Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

தேவை தடுப்பூசி சர்வதேசியம்

ரெஜி ராஜேஷ், தங்கோம் அருண்

கரோனா இரண்டாவது அலையின் உடனடி விளைவு என்பது பெரும்பாலான மக்கள் தடுப்பூசி மீதான தயக்கத்திலிருந்து விடுபட்டதுதான். எனினும், நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி தட்டுப்பாடு காணப்பட்டது பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அரசின் தடுப்பூசி நட்புணர்வுக் கொள்கை (Vaccine Maitri policy) பற்றிப் பலரும் விமர்சித்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா ஏற்கெனவே தற்காலிகத் தடைகள் விதித்திருக்கிறது. இந்தத் தற்காலிகத் தடைகளைக் கொண்டு உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியம் இருந்தாலும் தடுப்பூசி தேசியம் (அதாவது, நாம் உருவாக்கும் தடுப்பூசி நமக்கு மட்டும்தான் என்ற கொள்கை) நோக்கிய எந்த நகர்வும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்குத் தீங்கு ஏற்படுத்திவிடும். இந்தப் பெருந்தொற்றானது அனைவரது ஒத்துழைப்புடன் உலக அளவில் தடுக்கப்பட வேண்டியதாகும். அப்படிச் செய்ய முடியவில்லையெனில், வைரஸானது உருமாறிக்கொண்டே இருப்பதுடன் எந்த நாடும் பாதுகாக்கப்பட்டது என்ற நிலையை எட்டாது.

மே 1-லிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 45 வயதுக்கும் மேற்பட்ட 34.40 கோடிப் பேருக்கு 68.80 கோடித் தவணைகள் தடுப்பூசி போட வேண்டியிருந்த நிலையில், இதனால் கூடுதலாக 59.50 கோடிப் பேருக்கு 119 கோடித் தவணைகள் போட வேண்டிய நிலை எழுந்துள்ளது. இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்குத் தடுப்பூசி போடுவதென்றால் மிகப் பெரிய உற்பத்தித் திறன் தேவை. இந்தியாவில் 12%-க்கும் சற்று அதிகமான மக்களுக்கு ஒரு தவணை தடுப்பூசியும் 3.2% மக்களுக்கு இரண்டு தவணைகளும் போடப்பட்டிருக்கின்றன.

கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகளின் தற்போதைய உற்பத்தித் திறன் ஒரு மாதத்துக்கு 7 கோடி டோஸ்களுக்கும் கொஞ்சம் அதிகம்தான். சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனமும் தங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக அரசு அவர்களுக்கு ரூ. 4,500 கோடி முன்தொகையை வழங்கியது. நினைத்ததுபோல் எல்லாம் நல்ல விதமாகப் போனால், ஜூன் – ஜூலையில் இரண்டு நிறுவனங்களும் மாதத்துக்கு 15.80 கோடி டோஸ்கள் என்று தங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக் தடுப்பூசியும் சேர்ந்துகொள்ளும். ஆண்டுக்கு 15.60 கோடி என்ற அளவில் ஜூலையிலிருந்து இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கப்படும் என்று தெரிகிறது. இது படிப்படியாக 85 கோடி டோஸ்கள் அளவில் படிப்படியாக உயர்த்தப்படும் என்று ரஷ்யத் தூதர் கூறியிருக்கிறார். மூன்று தடுப்பூசிகளும் உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றால்கூட, அடுத்து வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் உற்பத்தியின் அளவானது மிகப் பெரிய தடுப்பூசித் தேவையைப் பூர்த்திசெய்வதற்குப் போதுமானதாக இருக்காது.

உலகின் மருந்தகம்

உலகின் மருந்தகமாக இந்தியா இருப்பதால் இந்தச் சூழலுக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். உள்நாட்டின் தடுப்பூசித் தேவையைப் பூர்த்திசெய்வதுடன் உலக மக்களுக்கு, குறிப்பாக ஏழை நாடுகளுக்கு, தடுப்பூசி போடப்படுவதற்கு இந்தியா வழிவகை செய்ய வேண்டும். கோவேக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு ஏதாவது நிறுவனங்கள் ஆர்வம் காட்டினால், அந்த மருந்து தயாரிப்பதற்கான வழிமுறைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக மே முதல் வாரத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியது. நிறைய நிறுவனங்களை உற்பத்திசெய்ய அனுமதித்தால் ஏற்படும் போட்டி காரணமாகத் தடுப்பூசியின் விலை குறையும். பொதுத் துறை தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு கொடுத்து, தடுப்பூசி உற்பத்தியில் அவர்களை எளிதில் ஈடுபடுத்தலாம். கோவேக்ஸின் உற்பத்தியை ஒரு மாதத்துக்கு 1.25 கோடி டோஸ்கள் என்ற அளவிலிருந்து 5.80 கோடி டோஸ்கள் என்ற அளவுக்கு அதிகரிப்பதற்காக, ஹாஃப்கின் பயோஃபார்மசூட்டிகல் கார்ப்பரேஷன், பாரத் இம்யூனாலாஜிகல்ஸ் அண்டு பயாலாஜிகல் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய இம்யூனாலாஜிகல்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களையும் இந்திய அரசு ஈடுபடுத்தியுள்ளது.

அடுத்த தசாப்தம் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்று தொற்றுநோய்களின் பரவலைப் பற்றி எச்சரிக்கை விடுத்தது. கூடவே, மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை என்பது குறித்தும் அந்த அறிக்கை கவலை தெரிவித்தது. வரும் ஆண்டுகளில் தொற்றுநோய்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உள்ளூர் அளவிலும் சர்வதேச அளவிலும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பதை அதிகரிப்பதற்கான நீண்ட காலச் செயல்திட்டம் ஒன்றை இந்தியா உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் இந்தச் செயல்திட்டத்தின் அடிப்படையான அங்கமாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பிப்ரவரியில் வெளியிடப்பட்ட பொதுத் துறை நிறுவனக் கொள்கையானது மருந்து உற்பத்தித் துறையில் எந்த நிறுவனத்தையும் செயல்திட்ட அளவில் முக்கியமானவை என்று அங்கீகரிக்கவில்லை. ஆகவே, ஒன்றிய அரசின் எல்லா பொதுத் துறை நிறுவனங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.

இப்போது எது தேவையென்றால், வைரஸுக்கு எதிராக சமூகத் தடுப்பாற்றலை நாம் வளர்த்துக்கொள்ள ஏதுவாக கரோனா தடுப்பூசிகளைப் பெருமளவுக்கு உற்பத்தி செய்வதுதான். உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்தியாவுக்கு இன்னமும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 815.17 கோடி தடுப்பூசிகளை உற்பத்திசெய்யக்கூடிய கட்டமைப்பைத் தனியார் துறையிலும் பொதுத் துறையிலும் இந்தியா கொண்டிருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தரவொன்று தெரிவிக்கிறது. இந்தக் கட்டமைப்பில் சிலவற்றை கரோனா தடுப்பூசி உற்பத்திக்காக மடைமாற்றிக்கொள்ள முடியும்.

சர்வதேச ஒத்துழைப்பு

ஏற்கெனவே இருக்கும் தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகப்படுத்துவதும் புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதும் எளிதல்ல. கச்சாப் பொருட்கள் கிடைக்காமை, தொழில்நுட்பப்பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்கள், அறிவுசார் சொத்துரிமை தடைகள் ஆகியவை உற்பத்திக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. கச்சாப் பொருட்கள் கிடைக்காததால் சீரம்இன்ஸ்டிடியூட் நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தியைத் தொடர்வதில் சிக்கலைச் சந்தித்திருக்கின்றன.

உற்பத்தியை அதிகரிப்பதில் அறிவுசார் சொத்துரிமை பெரும் தடையாக இருக்கிறது. கரோனா தடுப்பூசிகள் சிலவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தும் ஒரு முறைப் பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் கொள்கலனுக்கு மட்டும் சுமார் 1,800 உரிமங்கள் பெறப்பட்டிருக்கின்றன. அதேபோல், தடுப்பூசிகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிற சாதனங்கள், பொருட்களுக்கு உரிமம் இருப்பதால் அவற்றைச் சிலரிடமிருந்து மட்டும்தான் பெற முடியும். கரோனா சிகிச்சைக்குத் தேவையான பொருட்களை அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உலக வர்த்தக மையத்தில் கோரியுள்ளதன் மூலம் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒரு முன்னெடுப்புக்குத் தலைமைதாங்கியுள்ளன. கடுமையான நெருக்குதலுக்குப் பிறகு சமீபத்தில் அமெரிக்காவும் இந்த முன்னெடுப்புக்கு, குறிப்பாக தடுப்பூசி விஷயத்தில் மட்டும், ஆதரவு தெரிவித்திருக்கிறது. எனினும், தான் இதை எதிர்ப்பதாக ஜெர்மனி கூறியிருக்கிறது. ஆகவே, அறிவுசார் சொத்துரிமைக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற இந்த முன்வைப்பு உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியை எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதில் தெளிவில்லை.

‘நேச்சர்’ இதழில் வெளியான கட்டுரை ஒன்று மரபான தடுப்பூசித் தொழில்நுட்பங்களுடன் எம்ஆர்என்ஏ தடுப்பூசி (mRNA) தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு அதன் நன்மைகளைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் முதன்மையான அனுகூலம் என்னவென்றால், இதன் உற்பத்தியைத் தேவையான அளவுக்கு அதிகரித்துக்கொள்ளலாம். தற்போது உலக சுகாதார நிறுவனமானது பைஸர்-பயோஎன்டெக், மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் மற்ற தடுப்பூசிகளைவிட மிகவும் திறன் வாய்ந்தவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உற்பத்திசெய்ய விரும்பும் நிறுவனங்கள் அவற்றை முதன்முதலில் உருவாக்கியவர்களிடமிருந்து தடையற்ற உரிமம் பெறக்கூடிய சூழலை உருவாக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை.

கரோனா வைரஸின் பல்வேறு வேற்றுருவங்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும்கூட உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.ஒன்றுசேர்ந்தும் விரைந்தும் நாம் இந்த வைரஸை அடக்கினால்தான் உலகம் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் பலனடையும்.

- ரெஜி ராஜேஷ், தொழில்துறை வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர், புதுடெல்லி;

தங்கோம் அருண், உலகளாவிய வளர்ச்சிக்கும் பொறுப்புத்தன்மைக்குமான பேராசிரியர், எஸெக்ஸ் பல்கலைக்கழகம், பிரிட்டன்.

©‘தி இந்து’, தமிழில்: ஆசை

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x