Last Updated : 18 Dec, 2015 09:55 AM

 

Published : 18 Dec 2015 09:55 AM
Last Updated : 18 Dec 2015 09:55 AM

மாற்றமாவோம்!

அரசியலுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இப்படியும் புரிந்துகொள்ளலாம்: சகஜீவிகள் மீதான அன்பு. அரசியல் செயல்பாடுகளுக்கு நிறைய தொடக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இங்கிருந்தும் தொடங்கலாம்: சுயமாற்றம்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா ஸ்ரீராம். நுண்கலை படித்தவர். கணவர் ராஜீவ் பெங்களூருவில் பொறியாளர். இன்றைய நெருக்கடியான நகரமயமாக்கல் நவீன வாழ்க்கை, நவீன விவசாயம் நஞ்சாகத் தரும் உணவு, நவீன கல்வி உருவாக்கும் அடிமையாக்கப் பயிற்சி எல்லாவற்றினாலும் விரக்தி அடைந்தார் சங்கீதா.

எல்லாவற்றுக்கும் மாற்றுத் தேட ஆரம்பித்தார். மாற்று வாழ்க்கைச்சூழல், மாற்றுக் கல்வி, மாற்று விவசாயம்… திருவண்ணாமலையில் இருக்கிறார் இப்போது. நவீன விவசாயத்துக்குப் பின்னுள்ள சர்வதேச சந்தை அரசியலை அம்பலப்படுத்தும் ‘பசுமைப் புரட்சியின் கதை’ அவர் எழுதிய முக்கியமான புத்தகம்.

இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாகப் பணியாற்றும் சந்தை அமைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்றார். இப்போது நாடு முழுவதும் மாற்றத்துக்காக உழைக்கும் வெவ்வேறு தனிநபர்கள், சிறுகுழுக்கள் இடையேயான உறவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அழகேசபாண்டியன் மதுரையைச் சேர்ந்தவர். இஸ்ரோவின் கிளை அமைப்பான தேசிய தொலை உணர் மையத்தில் தன் வனவியல் மற்றும் சூழலியலில் முனைவர் ஆய்வை முடித்தவர். மின் ஆளுகைத் துறைசார் வேலைகளிலும் நகர்ப்புற ஆளுகைசார் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவர். இன்றைக்கு அவருடைய கவனத்தின் முதன்மைப்புள்ளி விவசாயம். சூழலியல் அக்கறையை உலகைப் பின்னுக்குத் தள்ளும் முனைப்போடு அணுகாமல் களயதார்த்தப் பின்னணியில் அணுகுகிறார். தொடர்ந்து களத்திலும் மாணவர்களிடையிலும் பேசுகிறார்.

மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு சென்னை வந்தவர் தமிழ்தாசன். சினிமா முயற்சிகளுக்கு இடையில் தமிழ்தாசனுக்கு இருந்த பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது. அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் இருந்த சேரி தண்ணீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டபோது, அந்தப் பகுதிக்குத் தண்ணீர் வேண்டும் என்று அப்பகுதி மக்களோடு வீதியில் உட்கார்ந்திருக்கிறது தமிழ்தாசன் கிரிக்கெட் குழு. தண்ணீர் லாரிகளோடு, கொஞ்ச நாட்களில் தண்ணீர் குழாய்களும் சேரி நோக்கி வந்திருக்கின்றன. கிரிக்கெட் குழுவுக்கு இது ஒரு கண் திறப்பு. மக்கள் பிரச்சினைகளில் கால் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரொம்ப சீக்கிரம் சொந்த ஊர் போன தமிழ்தாசன் அங்குள்ள நண்பர்களோடு கை கோத்தார். நாணல் நண்பர்கள் இயக்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் கண்மாய்கள், குளங்கள் வெட்டும் பணியில் மக்களோடு களம் இறங்கியிருக்கிறார்கள். கூடவே ஆளுக்கொரு இலக்கோடு தனித்தனி முயற்சிகளையும் கூட்டு தேவைப்படும் நேரத்தில் ஒன்றுசேர்ந்தும் கலக்குகிறார்கள்.அரிட்டபட்டி ரவிச்சந்திரன் நாட்டு மீன்கள் இனம் தொடர்பான ஆய்விலும் ஆவணப்படுத்துதலிலும் இறங்கியிருக்கிறார்.

பூபாளன் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் இயற்கை வேளாண்மைக்குப் பின்னுள்ள அரசியலையும் ஒருங்கிணைக்கிறார். கார்த்திக் மண்ணின் மரங்களை ஆவணப்படுத்துகிறார். விரகனூர் விக்னேஷ் பாரம்பரிய விதைகளைச் சேகரித்து ஆவணப்படுத்துகிறார். கம்பம் நேசன் மக்களுக்கான அறிவியலைக் கிராமங்களை நோக்கிக் கொண்டுசெல்கிறார். சாதிக் உள்ளூர் கோயில்களின், கல்வெட்டுகளின், ஆளுமைகளின் வரலாற்றை ‘நம்ம வரலாறு’ என்ற பெயரில் தொகுக்கிறார். தத்தனேரி ஸ்ரீதர் நெடுஞ்செழியன் மக்கள் நலப் போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். கிராஃபிக் வடிவமைப்பாளர். ஒருநாள் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்தவர் விளையாட்டாக காந்தியைப் பற்றி விசாரிக்கிறார். எந்தக் குழந்தைக்கும் எதுவும் தெரியவில்லை. ஏதோ மனதைத் துளைக்க ஆரம்பிக்கிறது. மறுநாள் அவர்களுடைய பள்ளிக்குச் சென்றவர், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று ஒவ்வொரு வகுப்பறையாக காந்தியை அறிமுகப்படுத்திப் பேச ஆரம்பிக்கிறார். ஆர்வத்துடன் கை நீட்டும் பிள்ளைகளுக்கு, ‘சத்திய சோதனை’ புத்தகங்களைக் கொடுக்கிறார். இப்போது ஒவ்வொரு பள்ளிக்கூடமாக காந்தியோடு சென்றுகொண்டிருக்கிறார்.

கால் நூற்றாண்டுக்கு முன் சென்னையில் எஸ்.வி. ராஜதுரை, எஸ்.எஸ். கண்ணன் இருவராலும் நிறுவப்பட்ட நூலகம் ‘மார்க்ஸ் நூலகம்’. சென்னையில் ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் பயன்பட்டுவந்த நூலகம். தொடங்கியவர்கள் இருவரும் முதுமையோடு மோதிவந்த நிலையில், புதிதாகக் களம் இறங்கியிருக்கிறார்கள் இளைஞர்கள். சேலத்தில் பிறந்தவர் சதீஷ்குமார். நண்பர்கள் குழுவோடு நூலகப் பொறுப்பை ஏற்றவர், மார்க்ஸிய சிந்தனைப் பள்ளியாக அதை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் சுற்றுச்சூழல், இலக்கியம், திரைப்படங்கள், அரசியல் என்று பலதரப்பட்ட கூட்டங்கள், விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இப்போது வால்பாறையில் இருக்கிறார். துண்டுக் காடுகளுக்குப் புத்துயிர் அளிக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறது இவருடைய குழு. பறவையிலாளருமான இவர் காட்டுயிர் விழிப்புணர்வுக்காகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.

காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே.சாலிஹ். ஊர் காரியம் எது என்றாலும் முதல் ஆளாக அங்கே சாலிஹைப் பார்க்கலாம். ஊர் தேவைகளுக்கான போராட்டங்களா, ஊரில் உள்ள மாணவர்கள் படிப்புக்கோ, எளியோரின் மருத்துவ உதவிக்கோ உண்டியல் குலுக்க வேண்டுமா, யோகா வகுப்பு புதிதாகத் தொடங்க வேண்டுமா பொது வேலை எதுவென்றாலும் சாலிஹை நோக்கி விரல் காட்டுகிறார்கள். “நான் படிச்சது என்னவோ பன்னிரெண்டாவதுதான். வசதியும் கிடையாது. ஆனா, ஊரு சொந்த புள்ள மாதிரி பாக்குதுன்னா சமூகத்துக்காக ஓடுறதுதாம் காரணம். நம்மாழ்வார் ஐயா பெரிய வழிகாட்டி நமக்கு. அரசியல் மாற்றம் வயல்ல ஆரம்பிக்கணும்ங்க” என்கிறார்.

கடலூர், ராமநத்தத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் கருப்பையா. படித்தது பிஸியோதெரபி. இப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம மக்களோடு சேர்ந்து பொதுக்கிணறுகள், குளங்களை வெட்டிக்கொண்டிருக்கிறார். “இயற்கை ஆதாரமான தண்ணீரைக்கூட நம்மால சமமா பகிர்ந்துக்க முடியலையே, சமூக அமைப்பு தர்ற ஆதாரங்களான கல்வி, சுகாதாரம், இன்ன பிறதை எப்படி சமமா பகிர்ந்துக்க முடியும்? அதிகாரத்தை எப்படிச் சமமா பகிர்ந்துக்க முடியும்? சமமான பகிர்தல்தான் நல்ல அரசியலுக்கான அடையாளம். கூட்டுறவாலதான் அது முடியும். ஆனா், வெறுமனே இதைப் பேசுறதில்லை. மக்களோடு கை கோத்து, அவங்களோட வேலை செஞ்சுக்கிட்டே பேசுறோம்” என்கிறார்.

இப்படி நூற்றுக்கணக்கானோர் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஒரே அமைப்பின் கீழ் செயல்படுபவர்களோ ஒரே சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டவர்களோ அல்ல; பெரிய இயக்கங்களையோ, அமைப்புகளையோ கட்டி ஆளும் கனவில் மிதப்பவர்களும் அல்ல. ஆனால், இந்நாட்டின் இயற்கையைப் பாதுகாப்பதில், பண்பாட்டைக் காப்பதில், ஜனநாயகத்தைக் காப்பதில், மனித விழுமியங்களைக் காப்பதில் அற்புதமான காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். எது இவர்கள் அனைவரையும் இணைக்கிறது? மாற்றத்துக்கான அரசியல். சக மனிதர் மீதான கரிசனம். சிறிய புள்ளியிலிருந்தும் இந்த உலகைக் காத்துவிட முடியும் என்ற நம்பிக்கை.

சீனத் தத்துவ ஞாநி லாவோ ட்சு தன்னுடைய ‘தாவோ தே ஜிங்’ நூலில் எழுதியது இது:

“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்

எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன

இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்

சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்

மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது

ஒன்பது மாடிக் கோபுரம்

சிறு மண் குவியலிலிருந்து எழும்புகிறது

ஆயிரம் மைல் பயணம்

காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது

எனவே, பெரிய விஷயங்களை

ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை

அதனாலேயே, பெரிய விஷயங்களை

அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது!”

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.c

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x