Published : 09 Dec 2015 08:47 AM
Last Updated : 09 Dec 2015 08:47 AM

பொறுப்புணர்வை உணர்த்தும் முடிவு

ரிசர்வ் வங்கி இதர வங்கிகளுக்குத் தரும் கடனுக்கான ‘ரெபோ’வட்டி வீதத்தை இப்போதிருக்கும் 6.75% என்ற அடிப்படையிலேயே பராமரிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முடிவுசெய்திருக்கிறார். பொருளாதார மீட்சியோ, பணவீக்க அளவில் பெரிய மாறுதலோ இப்போது காணப்படவில்லை என்பதால் வட்டி வீதத்தை மாற்ற வேண்டிய தேவை இப்போது இல்லை என்று அவர் கருதுகிறார்.

உலக அளவிலும் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி பெறவில்லை. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தக்கூடும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்காவிலும் சீனத்திலும் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறவில்லை. அமெரிக்க டாலரின் செலாவணி மதிப்பு வலுவாகி வருகிறது. ஐரோப்பிய யூரோ வலுவிழந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரச் சுணக்கமும் சிலவற்றில் சரிவும் காணப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பருவ மழை போதிய நல்விளைவுகளைத் தராததால் பல மாநிலங்களில் பணவோட்டம், நுகர்வு குறைவாக இருக்கிறது. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மக்களுக்குத் தேவைகள் இருந்தும் கையில் பணம் குறைவாக இருப்பதால் நுகர்வைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றனர். கடந்த 25 மாதங்களில் தொழில்துறையின் உற்பத்தியும் விற்பனையும் நவம்பர் மாதத்தில்தான் குறைந்திருக்கிறது. நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் விற்பனையாகாமல் கையிருப்பில் இருப்பது அதிகமாகியிருக்கிறது. தொழிற்சாலைகள் தங்களுடைய உற்பத்தி அளவை அதிகப்படுத்தியிருக்கின்றன.

விலைவாசி தொடர்பான புள்ளிவிவரங்கள் கலவரம் தருகின்றன. சில்லறை விலை அடிப்படையில் நுகர்வோர் குறியீட்டெண் தொடர்ந்து 3-வது மாதமாக அக்டோபரிலும் உயர்ந்திருக்கிறது. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகளின் விலை அதிகரித்திருக்கிறது. பல மாநிலங்களில் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் பருவ விதைப்பு உற்சாகமாக இல்லை. எனவே, குளிர்காலச் சாகுபடி குறைந்தாலும் பண்டங்களுக்குப் பற்றாக்குறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை இப்போதைக்கு அதிகரிக்காது என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்துவரும் சண்டை எப்படி மாறும் என்று ஊகிக்க முடியாது. அதில் ஏதேனும் திருப்பம் நேரிட்டால் எண்ணெய் விலையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல் செய்தாலும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வோம் என்று மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதியைக் காப்பாற்றும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. அதே வேளையில், பரிந்துரைகளை அமல் செய்வதால் நுகர்வும் அதன் பயனாக விற்பனையும் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெருகும் என்றும் எதிர்பார்க்கிறது.

வங்கிகளிடம் தேங்கியிருக்கும் ரொக்கப் பணத்தை மக்களுடைய புழக்கத்துக்கு விடும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது. இதற்கு முன்னர் ரெபோ வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த அளவுக்கு, தங்களிடம் கடன் வாங்குபவர்களுக்கு வங்கிகள் குறைக்கவில்லை. அதில் பாதியைத்தான் குறைத்தன. எனவே, மேற்கொண்டு வட்டியைக் குறைப்பதால் அதிகப் பயன் இருக்கப்போவதில்லை என்பதால் வட்டி வீதத்தை மாற்றாமலிருப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சியிருக்கும் பணத்தையும் வங்கிகள் பயனுள்ள துறைகளுக்குக் கொடுத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு அதிகரித்திருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வை ஆளுநரின் முடிவு உணர்த்துகிறது. இப்போதைக்கு இதுதான் சரியான முடிவாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x