Last Updated : 08 Jun, 2021 03:12 AM

 

Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

அடுத்த அலையிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?

தமிழ்நாட்டிலும் வடமாநிலங்களிலும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன், ‘மூன்றாம் அலையும் வரப்போகிறது; அது குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கப்போகிறது’ என்று ஊடகங்களில் வலியுறுத்திப் பேசியதைத் தொடர்ந்து, பொதுச் சமூகத்தில் மூன்றாம் அலையைப் பற்றிய அச்சம் பரவிவருகிறது.

கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில், பெருந்தொற்றுக் காலத்தில், மூன்றாம் அலை பரவுவது புதிதல்ல. 1918-ல் உலகையே அச்சுறுத்திய ஸ்பானிஸ் ஃபுளு 3 அலைகளைக் கொண்டது மட்டுமல்லாமல், மூன்றிலும் அதன் பரவும் தன்மையும் வேறுபட்டிருந்தது. மூன்றாம் அலையில் குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போதும் பொதுச் சமூகம் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து அதைக் கடந்துவந்தது. இப்போது பேசுபொருளாகியுள்ள கரோனா மூன்றாம் அலை பற்றிய அறைகூவலும் அதே எச்சரிக்கை உணர்வுடன் அரசுகளையும் சமூகத்தையும் தயார்ப்படுத்தவே முன்னெடுக்கிறது.

எப்போது மூன்றாம் அலை?

ஒன்றிய அரசின் ‘சூத்ரா’ (SUTRA) கணித மாதிரி 6-8 மாதங்களுக்குள் மூன்றாம் அலை வரலாம் எனக் கணித்திருக்கிறது. உலக நடப்புகளும் அதை உறுதிசெய்கின்றன. உலகில் கரோனா 3 அலைகளையும் முதலில் கண்ட நாடு அமெரிக்கா. அங்கு இரண்டாம் அலைக்குப் பிறகு 4 மாதங்கள் கழித்து மூன்றாம் அலை தாக்கியது. இங்கிலாந்தில் 8 மாதங்கள் கழித்து இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. மூன்றாம் அலைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் தப்பவில்லை.

அடுத்து வரும் மூன்றாம் அலையிலும் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்குச் சான்றாக அமெரிக்காதான் உள்ளது. அங்கு முதல் அலையில் 3% குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலையில் 22% குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர். இதுதான் மூன்றாம் அலை எச்சரிக்கைக்கு முக்கியக் காரணம். மேலும், முதல் அலையில் முதியோரும் இரண்டாம் அலையில் இளையோரும் பாதிக்கப்பட்டனர். ஆகவே, அடுத்த அலையில் அது குழந்தைகளைக் குறிவைக்கலாம்; உயிர்வாழ இடம் மாறும் வேற்றுருவ கரோனாவின் இயல்புதான் இதற்குக் காரணம்.

இந்தியாவில் முதல் அலையின்போது, குறைவான குழந்தைகளே பாதிப்படைந்தனர். தற்போதைய இரண்டாவது அலையில் குழந்தைகள் பாதிப்பது அதிகரித்துள்ளது. முதல் அலையில் நோய் அறிகுறிகள் இல்லாமல் குழந்தைகள் தொற்றுக்குள்ளாகிவந்த நிலையில், இரண்டாம் அலையில் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, மூக்கொழுகல், வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இனி மூன்றாம் அலை தாக்கினால், குழந்தைகளுக்கு அது மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிற அளவுக்குத் தீவிரத் தொற்றாக மாறலாம். அப்போது ஒரே நேரத்தில் நிறைய குழந்தைகளுக்குத் தீவிரச் சிகிச்சையும் தேவைப்படலாம். அது பொதுச் சுகாதாரத் துறைக்குப் பெரும் சவாலாக அமையும். இதுதான் தற்போதைய பதற்றத்துக்குக் காரணம்.

பொதுவாக, கரோனா தொற்றுள்ள 95% குழந்தைகள் அறிகுறிகள் இல்லாதவர்களாகவோ மிதமான அறிகுறிகள் உள்ளவர்களாகவோதான் இருக்கின்றனர். மீதி 5% குழந்தைகள்தான் ஆபத்தான நிலைக்குச் செல்கின்றனர். எனவே, பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை. குழந்தைகளுக்கு நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், எப்போதும் சோர்வு, சாப்பிட இயலாமை, சருமத்தில் சிவப்புத் திட்டுகள் இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அலட்சியம்தான் ஆபத்தை வரவழைக்கும்.

வலுப்பெறட்டும் கட்டமைப்புகள்

இந்தியாவில் மரபணு வரிசைப் பரிசோதனைகளை அதிகப்படுத்தி ஆல்பா, டெல்டா வேற்றுருவ வைரஸ்களோடு வேறு புதிய கரோனா வைரஸ்களும் பரவுகின்றனவா என்பதை அறிந்தால் மட்டுமே மூன்றாம் அலை எப்போது வரும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும் என்கின்றனர், துறைசார் வல்லுநர்கள். ஒருவேளை, ‘சூத்ரா’ கணித்திருப்பதுபோல் மூன்றாம் அலை வந்து குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நாட்டில் தற்போதுள்ள குழந்தைகளுக்கான மருத்துவக் கட்டமைப்புகளால் கரோனாவை வெற்றிகொள்ள முடியாது. அதேவேளையில், பெரியவர்களுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ வசதிகளைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதிலும் சிரமம் உண்டு. இப்போது, பிறந்த குழந்தைக்கும் கரோனா தொற்றுவது அறியப்பட்டுள்ளதால் இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

அதனால், குழந்தைகளுக்கென்றே தேவைப்படும் படுக்கைகள், அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், குரல்வளை நோக்கி, இன்குபேட்டர், வெப்பக்கருவி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், நெபுலைசர் போன்ற கருவிகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் என மருத்துவக் கட்டமைப்புகளை இப்போதிருந்தே வலுப்படுத்துவதும் (பச்சிளம்) குழந்தை மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் அதிகப்படுத்துவதும் முக்கியம். இந்த மேம்பாடுகள் பெருநகரங்களோடு நின்றுவிடாமல், கிராமப்புற, வட்டார மருத்துவமனைகளையும் எட்ட வேண்டும். மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் விதமாக, மத்தியப் பிரதேச அரசு இப்போதே 360 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் படுக்கைகளைப் பரவலாக ஏற்படுத்தியுள்ளதை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கும் தடுப்பூசி

அடுத்ததாக, பெற்றோரிடமிருந்துதான் குழந்தைகளுக்கு கரோனா பரவுகிறது என்பதால், பெற்றோருக்கான தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு கரோனா பரவுவதைத் தடுக்க முடியும். தற்போது தமிழகத்தில் களப்பணியாளர்கள் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த முன்னெடுத்திருப்பது நல்ல செய்தி.

அடுத்த கட்டமாக, குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு நாடு தயாராக வேண்டும். உலகிலேயே முதல் நாடாக கனடா 12 - 15 வயதுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசியைச் செலுத்தத் தொடங்கியது. தற்போது அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, சிங்கப்பூர் எனப் பல்வேறு நாடுகளும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துகின்றன. இந்தியாவும் இதைப் பின்பற்ற வேண்டும். ‘கோவேக்சின்’ தடுப்பூசியை 2 – 18 வயதுள்ள இந்தியக் குழந்தைகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளதை இதற்கு முன்னோட்டமாகக் கருதலாம். ஆனாலும், இதற்கான செயல்திட்டத்தை இப்போதே முறையாகத் தயாரித்து, தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்தி, தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியமான அம்சம். கரோனா இரண்டாம் அலை நமக்குக் கற்றுக்கொடுத்த இந்தப் பாடத்தை அரசுகள் மறந்துவிடக் கூடாது.

இதையும்தான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பெற்றோருக்குத் தயக்கமும் அச்சமும் ஏற்படலாம். பொதுச் சமூகத்தின் முக்கிய அங்கமான பெற்றோரின் பங்களிப்பு இல்லாமல் கரோனாவிலிருந்து நாம் விடுபட முடியாது என்பதை அரசு அவர்களுக்கு உணர்த்த வேண்டும்; தடுப்பூசிகள் குறித்த தவறான கற்பிதங்களையும் களைய வேண்டும். போதுமான விழிப்புணர்வு, தேவையான மருத்துவ முன்னேற்பாடுகள், தக்க நேரத்தில் தகுந்த சிகிச்சை, தடுப்பூசிகள், தற்காப்பு ஆகிய வழிமுறைகளால் அச்சுறுத்தும் மூன்றாம் அலையை அடக்கிவிடலாம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x