Published : 15 Jun 2021 03:12 am

Updated : 15 Jun 2021 09:30 am

 

Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 09:30 AM

‘கிளப்ஹவு’ஸை மொழிபெயர்ப்பது சரியா?

translation-of-clubhouse

தொகுப்பு: த,ராஜன்

‘கிளப்ஹவுஸ்’ என்ற புதிய தளத்தை நோக்கி சமூக ஊடகர்கள் படையெடுத்துவரும் இந்நாட்களில், இந்தத் தளத்துக்குச் ‘சொல்லகம்’ என்று பெயர் சூட்டினார் கவிஞர் மகுடேசுவரன். இதையொட்டி, ‘பேச்சுவெளி’, ‘கீச்சுவெளி’, ‘கூடுவெளி’, ‘மகிழ்மனை’, ‘அரட்டை அரங்கம்’, ‘அரட்டையகம்’, ‘வாய்க்கூடுகை’ என்று புதுப்புதுப் பெயர்கள் உருவாகியிருக்கின்றன. விஷயம் அதுவல்ல. பெயரை அப்படியேதான் தமிழிலும் பயன்படுத்த வேண்டும் என்று ஒருசாராரும், தமிழுக்கு ஏற்றவாறு புதுச் சொல்லை உருவாக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் காரசாரமாக விவாதித்துவருகிறார்கள். கவனம் ஈர்க்கும் அந்த விவாதத்திலிருந்து சில பகுதிகள்…

ஆர்.அபிலாஷ், எழுத்தாளர்.


‘சொல்லகம்’ என்பது அழகிய மொழியாக்கமாகவே தெரிகிறது. சொல்லவும் கேட்கவும் சுகமாக இருக்கிறது. ‘பேஸ்புக்’ என எழுதவும் எனக்குப் பிடிக்காது. ‘முகநூல்’தான் அழகு. நாம் தமிழில் இப்படி எழுதுவதால் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ‘பிராண்ட் நேம்’ பாதிக்கப்படும், வியாபாரத்தை இழுத்து மூட வேண்டியதுதான் போன்ற நகைச்சுவைகளை நான் ஏற்கவில்லை.

அரவிந்தன், பத்திரிகையாளர்.

கலைச் சொல்லாக்கம் என்பது வேறு, நிறுவனங்களின், நபர்களின், பிராண்டுகளின் பெயர்கள் என்பது வேறு. கலைச்சொற்களை மொழியாக்கம் செய்வதை யாரும் தவறென்று சொல்வதில்லை. குறிஞ்சித் திணை என்பதில் குறிஞ்சி என்பது ‘ப்ராப்பர் நவுன்’. திணை என்பது கலைச்சொல். திணை என்பதற்கு இலக்கு மொழியில் ஒரு சொல்லை உருவாக்கலாம். ஆனால், குறிஞ்சி என்பதை அப்படியே ஒலிபெயர்ப்பதுதான் சரி. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மனுஷ்யபுத்திரன், கவிஞர்.

வெளியே இருந்து வரும் சொற்களை அபத்தமாகத் தமிழ்ப்படுத்துவது தவறு என்று சொன்னால், வருகிற சொல்லையெல்லாம் அப்படியே தமிழ் ஏற்க வேண்டும் என்பது அதைவிடத் தவறு. மொழிக் கலப்பினால் ஏற்பட்ட மணிப்பிரவாளம், அது தமிழுக்கு ஏற்படுத்திய சேதாரத்தை ஏழெட்டு நூற்றாண்டுகளாகத் தமிழ் அனுபவித்திருக்கிறது. 1950-களுக்கு முன்பு நம் இதழியல் மொழி, திரைப்பட மொழி எப்படியிருந்தது? பிறமொழிச் சொற்கலப்பின் குப்பையாக அது மாற்றப்பட்டிருந்த நிலையைத் தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் போராடி மீட்டன. இன்று நாம் புழங்குகிற தமிழ் என்பது ஒரு நீண்ட பண்பாட்டுப் போராட்டத்தால் வென்றெடுக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, வணிகம் சார்ந்து எத்தனையோ விஷயங்கள் தமிழுக்கு வந்துசேர்கின்றன. அவற்றுக்கெல்லாம் தமிழ்ச் சொற்கள் கண்டறியப்பட்டுப் புழக்கத்துக்கு வரவில்லையா? தமிழின் தொன்மையான மொழி வளத்தால் வேர்ச்சொற்களைக் கண்டறிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கலைச்சொல்லாக்கம் என்பது தமிழில் இடையறாது நிகழ வேண்டும். எது எப்படி இங்கே வருகிறதோ அதை அப்படியே ஏற்க வேண்டும் என்பது மொழிச் சிதைவுக்கே இட்டுச்செல்லும். ‘பேருந்து’, ‘தேநீர்’, ‘கணினி’ என்பதையெல்லாம் கிண்டலடித்தவர்கள் இருக்கிறார்கள். நமக்கு இப்போது தேவை தமிழ் மொழி வெறி. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இளங்கோவன் முத்தையா, பதிவர்.

தமிழ் வெறியின் விளைவுகள்தான் ‘முகநூல்’, ‘கீச்சகம்’, ‘கீச்சு’, ‘பகிரி’, ‘உன்குழாய்’ போன்ற அபத்தங்கள். இவை அந்தந்த நிறுவனங்களின் பெயரல்லவா? அவற்றை எந்த மொழியில் எழுதினாலும் அவற்றின் உண்மைப் பெயரை அந்தந்த மொழியின் எழுத்துகளைக் கொண்டல்லவா எழுத வேண்டும்? இன்னொன்று, இந்தச் செயலிகளுடைய பெயர்களின் பொருளும் பயன்பாடும் தெரிவதால், அதை அப்படியே தமிழ்ப்படுத்துவது எளிதாக இருக்கிறது. இதையே ‘டிக்டோக்’, ‘அமேஸான்’, ‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘கூகுள்’ போன்றவற்றுக்குத் தமிழில் மாற்றச் சொல்லுங்கள் பார்க்கலாம்… ஒரு ஆங்கிலேயர் நம் பெயர்களையெல்லாம் ஆங்கிலத்தில் மாற்றினால் என்னாகும்? பன்னீர் செல்வம் ‘ரோஸ் வாட்டர் வெல்த்’ ஆகிவிடுவார். மனுஷ்யபுத்திரனே ‘சன் ஆஃப் ஹ்யூமன்’ ஆகிவிடுவார் அல்லவா? அபத்தம்.

மணி மணிவண்ணன், பதிவர்.

சீனாவில் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பெயர்களெல்லாம் அவர்கள் மொழிக்கும் எழுத்துக்கும் ஏற்ற வகையில் மாற்றப்பட்டிருக்கின்றன. நிறுவனங்கள் தம் நிறுவனங்களுக்கு வணிகப் பெயர்கள் வைத்துக்கொள்வதைப் போல, பயனர்களும் தங்கள் மொழி இயல்புக்கு ஏற்ப வணிகப் பெயர்களுக்குச் செல்லப் பெயரிட்டு அழைப்பதைத் தடுக்க முடியாது. தம் வாயில் நுழையாத, பொருள்தராத, அந்நியப் பெயர்களைத் தம் மொழிக்கேற்ப மாற்றிக்கொள்வது வெகு இயல்பானது. தலைகீழாக நின்றாலும் பெரும்பாலான அமெரிக்கர்களால் என் பெயரை உச்சரிக்கவே முடியாது… என் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அமெரிக்கர்களுக்கு என் பெயர் ‘மான்னி’ (Manny). சீனாவுக்கு நான் போனால் அவர்கள் மொழிக்கேற்ப என் பெயரைத் திரிக்க வேண்டியிருக்கும். ‘முகநூல்’, ‘கீச்சு’ இப்படி வெகு சில தமிழர்கள் தமக்குள் அழைத்துக்கொள்வது அந்தந்த நிறுவனங்களுக்கே சிக்கல் இல்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன?

மகுடேசுவரன், கவிஞர்.

வணிகப் பெயரைத் தமிழாக்கக் கூடாது என்கிறார்கள். யாரிடம் வணிகம் என்று நான் கேட்கிறேன். தமிழ்மொழி மக்களிடம் நடத்தும் வணிகத்திற்குத் தமிழ்ப் பெயரோடு வாருங்களேன் என்று சொல்ல மாட்டீர்களா? இங்கே வருவன அனைத்திற்கும் இப்படித்தான் மாற்றீடு நடக்கும் என்று தெரிந்தால்தானே அவன் நம் மொழிப் பெயரோடு வருவான்? ‘பிராண்ட் நேம்’ போன்றவற்றைத் தமிழாக்கக் கூடாது என்கிறார்கள். ‘பிராண்ட்’ என்பதற்கு நான் ‘விற்பேர்’ என்ற சொல்லைப் பரிந்துரைத்துள்ளேன். விற்பேர் என்பது என்ன? அதுவே உங்களை ஒரு சொல்லுக்குள் முடக்கிப்போடும் உத்திதானே? இந்த விற்பேர் பரப்பலின் பின்னே ஒளிந்துள்ளது கலப்படமில்லாத வணிகம்தானே? அதனை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்? ‘சாம்சங்’ என்கின்ற கொரியச் சொல்லுக்கு ‘மூன்று நட்சத்திரங்கள்’ என்பது பொருளாம். நாம் ‘மும்மீன்’ என்று ஏன் சொல்லக் கூடாது? மும்மீன் என்கின்ற அழகிய உருவகத்தால்தானே அவர்கள் அப்பெயரை இட்டார்கள்? அந்தப் பொருளுணர்ச்சியை நாம் அடையவே கூடாதா? நாம்தான் பெரிய பிராண்டு. தமிழ்மொழியும் தமிழ் மக்களும்தான் உலகின் மிகப்பெரிய விற்பனைச் சந்தை. ஆக, சிறுநாட்டின் வணிகச் சொல்லைக் காப்பாற்ற உங்கள் தமிழ்மொழியைப் பலி கொடுப்பீர்களா? ஒரு சொல்லை ஆக்கி அளிக்கிறோம் என்றால், அதற்குப் பின்னே பல்லாண்டு மொழிப்பயிற்சி இருக்கிறது. இலக்கண அறிவு இருக்கிறது. தமிழில் ஒரு சொல் என்பது அதனளவில் பொருள் உணர்த்தியே ஆக வேண்டும். பொருளுணர்த்தாத ஒன்று வெறும் ஒலிக்குறிப்பாக மட்டுமே இருக்கும்.

அ.ராமசாமி, தமிழ்ப் பேராசிரியர்.

பெயர்ச்சொற்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். பெயர்களை மொழிபெயர்க்கக் கூடாது; ஒலிபெயர்க்க வேண்டும். முதலில் பெயர்கள் வேறு; பெயர்ச்சொற்கள் வேறு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழில் இருந்த/வைக்கப்படும் பெயர்கள் – பொதுப்பெயர், சிறப்புப்பெயர், காரணப்பெயர், இடுகுறிப்பெயர் என்பனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு வகைப் பெயர்களையும் மொழிமாற்றம் செய்ய வேண்டுமா? பொதுப்பெயர்களை மொழிமாற்றம் செய்ய வேண்டும். மற்றவற்றை மாற்றம் செய்யத் தொடங்கினால் குழப்பங்கள் தோன்றும். சிறப்பும் காரணமும் இடுகுறியும் காணாமல் போய்விடும். ஆனால், மொழிமாற்றம் செய்யவே முடியாது என்றும் சொல்வதற்கில்லை. பெயர்களின் வகைகளைச் சொன்ன தொல்காப்பியர் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கைச் சொல்கிறார். இந்நான்கையும் மொழிமாற்றம் செய்ய முடியும்; செய்ய வேண்டும்.


ClubhouseClubhouse appTranslation of clubhouseகிளப்ஹவுஸ்‘பேச்சுவெளி’‘கீச்சுவெளி’‘கூடுவெளி’‘மகிழ்மனை’‘அரட்டை அரங்கம்’‘அரட்டையகம்’‘வாய்க்கூடுகை’கவிஞர் மகுடேசுவரன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x