Last Updated : 15 Jun, 2021 03:12 AM

 

Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

ஜி7: கரோனாவிலிருந்து உலகை விடுவிக்குமா?

ஒரு வாரமாக உலகமே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு நிகழ்வு ஜி7 உச்சி மாநாடு. கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இங்கிலாந்தின் தென்மேற்கில் இருக்கும் கார்ன்வால் கவுன்டியில் உள்ள செயின்ட் ஈவ்ஸ் கடற்கரை நகரத்தில் இந்த மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். கரோனா பின்னணியில் இந்த மாநாட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஜி7 வரலாறு

1970-களின் முற்பகுதியில் எண்ணெய் வர்த்தகத்தால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உலகின் முன்னணிப் பொருளாதாரங்களான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் 1975-ல் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்துச் சந்தித்துக்கொண்டன. அடுத்த ஆண்டு கனடா சேர்க்கப்பட்டதும்தான் இந்தக் குழு ‘ஜி7’ (Group of 7) ஆனது. 1998-ல் ரஷ்யாவும் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் ஜி8 ஆனது. 2014-ல் க்ரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்துக் குழுவிலிருந்து அந்நாடு நீக்கப்பட்டு மறுபடியும் அந்தக் குழு ஜி7 ஆனது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்கள் 7 ஒன்றுசேர்ந்து ஆண்டுதோறும் சந்தித்துக்கொண்டு உலகின் போக்கை மாற்றும் விதத்திலான முடிவுகளை எடுப்பதுதான் ஜி7 மாநாட்டைக் கவனிக்க வைக்கிறது. ஜி7 மாநாடு ஆண்டுதோறும் இந்தக் குழுவின் உறுப்பு நாடுகளுள் ஒன்றில் நடக்கும். அந்த நாட்டின் பிரதமரோ அதிபரோ அந்த ஆண்டு மாநாட்டின் தலைமைப் பொறுப்பை வகிப்பார். இந்த ஆண்டு பிரிட்டனில் நடைபெற்றதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை வகித்தார்.

மேல்தட்டு அமைப்பா?

ஜி7 அமைப்பின் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட சீனாவும் இந்தியாவும் இந்தக் குழுவில் சேர்க்கப்படாதது பிரதானக் குற்றச்சாட்டு. இந்தியா, சீனாவின் தனிநபர் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், தனிநபர் வருமானம் குறைவாக இருந்த ரஷ்யா ஏன் சேர்க்கப்பட்டது என்பதில் தெளிவு இல்லை. இந்தக் குழு வெகு காலமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்ததும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. உலகையே மாற்றியமைக்கக்கூடிய முடிவுகளை வெறும் ஏழு நாடுகளின் தலைவர்கள் ஒரு அறைக்குள் எடுக்கிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஜி7 மாநாட்டுக்கு முன்பாக அந்த மாநாட்டின் செயல்திட்டம் குறித்து அறிக்கை வெளியிடும் வழக்கம் தொடங்கியது.

ஜி7 கருப்பொருள்களும் கவனமும்

ஆரம்பத்தில், ஜி7 மாநாடுகள் பொருளாதாரத்தை மையம்கொண்டே நடைபெற்றன. போகப் போக ஜி7 அந்தந்தக் காலத்தின் பிரச்சினை, சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப வேறு சில கருப்பொருள்களையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தது. இப்படிச் சேர்ந்தவைதான் வெளியுறவு, பாதுகாப்பு, வளர்ச்சி, பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், கல்வி, சுகாதாரம், மனித உரிமைகள் போன்றவை. ஒவ்வொரு ஜி7 மாநாட்டின் முடிவின்போதும் ஒரு அறிக்கை (communique) வெளியிடப்படும். ஜி7 மாநாடுகள் சமீப ஆண்டுகளாக சுகாதாரம், பருவநிலை மாற்றம் போன்ற உலகைப் பாதிக்கும் பிரச்சினைகளின் மேல் கவனம் செலுத்திவருகின்றன. 2002 ஜி7 மாநாட்டின்போது எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்றவற்றின் மீது போர் அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவின் காரணமாக உருவாகிய ‘குளோபல் ஃபண்டு’ என்ற அமைப்பு இதுவரை இந்திய மதிப்பில் ரூ.3.30 லட்சம் கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 3.80 கோடிப் பேரின் உயிரைக் காப்பாற்றியிருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது.

ஒரே பூமி... ஒரே ஆரோக்கியம்!

இந்த ஆண்டின் ஜி7 மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரோன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல், ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா, இத்தாலி பிரதமர் மாரியோ திராஹி போன்றோருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உர்சுலா வான் டெர் லெயன், சார்லஸ் மிஷெல் ஆகியோர் கலந்துகொண்டனர். விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென்ஆப்பிரிக்கா வரவேற்கப்பட்டிருந்தன. இந்தியப் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் மெய்நிகர் வழியாகப் பங்கேற்று, தன் பாணியில் ‘ஒரே பூமி... ஒரே ஆரோக்கியம்’ என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் செயல்திட்டம் கரோனாவிலிருந்து மீள்வதை ஒட்டியிருந்தது. இது எதிர்காலப் பெருந்தொற்றுகளிலிருந்து நம் அனைவரையும் மீட்கக்கூடிய வலுவான உலக சுகாதார அமைப்பின் தேவையையும் உள்ளடக்கியிருந்தது. கூடவே, பருவநிலை மாற்றமும் வர்த்தகமும் முக்கியக் கருப்பொருள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பு ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் சந்தித்தனர். உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச வரியாக 15% நிர்ணயிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள். வரிவிதிப்பில் கெடுபிடியாக இல்லாததாலும், குறைந்த வரிவிதிப்பைக் கொண்ட நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தஞ்சம் புகுவதாலும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பெரும் இழப்பு. இந்தியாவுக்கு மட்டும் இதனால் ஆண்டுக்கு ரூ.73,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது.

இந்த ஆண்டின் ஜி7 மாநாட்டின் முக்கியமான அறிவிப்பு இந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு 100 கோடி டோஸ்கள் கரோனா தடுப்பூசி வழங்கும் என்பது. இதில் 50 கோடி டோஸ்களை அமெரிக்காவும், 10 கோடி டோஸ்களை பிரிட்டனும் வழங்கும். இது முக்கியமான முடிவு என்றாலும், உலகின் இன்றைய தடுப்பூசித் தேவையை இதனால் ஈடுகட்ட முடியாது. தங்கள் தேவைக்கும் அதிகமாகத் தடுப்பூசியைக் குவித்துவைத்திருக்கும் ஜி7 நாடுகள் நினைத்தால், 2022-ன் இறுதிக்குள் உலகம் முழுவதற்கும் தடுப்பூசி செலுத்திவிட முடியாதா என்ன? கூடவே, கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு ஏழை நாடுகளுக்கு நிதியுதவி செய்தல், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைப் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றும் பருவநிலை மாற்றமும் உலகை அச்சுறுத்தும் சூழலில், உலகின் முன்னணிப் பொருளாதாரங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம். அதற்கு, இந்த நாடுகள் தங்கள் சொந்த நலனைத் தாண்டிச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

- ஆசை, தொடர்புக்கு, asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x