Published : 10 Jun 2021 03:11 am

Updated : 10 Jun 2021 05:40 am

 

Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 05:40 AM

நுண்கடன் தவணைகளைத் தள்ளிவைக்க வேண்டும்

loan-waiver

வேலையின்மை அதிகரித்துவருவதன் காரணமான பொருளாதாரச் சுமைகளிலிருந்து கிராமப்புறக் குடும்பத் தலைவியரை விடுவிப்பதற்கான திட்டங்களை உடனடியாகக் கையிலெடுக்க வேண்டிய நேரமிது. தமிழக அரசால் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டுள்ள ரூ.4,000 நிவாரணத் தொகையும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும்தான் கிராமப்புறப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்குத் தற்போதுள்ள வருமான வாய்ப்புகள். ஆனால், வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலைகளை எதிர்பார்த்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்திருப்பதால் அதைப் பிரதான வருமானங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தவர்கள் வழக்கத்தைக் காட்டிலும் குறைவான வேலைவாய்ப்புகளையே பெறுகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றை நம்பியே கிராமப்புறப் பெண்கள் சுய உதவிக் குழுக்களிடமிருந்து கடன்களைப் பெற்றுத் தவணை முறையில் திருப்பியளித்துவந்தனர். வழக்கமான வேலைவாய்ப்புகளும் வருமானமும் பாதிக்கப்பட்டிருப்பதால், கடனைத் திருப்பிச்செலுத்த வழியின்றிக் கடும் மன உளைச்சலுக்குள் இப்போது அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் நுண்கடன் குறித்த ஆய்வுகளில் பங்கெடுத்துவரும் ஏழைகளுக்கு உதவும் ஆலோசனைக் குழு (சிஜிஏபி) அறிக்கைகளின்படி கடந்த ஆண்டில் வளரும் நாடுகள் அனைத்திலுமே நுண்கடன் திரும்பச் செலுத்துவது பெருந்தொற்று காரணமாகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. டிசம்பரில் வெளிவந்த இவ்வமைப்பின் ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியாவில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சுமையாகக் கருதுபவர்களின் எண்ணிக்கை 57% ஆக இருக்கிறது. கிராமங்களில் பரவியுள்ள இரண்டாவது அலை இன்னும் அதை மோசமாக்கியிருக்கிறது.


மகளிர் சுய உதவிக் குழுக்களில் பின்பற்றப்படும் நுண்கடன் முறையில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மேற்கொண்டு கடன்பெற முடியாத சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கிவருகின்றன. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இவற்றால் நேரடியாகப் பயனடைந்துவருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று கடந்த பிப்ரவரியில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கடுத்த சில நாட்களிலேயே முதல்வர் பழனிசாமியிடமிருந்து கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்தது. ஆனால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெருமளவிலான கடன்கள் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் கடன் நிறுவனங்களிடமிருந்தே பெறப்படுகின்றன. எனவே, இந்த அறிவிப்புகளால் முழுப் பயனில்லை. தற்போதைக்கு நுண்கடன் தவணைகளைத் தள்ளிவைக்குமாறு வங்கிகளைக் கேட்டுக்கொள்வதே சரியான தீர்வாக இருக்க முடியும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை, அவர்களுக்குத் தேவையான கடனும் அளிக்கப்படவில்லை, அளிக்கப்பட்ட கடனும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை, திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சீரமைக்கப்படும், அதற்காக தனித் துறை உருவாக்கப்படும் என்று உறுதிமொழிகளை வழங்கியிருந்தார் மு.க.ஸ்டாலின். இந்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியத்தை இரண்டாம் அலை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது.நுண்கடன் தவணைவேலையின்மைஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்நிவாரணத் தொகைவிவசாயம் கால்நடை வளர்ப்பு வேலைவாய்ப்புமகளிர் சுய உதவிக் குழுLoan waiverகடன் தள்ளுபடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x