் அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கின்றன. பள்ளிக் கல்வித் துறை 2018-லிருந்து புதிய பாடநூல்களை வெளியிட்டபோதும் அதற்கு முன்பும் மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி வகுப்புகளுடன் ஒப்பிட்டாலே இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள் தெளிவாகிவிடும். இந்தக் கற்பித்தல் குறைபாடுகளை விரைந்து களையும்பட்சத்தில், அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியும்.

கடந்த கல்வியாண்டு முழுவதுமே பள்ளிகள் திறப்பு, தேர்வுகள் அறிவிப்பு குறித்து உறுதியான முடிவெடுக்க முடியாமல் திணறினோம். இயற்கைப் பேரிடர்களின் பாதிப்புகளிலிருந்து வெகுவிரைவில் மீண்டுவிடுவதற்குத் தயாராகிவிட்டோம். ஆனால், கரோனா போன்ற பெருந்தொற்றும், அது கல்வித் துறையில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் இதற்கு முன் அறியாதவை. கடந்த ஆண்டின் அனுபவங்களிலிருந்து தெளிவான திட்டங்களையும் நெகிழ்வான அணுகுமுறைகளையும் வகுத்துக்கொள்ள முடியும். அது வருங்காலத்துக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x