Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

சலுகைகளைவிட அடிப்படை வசதிகள் முக்கியம்!

முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் செல்லும் பாதைகளில் பாதுகாப்புப் பணிக்காகப் பெண் காவலர்களை நிறுத்தக் கூடாது என்று தமிழகக் காவல் துறைத் தலைவர் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. பெண் காவலர்கள் பணியின்போது தாங்கள் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்துத் தொடர்ந்து வலியுறுத்திவந்ததற்கு அரசு செவிமடுத்திருப்பதற்காக மகிழலாம். தொடர்ச்சியாக நான்கைந்து மணி நேரத்துக்குச் சிறுநீர் கழிக்க முடியாத அவஸ்தையோடும், மாதவிடாய் நாட்களின் சிரமத்தோடும் கால்கடுக்க நிற்பதிலிருந்து அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஆசுவாசமாகவும் இதைக் கொள்ளலாம். இது நல்ல முடிவு. ஆனால், இதுவே அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகாது.

ஆண்களைவிடப் பெண்கள் திறமையானவர்களாக இருந்தாலும் மாதவிடாய், மகப்பேறு, மெனோபாஸ் என்கிற மாதவிடாய் நிற்றல் ஆகிய இயற்கையான உடல் மாற்றங்களைக் காரணம் சொல்லி, கீழிறக்கும் எண்ணம் பலரிடம் இருக்கிறது. இந்த மாற்றங்கள் அவர்களின் மனம், உடல் இரண்டிலுமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். அதனால், ஆண்கள் செய்கிற அனைத்து விதமான வேலைகளையும் செய்தே ஆக வேண்டும் என்று பெண்களை நிர்ப்பந்திப்பது அறத்துக்குப் புறம்பானது. எனவே, பெண்கள் இப்படியான சலுகைகளைச் சில நேரம் ஏற்றுக்கொள்ளலாம் என்பதில் தவறில்லை. ஆனால், இதுவே அவர்களின் தகுதிக் குறைவாகப் பார்க்கப்படுவது ஆபத்தானது.

பெண்கள் இதற்கெல்லாம் சரிவர மாட்டார்கள் என்கிற பிற்போக்குச் சிந்தனைதான் பல துறைகளிலும் அவர்களை நுழைய விடாமலோ, பின்னடைவைச் சந்திக்கவோ காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட சில பணிகளிலிருந்து பெண்களுக்கு விலக்கு அளிப்பதன் வாயிலாக அந்தப் பணிகளில் அவர்களின் முன்னுரிமையும் இருப்பும் கேள்விக்குள்ளாக்கப்படும் சாத்தியமும் உண்டு. ஆண்கள் நிறைந்திருக்கிற பல துறைகளில் இன்றைக்கும்கூட ‘முதல் பெண்’ என்கிற அளவிலேயே பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோமே தவிர, அதைப் பரவலாக்குகிற முயற்சிகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இப்படியொரு சூழலில் பெண்களின் கால்களைப் பின்னோக்கி இழுக்கும் வேலையை இதுபோன்ற சலுகைகள் செய்துவிடக்கூடும்.

இவ்வளவு பேர் தேவையா?

முக்கியத் தலைவர்கள் செல்லும் பாதைகளில் மட்டுமல்லாமல் பொதுக்கூட்டம், கலவரம், திருவிழாக்கள், பேரணி, மாநாடு என்று மக்கள் கூடுகிற இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் ‘பந்தோபஸ்த்’ எனப்படும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் காவலர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், நடமாடும் கழிப்பறைகளின் எண்ணிக்கை விகிதம் மிகக் குறைவு. அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்துச் சீரான இடைவெளியில் பராமரிக்க வேண்டும். பெண்களின் மாதவிடாய் நாட்களின் சிரமத்தை எதிர்கொள்ளும் வகையிலான கழிப்பறைகளை வடிவமைப்பது சிறந்த முடிவாக இருக்கும். இவற்றைவிட, முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்காகச் சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான காவலர்களைக் குவிப்பதைத் தவிர்க்கலாம். தொழில்நுட்ப வசதிகள் பெருகியிருக்கும் இந்நாளில் இது சாத்தியம்தான். மக்களின் பிரதிநிதிகள் மக்களோடு மக்களாகச் செல்வதில் தவறில்லை. அதற்குச் சான்றாகத் தமிழக முதல்வர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பல முன்னோடி நடவடிக்கைகளைக் கைக்கொண்டுவரும் இந்த அரசு, இதையும் பரிசீலிக்கலாம்.

அலுவலகங்களின் அவலநிலை

டிஜிபியின் வாய்மொழி உத்தரவைத் தொடர்ந்து, பெண் காவலர்களைப் பற்றிப் பேசுகிறோம். லட்சக்கணக்கான உழைக்கும் பெண்கள், அடிப்படையான சுகாதாரக் கட்டமைப்பு இல்லாமல் சிரமப்படுவது நம் கண்களுக்குப் புலனாவதில்லை. ஆயிரக்கணக்கில் பெண்கள் பணிபுரிகிற இடத்தில் பத்துக்கும் குறைவான கழிப்பறைகளே இருக்கும். அவையும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதில், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என்று எந்தப் பாகுபாடும் இல்லை. ஒருசில நிறுவனங்கள் விதிவிலக்கு. மற்றபடி உள்ளே சென்றாலே குடலைப் புரட்டுகிற அளவுக்குத்தான் பெரும்பாலான அலுவலகங்களில் கழிப்பறைகள் உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஒருவர், தங்கள் அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால் அருகில் இருந்த வீட்டுக்கு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்று கழிவறைத் தொட்டிக்குள் விழுந்து பலியானது நினைவில் இருக்கலாம். அவர் இறந்துவிட்டார் என்பதற்காக மட்டுமே அது நம் கவனத்தை ஈர்த்தது. மற்றபடி பெரும்பாலான பெண்கள் தங்கள் பணியிடங்களில் கழிப்பறை இல்லாத கொடுமையைச் சகித்தபடிதான் இருக்கிறார்கள்.

இவர்கள் எங்கே செல்வார்கள்?

அலுவலகம், தொழிற்சாலை போன்ற முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்று கிறவர்கள் சந்திக்கிற பிரச்சினையைப் போல் இருமடங்குச் சுமையை அனுபவிக்கிறார்கள் முறைசாராப் பணிகளில் இருக்கும் பெண்கள். நம் வீடு தேடி வரும் விற்பனைப் பெண்ணோ, தன்னார்வலரோ, தெரு முழுவதையும் கூட்டிப் பெருக்குபவரோ, கட்டிட வேலை செய்கிறவரோ, காய்கறி, மீன், பூ ஆகியவற்றை விற்கும் பெண்களோ, வணிக வளாகங்களில் சிறு கடைகளில் பணியாற்றுகிறவர்களோ இவர்களெல்லாம் இயற்கை உபாதையைக் கழிக்க எங்கே செல்வார்கள்?

கழிப்பறைக்குச் செல்ல வேண்டுமே என்பதற்காக நாள் முழுவதும் தண்ணீரே குடிக்காமல், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டு அவதிப்படும் பெண்கள் ஏராளம். கெடுவாய்ப்பாகச் சிறுநீரகச் செயலிழப்பும்கூட ஏற்படலாம். மாதவிடாய் நாட்களில் நாப்கினைக்கூட மாற்ற வழியின்றி, வேலைக்கு விடுப்பும் எடுக்க முடியாமல் ஒவ்வொரு மாதமும் நரக வேதனையோடு கழியும் பெண்களின் நிலை, ஆட்சியில் இருப்பவர்களின் கண்களில் ஏன் படுவதே இல்லை? அசுத்தமான கழிப்பறையைப் பயன்படுத்துவதாலும் நீண்ட நேரத்துக்கு நாப்கினை மாற்றாததாலும் பாக்டீரியத் தொற்று முதல் கருப்பைக் கோளாறுகள் வரை ஏற்பட்டு அவதிப்படும் பெண்களின் குமுறல் ஏன் யாருக்கும் கேட்பதில்லை?

சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெண்களின் நிலை இப்படித்தான் என்கிறபோதும் கழிப்பறைப் பயன்பாட்டில் இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்கிறது. ‘வாட்டர் எய்ட்’ அமைப்பு, கழிப்பறைப் பயன்பாடு குறித்து 2017-ல் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில், மக்கள்தொகையில் 56% பேர் கழிப்பறையைப் பயன்படுத்தாத நிலையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. சீனா, வங்க தேசம் உள்ளிட்டவை நம்மைவிட மேம்பட்ட சுகாதாரக் கட்டுமானத்துடன் இருக்கின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட 36 கோடிப் பெண்களுக்குக் கழிப்பறை என்பதே இன்றும் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு மேம்பட்ட சுகாதாரக் கட்டமைப்புடன் இருக்கிறது என்றபோதும் வேலைக்குச் செல்லும் பெண்களின் துயர் தீர்ந்தபாடில்லை.

பணிச்சூழல் அடிப்படை வசதிகளோடும் போதுமான பாதுகாப்புடனும் இருந்தால், காவல் துறை மட்டுமல்ல; வேறெந்தத் துறையிலும் எப்படியான சவால்களையும் பெண்கள் எதிர்கொள்ளத் தயங்கவே மாட்டார்கள். அப்படியான சூழலை அமைத்துத்தருவதுதான் சலுகைகளையும் விலக்கையும்விட அவசியமானது.

- பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x