Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

பருவநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் நம் நகரமைப்புத் திட்டங்கள்

உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பெட்டேரி டாலஸ் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை, பருவநிலை மாற்றங்கள் குறித்து உலக நாடுகள் உடனடியாகத் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்குள் உலகத்தின் வருடாந்திர சராசரி வெப்பநிலையானது தொழிற்புரட்சி காலகட்டத்துக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதற்கான வாய்ப்பு 40% இருப்பதாக இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயர்வதன் பாதிப்பானது சாமானிய மனிதர்களின் தினசரி நுகர்வு வரையிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வால் மழைப்பொழிவில் மாற்றங்கள் ஏற்பட்டு மனிதர்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்புக்குள்ளாவதை உலக வங்கியின் 2018-ம்ஆண்டு ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. புவிவெப்பமாதலின் உடனடி விளைவுகளை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. பருவமழைச் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் வேளாண்மையைப் பாதிப்பதோடு உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாகின்றன. வெப்ப அலைகள், வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் அடிக்கடி உருவாகும் புயல்கள் ஆகியவை தவிர, நீண்ட கால அளவிலும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

தற்போது இந்தியாவில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்துடன் அம்பான், டவ் தே, யாஸ் என்று மூன்று புயல்களின் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான போராட்டமும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இந்த மூன்று புயல்களால் ஏற்பட்ட இழப்பு மட்டுமே குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அரபிக் கடலில் கடுமையான புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைக் குறித்து இந்திய வானிலைத் துறையும் எச்சரித்துவருகிறது. இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வின் விளைவுகளாலேயே இந்தப் புயல்கள் உருவாகின்றன. இந்த நிலை தொடரும் பட்சத்தில், இந்தியாவின் கடற்கரைப் பெருநகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையானது கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

2015-ல் பாரிஸ் உடன்படிக்கையில், தொழிற்புரட்சி காலகட்டத்துக்கு முந்தைய அளவைக் காட்டிலும் உலக வெப்பநிலையைக் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தவும், அதைப் படிப்படியாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைக்கவும் இலக்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்குகளை எட்டுவதற்கான முயற்சிகளை இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது என்பதையே உலக வானிலை அமைப்பின் அறிக்கை எடுத்துச்சொல்கிறது. உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதன் முதற்படியாக, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பெருநகரங்களின் நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்று அறிவியலர்கள் பரிந்துரைக்கிறார்கள். புவிவெப்பமாதலைக் குறைக்க வேண்டும் எனில், பெருநகரங்களை மறுதிட்டமிடல்களுக்கு உள்ளாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. எந்தவொரு நகரமைப்புத் திட்டத்தைத் தொடங்கும்போதும், தொழில் துறைக் கட்டுமானங்களை உருவாக்கும்போதும் அதில் புவிவெப்பமாதலைக் கட்டுப்படுத்தும் அக்கறையும் சேர்ந்தே இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x