Published : 15 Jun 2021 03:12 am

Updated : 15 Jun 2021 05:36 am

 

Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 05:36 AM

தமிழ்நாட்டுக்கென தனிச்சிறப்புடன் உருவாகட்டும் புதிய வேளாண் கொள்கை

new-farm-policy

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்புகள் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு முன்னதாக, கல்லணையில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டபோதே அவரது தொலைநோக்குப் பார்வை முன்னறிவிக்கப்பட்டுவிட்டது.

அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் அது கடைமடைக்கு வந்துசேராத நிலை இந்த ஆண்டில் இருக்காது என்பது புரிகிறது. தற்போது 9 மாவட்டங்களில் ஏறக்குறைய 4,000 கிமீ தூரத்துக்குத் தூர்வாரும் பணிகள் நடந்துவருகின்றன. அடுத்து வரும் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் நிகரப் பயிரிடும் பரப்பு 60%-லிருந்து 75% ஆக விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ள முதல்வர், அதற்கான திட்டமிடலும் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.


வேளாண் துறை தொடர்பான முதல்வரின் அறிவிப்புகள் முழுமை பெற்று பத்தாண்டுக்குள் இறுதி இலக்கை எட்ட வேண்டும் எனில் அதற்கான ஒரு தனிச் சிறப்பான கொள்கையை வகுக்க வேண்டியதும் அவசியம். குறிப்பாக, உற்பத்தி இலக்கைப் போலவே அதற்கான சந்தை வாய்ப்புகளுக்கும் திட்டமிடல்கள் தேவை. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை அவற்றைப் பாதுகாக்கும் வகையில் மாவட்டம்தோறும் பதனக் கிடங்குகளை உருவாக்க வேண்டும். படிப்படியாக, அவற்றை ஊராட்சி ஒன்றிய அளவுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாதம்தோறும் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டிய காவிரி நீரை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையைக் கைவிடக் கோரி பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டுக்கான நீர்ப் பங்கீடு, வேளாண் மண்டலப் பாதுகாப்பு இரண்டுக்கும் முதல்வர் கொடுக்கும் முக்கியத்துவம் தெளிவு. அரசின் அறிவிப்புகளைத் தாண்டி, உழவர்களிடம் அவர் முன்வைத்துள்ள வேண்டுகோள்களும் கருத்தில் கொள்ளத்தக்கவை. தண்ணீர் சிக்கனம், முறை வைத்துப் பாசன நீரைப் பயன்படுத்துதல், செம்மை நெல் சாகுபடி முறை ஆகியவற்றைப் பின்பற்றுமாறு அவர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்ற முதல்வரின் நம்பிக்கையும் விருப்பமும் இன்றைய பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் பாராட்டுக்குரியது. தொழில் துறையில் புதிய முதலீடுகளுக்கும் உடனடி சந்தை வாய்ப்புகளுக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக வேளாண் துறையே பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட முடியும் என்றாலும், அதன் காரணமான பொருளாதாரப் பாதிப்புகளை மேலும் சில ஆண்டுகளுக்கு எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். வேளாண்மைத் துறைக்கு முதல்வர் கொடுக்கும் கவனம் அதற்கான தீர்வுகளில் ஒன்றாக அமையட்டும்.புதிய வேளாண் கொள்கைகுறுவை சாகுபடிமேட்டூர் அணைNew farm policyமுதல்வர் மு.க.ஸ்டாலின்தூர்வாரும் பணிகள்முதல்வரின் அறிவிப்புகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x