Last Updated : 25 Dec, 2015 10:24 AM

 

Published : 25 Dec 2015 10:24 AM
Last Updated : 25 Dec 2015 10:24 AM

இயேசுவின் அரசியல்

கண்ணுக்குக் கண் என்று இறங்கினால் மொத்த உலகிலும் பார்வையற்றவர்களே இருப்பார்கள்

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை ஒட்டி இன்று சாலைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்று சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. ‘சந்திரோதயம்’ படத்தில் வாலி எழுதிய அந்தப் பாடல், இன்று உலகம் முழுவதும் நினைவுகூரப்படும் ஒரு மகானைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அது மட்டுமல்ல, இந்தியாவில் பிறந்த இரண்டு மாபெரும் ஆளுமைகளுடன் அவரை ஒப்பிடுகிறது.

“புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?” என்று கேள்வி கேட்டு, “தோழா, ஏழை நமக்காக” என்று பிரகடனம் செய்கிறது அந்தப் பாடல். ஒருவரது நினைவை நாம் ஏன் போற்ற வேண்டும்? ஏன் அவ்வப் போது நினைவுகூர வேண்டும்? உலகுக்கான அவரது பங்களிப்புதான் அதைத் தீர்மானிக்கிறது.

அகிம்சையே ஆயுதம்

இயேசு கிறிஸ்துவின் இறைத் தன்மை குறித்த விவிலியப் பதிவுகளும் கிறிஸ்தவ சமய நம்பிக்கைகளும் ஒருபுறம் இருக்கட்டும். இயேசு என்னும் மனிதர் வாழ்ந்த விதமும் அவர் கூறிய வார்த்தைகளும் அவரது செயல்களும் நமக்கு முக்கியமானவை. மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தில் பிறந்தவர் இயேசு. கொடுங்கோன்மை என்பது இயல்பாகவும் மக்களின் மகிழ்ச்சி என்பது விதிவிலக்காகவும் இருந்த ஒரு காலகட்டம்.

மக்களின் பாடுகளைக் கண்ட அவர், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்திருந்தால் அவருக்கு ஆதரவு பெருகியிருக்கும். வசீகரமான ஆளுமையும் சொல் வன்மையும் கொண்ட அவர் நினைத்திருந்தால், பெரும் படையைத் திரட்டிப் போரிட்டிருக்கலாம். ஒரு புதிய சாம்ராஜ்யத்தை அமைத்திருக்கலாம். அவரும் மக்களைத் திரட்டினார். போரிட்டார். அந்தக் காலகட்டத்தில் யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில் போரிட்டார். அன்பு என்னும் மந்திரத்தால் மக்களை இணைத்தார். அகிம்சை என்னும் ஆயுதத்தை ஏந்திப் போரிட்டார். வன்முறையை அன்பால் எதிர்கொண்டார். துன்புறுத்தலுக்குப் பிரதியாக மன்னிப்பை வழங்கினார்.

எந்தத் தவறுக்கும் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. பிறருடைய தவறுகளுக்கான பழியைத் தாமே ஏற்றுக்கொண்டார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இருக்கும் பிழையை அம்பலப்படுத்தக்கூட அவர் முனையவில்லை. தியாகத்தின் மூலமாகத் தன் தரப்பை அவர் முன்வைத்தார். இன்று உலகம் நினைவுகூர்வது அவரது தரப்பைத்தான். வன்முறைக்கும் பழிவாங்கலுக்குமான எதிர்வினையாக மன்னிப்பையும் கருணையையும் முன்வைத்தார். “பிதாவே, இவர்களை மன்னியும்.

ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகத் தன் தேவனிடம் வேண்டிக்கொண்டார். பகைவனையும் நேசிக்கக் கற்றுத்தந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் போதனைகளின் வடிவமாகத் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த காந்தியிடம் இந்தத் தன்மைகளைக் காணலாம். வன்முறைக்கு பதில் வன்முறை அல்ல என்பதைச் சொன்னதுடன் செயலிலும் காட்டியவர் காந்தி. பகைவனையும் நேசிக்கும் போர் வியூகம் அவருடையது. விடுதலை குறித்த அவருடைய பார்வை எதிரி உள்ளிட்ட அனைவருக்குமான ஆன்மிக விடுதலை என்பதாக இருந்தது. எந்தக் காரணத்துக்காகவும் பழிவாங்கலை அவர் ஏற்கவில்லை. மன்னிப்பே சிறந்த ஆயுதம் என்பதைச் செயலில் காட்டினார்.

இயேசுவைப் போலவே தன் போதனைகளைத் தான் முதலில் கடைப்பிடித்தார். பிறரது தவறுகளுக்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள அவர் தயங்கவில்லை. அவரது அன்புக்குரிய தேசம் வன்முறையின் வேட்டைக் களமாக மாறியிருந்ததை எண்ணி வருந்திய அவர், அதை நிறுத்துவதற்காகத் தன் உயிரைத் தரத் தயாராக இருந்தார். தரவும்செய்தார்.

வாழ்வின் குறியீடுகள்

இருவரது வாழ்விலும் வாக்கிலும் அதிசயமான ஒற்றுமைகள் உள்ளன. “பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்றார் இயேசு. “நீ விரும்பும் மாற்றமாக நீ மாறு” என்றார் காந்தி. இயேசு சிலுவையைச் சுமந்தது ஒரு குறியீடு. சாதாரண மக்களுடைய பாவங்களின் சுமையை நான் ஏற்கிறேன் என்பதற்கான குறியீடு. காந்தி தன் மார்பில் தாங்கிய குண்டும் ஒரு குறியீடுதான். வெறுப்பின் விஷ உரம் பாய்ந்த நிலத்தில் நேசம் என்னும் அமுதை விதைக்கத் தன் உயிரைத் தியாகம் செய்வது வன்முறைக்கான வலுவான எதிர்வினை.

“தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு” என்றார் இயேசு. “உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கி யையும் விட்டுவிடு” என்றும் “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்றும் இயேசு அறிவுறுத்தினார்.

தன்னைக் காட்டிக்கொடுத்தவனையும் மன்னித்தார். “கண்ணுக்குக் கண் என்று இறங்கினால் மொத்த உலகிலும் பார்வையற்றவர்களே இருப்பார்கள்” என்றார் காந்தி. பகை நாடு எனக் கருதப்பட்ட பாகிஸ் தானுக்குச் சேர வேண்டிய பங்கைத் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி, அதைத் தரவும் செய்தார்.

தீர்வு ஒன்றுதான்

மலை மீது நின்றபடி இயேசு சொன்ன வார்த்தைகள் மிகவும் எளிமையானவை. எந்த உரையாசிரியரின் துணையும் இல்லாமல் அனைவருக்கும் விளங்கக் கூடியவை. “எளிய மனதுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது”, “தூய்மை யான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” என்று நேரடியாகப் பேசுபவை. “கேளுங்கள் கொடுக்கப்படும்” என்று நம்பிக்கையை விதைப்பவை. புத்தரை மனித இனத்தின் ஆதர்சம் என்று சொல்லும் விவேகானந்தர், இயேசுவை புத்தருக்கு இணையாகச் சொல்கிறார். காந்தி இவர்கள் இருவரையும் பிரதிபலிக்கிறார்.

காலங்கள் மாறலாம். சூழல்கள் மாறலாம். மானுடப் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதையே இயேசு பிரானும் காந்தியடிகளும் நமக்குச் சொல்லிக்கொண் டிருக்கிறார்கள். தூய்மை, அன்பு, அகிம்சை, கருணை, மன்னிப்பு ஆகியவையே அவர்கள் வாழ்வு நமக்குச் சொல்லும் சேதி. இயேசுவின் வழி வந்ததாகச் சொல்லிக் கொள்பவர்கள் தியாகத்தின் குறியீடான சிலுவையின் பெயரால் ரத்த ஆறுகளை ஓட விட்டிருக்கலாம். அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்பதே இயேசுவின் அணுகுமுறை.

அவர்களை மன்னிப்பதன் மூலமே மானுட இனம் மகிழ்ச்சியான சக வாழ்வை என்றேனும் அடைய முடியும் என்பதே அவர் கூறும் செய்தி. சிலுவைப் போர்களின்போது இயேசு இருந்திருந்தால் அவர்கள் பாவங்களுக்காகத் தான் மீண்டும் சிலுவை சுமந்திருப்பார்.

எந்த ஆயுதத்தாலும் வெல்ல முடியாத அவர்களது தன்முனைப்பையும் அதிகார வெறியையும் தன் அன்பால் வெல்ல முயன்றிருப்பார். அவர்கள் மனதில் மூண்டிருக்கும் வெறுப்பின் நெருப்பைத் தன் பெருங்கருணையாலும் மன்னிப்பாலும் அணைக்க முயன்றிருப்பார். வெறுப்பு தலைதூக்கும்போதெல்லாம் அன்பும் தியாகமும் மன்னிப்பும்தான் அதற்கான பதில் என்னும் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றவர் இயேசு. காலம் தாண்டி ஒலிக்கும் அந்தக் குரலின் எதிரொலியை 20-ம் நூற்றாண்டில் காந்தியின் மூலம் நாம் கேட்டிருக்கிறோம்.

புத்தரின் தூய்மையான புன்னகையும் இயேசுவின் கருணை ததும்பும் கண்களும் ராட்டை சுழற்றும் காந்தியின் அமைதியும் ஒரு புள்ளியில் இணைகின்றன. காலத்தின் வேற்றுமைகள் மறைகின்றன. வாலியின் ஒப்புமை சரிதான். ஆனால் அவரது பாடலில் சிறிதளவு பிசிறு அடிக்கிறது. இவர்கள் பிறந்ததும் வாழ்ந்ததும் ஏழைகளுக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனித குலத்துக்காக. அவர்கள் பேசியதும் செயலாற்றியதும் வாழ்ந்ததும் அனைவருக்காகவும்தான். வெறுப்பற்ற, வன்முறையற்ற உலகம் என்பது இன்று அதிசயமாகத் தோன்றலாம்.

ஆனால், அன்பும் அகிம்சையும் அந்த அதிசயத்தை நம் கண் முன் நிறுத்தும் வல்லமை படைத் தவை. கலிலீ கடலை ஒட்டிய மலையின் உச்சியில் ஒலித்துக் காலங்களைக் கடந்து எதிரொலித்துக்கொண்டிருக்கும் இயேசுவின் குரல் நமக்குச் சொல்வது இதைத்தான்.

- அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x