Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

‘பொறம்போக்கு’ பாடலும் திருப்பணி மலைக்குன்றும்

ரவிசுப்பிரமணியன்

செய்திகள் எல்லாம் கரோனாமயம். நீதிமன்றச் செய்திகளிலும் கரோனா உத்தரவுகள்தான் முக்கிய விவாதப்பொருள். இவற்றுக்கிடையே, கடந்த வாரத்தில் மதுரை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு கவனம் ஈர்க்கிறது. ஒரு பாடலைக் கேட்டுவிட்டு, தனது தீர்ப்பை எழுதத் தொடங்கியதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்டிருந்தார். டி.எம்.கிருஷ்ணா ராகமாலிகையில் (ஆனந்த பைரவி, பேகடா, ஹமீர்கல்யாணி, தேவகாந்தாரி, சாலகபைரவி, சிந்துபைரவி) சிட்டை ஸ்வரங்களோடும், ஸ்வ்ர பிரஸ்தாபமாகவும் ராகங்களை நிர்ணயித்து, சமூக அக்கறையோடு பாடிய கேபர் வாசுகியின் ‘பொறம்போக்கு’ என்று துவங்கும் பாடல் அது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தில் ஒரு முப்பது மீட்டர் உயரம் கொண்ட மலைக்குன்று. திருப்பணி மலைக்குன்று என்று பெயர். விவசாய நிலங்களுக்கு நடுவே ஒரு குவிமாடம்போல அது அமைந்துள்ளது. குவாரி என்ற பெயரில் தமிழகம் முழுக்க ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மலைகளும் குன்றுகளும் அழிக்கப்பட்டுவிட்டன. இன்னமும் அவற்றை உடைத்தெடுக்கும் வேலைகளும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

திருப்பணி மலைக்குன்றும் அப்படியொரு குத்தகைதாரரிடம் சிக்கிக்கொண்டது. ப்ளூ மெட்டல் ஜல்லிக்காகக் குன்று தகர்க்கப்பட்டு வந்தது. குத்தகைதாரர் அனுமதி விதிகளை மீறிச் செயல்படுவதாகவும், அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தை நாடினர். சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் வைத்துப் பாறைகள் தகர்க்கப்படுவதால், அருகில் பணிபுரியும் விவசாயிகளுக்கும், அவர்களது விளைநிலங்களுக்கும் கேடு நிகழ்கிறது. மிகுதியான தூசி எழுவதால் காற்று மாசுபடுகிறது. அருகில் உள்ள நீர் ஆதாரங்களிலும் குத்தகைதாரர் அத்துமீறி நுழைகிறார். கிராம மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பாதையை அவர் தடுக்கிறார். இவையெல்லாம் மனுதாரர்கள் முன்வைத்திருக்கும் வாதம். ஊராட்சியில் மேற்படி குவாரியை மூடுவதற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியும்கூட அதனால் பலனில்லை.

குத்தகைக்குத் தந்த அரசு நிர்வாகமோ அது ஒரு புறம்போக்கு நிலம் என்றும், தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள் 1959-ல்சொல்லப்பட்ட சட்ட நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்வாதம் செய்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சுரங்கத் திட்டம், மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்கான அதிகாரியின் அனுமதி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற ஒப்புதல் அனுமதி ஆகியவற்றைச் சமர்ப்பித்துள்ளது. கல்குவாரி அமைந்துள்ள இடத்தில் சட்டரீதியாக எந்த மீறல்களும் இல்லை என்று வாதிட்டது.

மனுதாரர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குவாரிப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான நிலமானது புறம்போக்கு நிலம்; எனவே, அதைப் பயன்படுத்துவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ‘புறம்போக்கு நிலம் என்பதாலேயே அதைத் தனியாரின் சுரண்டலுக்கு அரசு எடுத்துக் கொடுத்துவிட முடியாது. இயற்கையின் வழிகள் விவரிக்க முடியாத அளவிலானவை. சுனாமிப் பேரலை நம்மைத் தாக்கிய பிறகுதான் சதுப்பு நிலக் காடுகள் எந்த அளவுக்குப் பேரலையின் தாக்கத்தைத் தாங்கிக்கொண்டு அழிவைக் குறைத்தன என்பது நமக்குத் தெரியவந்தது’ என்று அதற்கான விளக்கத்தையும் நீதிமன்றம் அளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் தொடக்க வாசகங்கள்தான் இலக்கியவாதியான என்னை வசப்படுத்திக்கொண்டன. ஒரு கவிதையைப் போல் தொடங்குகிறது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு: ‘இப்போது நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், நானும் மெளனக் கதாபாத்திரங்களில் ஒருவனாகிவிடுவேன். ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பும் சட்டம் மற்றும் தர்க்கரீதியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆனால், ஒரு நீதிபதி என்பவர் நம்மைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். நமது உள்ளுணர்வு அதன் சமிக்ஞைகளைக் கண்டறிய வேண்டும்.’

எம்.சி.மேத்தா வழக்கு உள்ளிட்ட உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளையும், ஸ்டாக்ஹோம் பிரகடனத்தின் வாசகங்களையும் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ள நீதிபதி மேலும், ‘இந்தத் தீர்ப்பினை வாசிக்கும் முன்பாக, நான் டி.எம்.கிருஷ்ணாவின் ‘பொறம்போக்கு’ பாடலைக் கேட்டேன். நீர்நிலைகளில் அத்துமீறல்கள் நிகழ்கிறபோது பட்டாக்கள் வழங்குவதன் மூலம் அவற்றை நெறிப்படுத்தலாம். ஆனால், இயற்கை அதை ஏற்றுக்கொள்வதில்லை என்கிற நித்யானந்த் ஜெயராமனின் வார்த்தைகளை எண்ணிப் பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்ற வள்ளுவரின் குறளையும் நினைவூட்டியுள்ள நீதிபதி, ‘திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்டது. மனிதன் மட்டும் தொடர்ந்து எந்தவித இடைவெளியும் இல்லாமல் அவனது கொள்ளையடிக்கும் நடவடிக்கையைத் தொடர்வதால், இயற்கை அன்னை அவளின் பொறுமையை இழக்கிறாள். எல்லைமீறல் என்பது ஒரு அளவை மீறுகிறபோது இயற்கையின் எதிர்வினை தாள முடியாததாகிறது. இப்போது இவற்றைத் திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், ஒருபோதும் இயலாமல் போய்விடும்’ என்றெல்லாம் எழுதிச் செல்கிறார்.

இந்தத் தீர்ப்பைப் படித்து முடித்தபோது எனக்கு ஐராவதம் மகாதேவன் நினைவுக்கு வந்தார். மலைகளும் குன்றுகளும் அழிவதால் தமிழனின் வீறார்ந்த வரலாறும் நாகரிகமும் பண்பாடும் சொல்லும் கல்வெட்டுகளும் ஓவியங்களும் சிற்பங்களும் சேர்ந்தே அழிகின்றன என்று அவர் கண்கள் தளுதளுத்தது என்றைக்கும் என்னால் மறக்க முடியாதது.

‘மலைபடு கடாம்’ நூலைக் கொண்டவர்கள் நாம். குறிஞ்சிப் பண் பேசாத மலையின் சிறப்பா! திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களாலும், சம்பந்தர், அப்பர் போன்ற நாயன்மார்களாலும் நாட்டார் பாடல்களிலும் பலபடப் பாராட்டப்பட்டவை நம் குன்றுகளும் மலைகளும். பாரதியின் ‘நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’, பாரதிதாசனின் ‘மாலை வானும் குன்றமும்’ என்று எத்தனையோ பாடல் வரிகள் நினைவில் ஒளிவீசுகின்றன. பாடல்களும் இசையும் அவை உருவாக்கும் அழகியல் அனுபவமும் வீண்போகாது இயற்கையே தன்னைக் காக்கும் என்பது இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தில் தென்படும் நல் சகுனம்.

- ரவிசுப்பிரமணியன், கவிஞர், ஆவணப்பட இயக்குநர்.

தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x