Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

பள்ளிக் கல்வித் துறைக்குத் தேவை தெளிவான முடிவும் தீர்க்கமான பார்வையும்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்துசெய்ததில் தொடங்கி மதிப்பெண் வழங்குவது தொடர்பில் வழிகாட்ட சிறப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளது வரையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) முடிவுகளை அனுசரித்தே தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறையும் செயல்படத் தொடங்கியிருப்பது அரசுப் பள்ளி மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி, பிரதமருக்குத் தமிழ்நாடு முதல்வர் எழுதியுள்ள கடிதம், அவ்விஷயம் குறித்த அவரது முந்தைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், அக்கோரிக்கை ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் மாணவர்களை உடனடியாக அத்தேர்வுக்குத் தயார்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு அரசிடம் முன்கூட்டியே திட்டங்கள் ஏதும் உண்டா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் எதுவும் இதுவரையில் இல்லை.

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் ஒரே நடைமுறையைப் பின்பற்றி இயங்கிவருகின்றன. மாநிலக் கல்வி வாரியத்தைப் பொறுத்தவரையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி நிலவுகிறது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 9 லட்சம் பேர், அவர்களில் 6 லட்சம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே தனியார் பள்ளி மாணவர்கள் பாட அலகு வாரியாகவும் மாத, பருவ வாரியாகவும் தேர்வுகளை எழுதியிருக்கும் நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு எந்தத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. எனவே, பருவத் தேர்வுகளைக் கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டால் அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வான தன்மையே மிஞ்சும். கடந்த ஆண்டு 11-ம் வகுப்புக்கு இறுதித் தேர்வு நடத்தப்படாததால், திருப்புத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொள்ளலாம் என்ற பார்வையும் நிலவுகிறது. அதோடு 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் கூட்டி அவற்றின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ மதிப்பெண் நிர்ணயத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களும் பங்குவகிக்கின்றன. ஆனால், மாணவர்களின் கற்கும் திறனில் ஆண்டுக்காண்டு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்ற நிலையில், இரண்டாண்டுகளுக்கு முந்தைய அவர்களது மதிப்பெண்களைக் கருத்தில் கொள்வது சரியா என்ற கேள்விகளும் எழுகின்றன.

மதிப்பெண் நிர்ணயத்தைப் போலவே நீட் தேர்வு குறித்தும் குழப்பமே நிலவுகிறது. பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தால் நீட் தேர்வு விலக்கிக்கொள்ளப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் பொய்யாகிவிடக் கூடாது. நீட் தேர்வு ரத்துக்கான சாத்தியங்கள் குறித்த மனம்திறந்த உரையாடலுக்கும் தமிழக அரசு தயாராக வேண்டும். அதே வேளையில், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுகளைத் தவிர்க்கவும், 12-ம் வகுப்புக்கு அளிக்கப்படக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x