Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

குறுவையின் முக்கியத்துவம்

பேராசிரியர் தங்க.ஜெயராமன் எழுதிய ‘நெல் உற்பத்திக்கும் காவிரி நீருக்கும் என்ன தொடர்பு?’ (04-06-21) கட்டுரையில் காவிரிப் படுகை விவசாயம் எப்படி ஆற்றுநீர் விவசாயத்திலிருந்து நிலத்தடி நீருக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனப்படுத்தினார். இதையொட்டி நிலத்தடி நீரைத் தக்கவைக்கவும்கூட ஆற்று நீர் எவ்வளவு அவசியம் என்பதையும், குறுவை விவசாயம் காவிரி விவசாயத்தில் எப்படி முக்கியப் பங்குவகிக்கிறது என்பதையும் விவசாயப் பிரதிநிதிகள் சிலர் நம்முடன் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் கருத்துகளிலிருந்து...

ஏழை விவசாயிகளுக்கு காவிரிதான் கதி!

பெ.சண்முகம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

காவிரி மூலம் தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சம் ஏக்கர்பாசனம் பெறுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியே விளங்குகிறது. காவிரியில் நீர்வரத்து இல்லையென்றால் தமிழ்நாடு வெகுவிரைவாகப் பாலைவனமாக மாறிவிடும். அதனால்தான் கர்நாடகஅரசு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் போதெல்லாம் தமிழ்நாடே கொதித்தெழுகிறது.

தமிழ்நாடு முழுவதும் விவசாய மின்இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை தங்க.ஜெயராமன் தனது கட்டுரையில் வலியுறுத்த முயன்றிருப்பார் என்று நம்புகிறேன். நேரடி விதைப்புக்கு விவசாயிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? காவிரியில் உரிய காலத்தில் போதுமான அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் அடாவடித்தனமாக நடந்துகொண்டதால்தானே? நேரடியாக விதைத்தாலும் பிறகு பயிர் வளர காவிரி நீரைத்தானே விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். தண்ணீர் வராதபோதெல்லாம் ஏன் பல லட்சம் ஏக்கர் தரிசாக போடப்பட்டிருந்தது?

ஆழ்குழாய் மூலம் பாசனம் மேற்கொண்டாலும் அதற்கும் நிலத்தடி நீர்வளம் இருந்தால்தான் சாத்தியம். ஜூன் ஆரம்பித்து ஜனவரி வரை ஏறத்தாழ ஏழு மாத காலம் காவிரியிலும் அதன் கிளை ஆறுகளிலும் தண்ணீர் ஓடுவதால்தான் நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படுவதுடன் ஏரிகள், குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது காவிரிப் படுகை பகுதிகளின் நிலத்தடி நீர் அதிகமாக இருப்பதற்குக் காரணம்.

ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படவிருக்கும் காரணத்தால்தான் இந்த ஆண்டு சுமார் 5.22 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாத ஆண்டுகளில் இவ்வளவு பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறுவதில்லை. காவிரிப் படுகை மாவட்டங்களில் ஏழை, சிறு, குறு விவசாயிகள்தான் அதிகம். இவர்களால் பல லட்ச ரூபாய் செலவு செய்து எப்படி ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்க முடியும். இவர்களுக்கு காவிரி நீரை தவிர வேறு கதியில்லை.

காலால் மடைதிறந்த காலம் மாறிவிட்டது என்பது உண்மைதான். அதற்காக ஆற்றுப் பாசன முறையே அற்றுப்போய்விட்டது என்று சொல்லிவிட முடியுமா? ஆறு, கால்வாய்கள், கிளை வாய்க்கால்கள் ஆகியவற்றை முறையாக தூர்வாரி, செம்மையாகப் பராமரிக்காததன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்பு அது. இந்தக் குறைகளை சரிசெய்வதுதான் சிறந்ததே தவிர அனைவரும் ஆழ்குழாய்ப் பாசனத்துக்குச் செல்வதல்ல.

நம் உரிமைக்குக் குறுவை அவசியம்!

பி.ஆர். பாண்டியன், தலைவர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு

காவிரிப் படுகையின் கிட்டத்தட்ட 18 லட்சம் ஏக்கரில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்கிறோம். அதில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் ஒன்றே கால் லட்சம் ஏக்கரில்தான் நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் குறுவை சாகுபடி செய்கிறார்கள். சென்ற ஆண்டு கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ஏக்கர் நிலத்தில் காவிரி நீரைக் கொண்டு சாகுபடி செய்திருக்கிறார்கள். ஒரு விவசாயிக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தது என்றால் அதில் 3 ஏக்கர் நிலத்தில்தான் குறுவை சாகுபடி செய்வார். அதில் கிடைக்கும் தொகையானது அவர் சம்பா சாகுபடி செய்வதற்கு உதவும். இடையில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்களுக்குச் செலவினங்களை ஈடுசெய்வதற்குக் குறுவைதான் உதவுகிறது. அந்த அடிப்படையில்தான் குறுவையை விவசாயிகள் விரும்புகிறார்கள்.

இன்னொரு பக்கம் காவிரியில் கர்நாடகம் நமக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய நீரை வழங்குவதில்லை. உபரி நீரை மட்டும்தான் கொடுக்கிறார்கள். ஆக, சம்பாவுக்கே தண்ணீர் இல்லை என்கிற நிலையை இன்று கர்நாடகம் உருவாக்க முயல்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகக் குறுவைக்குத் தண்ணீர் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை உரிமையைப் பெறுவதற்கும் குறுவைக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியமும் விவசாயிகளிடம் உண்டு. இதை இழந்தோம் என்றால், அடுத்தது சம்பாவுக்கும் தண்ணீர் இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள் என்றால், காவிரியை நம்பியிருக்கும் படுகைப் பகுதியில் மாற்றுத் திட்டத்துக்கு நம்மிடம் வழியில்லை. அதே நேரத்தில் இன்று நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் இன்று காவிரிப் படுகையில் 600 அடிக்கும் கீழே போய்விட்டது. நிலத்தடி நீரையும் இலவச மின்சாரத்தையும் பயன்படுத்தி சாகுபடியைக் கூடுதலாக ஆக்கும் முயற்சி எழுவது தமிழ்நாட்டுக்கு ஆபத்தானது.

தங்க.ஜெயராமன் தொடர்ந்து காவிரிப் படுகையின் கலாச்சாரம், விவசாயிகள் நலனுக்கு ஆதரவாக எழுதிவருபவர். தண்ணீர்ப் பற்றாக்குறை வந்தது என்றால் அதற்கு காலத்திலேயே திட்டமிட வேண்டும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளும் தண்ணீரைக் கேட்டுப்பெறுவதில் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லியிருப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.

கிராமப் பொருளாதாரத்துக்குக் குறுவையின் பங்களிப்பு முக்கியம்!

வ.சேதுராமன், மாநிலக் கருத்தாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ஆழ்துளைக் குழாயைக் கொண்டு இருபோகமும் நடக்கிறது என்பது உண்மைதான். அந்தஇருபோகச் சாகுபடிக்குத் தற்போது வரும் நீரானது நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதனால்தான் ஆழ்துளைக் குழாய் மிகவும் அதிக ஆழத்தில் போகாமல் ஆற்றுத் தண்ணீர் காப்பாற்றுகிறது. அதேசமயம், ஆற்றுத்தண்ணீரில் தற்போது விதைப்பு விட்டு சாகுபடிசெய்யக்கூடிய ஏக்கர்களின் அளவும் அதிகமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மன்னார்குடி பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டால் 2,000 ஏக்கருக்குக் குறையாமல் தெளிப்பு சாகுபடியாக நடந்திருக்கிறது. ஆக, குறுவை என்பது இந்தக் காலகட்டத்துக்குத் தேவையான ஒன்று.

காவிரிப் படுகையிலிருந்து சென்னை, கோவை போன்ற பகுதிகளுக்குச் சென்று வேலைபார்த்தவர்கள் கரோனா காலகட்டத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவந்தார்கள். அந்த மனித வளமானது குறுவைச் சாகுபடிக்குப் பயன்பட்டது. அவர்களுக்குக் குறுவைச் சாகுபடி ஓரளவுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 12-ல் தண்ணீர் விடப்பட்டது, இப்போதும் ஜூன் 12 அன்று தண்ணீர் விடப்போகிறார்கள். இது காவிரிப் படுகை கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்த்து, குடும்ப வருமானத்துக்கு உதவுவதாகவே இருக்கும்.

குறுவைச் சாகுபடி என்பது முன்பைவிட கூடுதல் பரப்பளவுக்கு விரிந்திருக்கிறது. காவிரித் தண்ணீரோடு சேர்ந்து நிலத்தடி நீரையும் பயன்படுத்துவதால்தான் இந்த விரிவாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். காவிரிப் படுகையல்லாத பகுதிகளில் உள்ளவர்கள் தங்க.ஜெயராமன் கட்டுரையைப் படிக்கும்போது குறுவைக்கு காவிரி நீர் தேவை இல்லையோ என்ற எண்ணம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கருதுகிறேன்.

காவிரிப் படுகையில் விவசாயத்தை நம்பிதான் கிராமப் பொருளாதாரமே இருக்கிறது. ஒரு கடை இருக்கிறது என்றால் அங்கு விவசாயிகள் பொருட்களை வாங்குவார்கள் என்றுதான் வைத்திருப்பார்கள். இதுதான் அங்குள்ள பொருளாதாரம். இங்கே இருபோகம் நடக்கவில்லை என்றால், இந்த பாதிப்பை திருத்துறைப்பூண்டி போன்ற ஒரு போகம் சாகுபடி நடக்கும் இடங்களில் உணர்வோம்.

காவிரி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்வது என்பது காவிரிக்கான நம் உரிமையைத் தக்கவைக்கும் செயல்பாடு. அதற்கு குறுவை என்பது மிகவும் அவசியம். இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதைப் பரிசீலிப்பதற்கு தங்க.ஜெயராமனின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ளலாம். காவிரிப் படுகையின் 18 லட்சம் ஏக்கர் முழுக்க குறுவை சாகுபடி செய்ய முடியாது. வேண்டுமானால், ஒரு ஆண்டு ஒரு பகுதியில் உள்ள 5 லட்சம் ஏக்கருக்கும் மறு ஆண்டு மற்றொரு பகுதியில் உள்ள 5 லட்சம் ஏக்கருக்கு என்றும் குறுவை சாகுபடி செய்யும் விதத்தில் தண்ணீரைப் பிரித்து வழங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x