Last Updated : 04 Jun, 2021 03:13 AM

 

Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட்டு ஆகஸ்டில் தேர்வை நடத்துங்கள்!- கே.துளசிதாசன் பேட்டி

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களில் ஒருவரான துளசிதாசன் உலகளாவிய போக்குகளைத் தொடர்ந்து கவனிப்பவர்; தனியார் பள்ளிகளுக்கு முன்னுதாரணமான பல முன்முயற்சிகளைத் தான் முதல்வராக இருக்கும் திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் வழியாக முன்னெடுத்துவருபவர் என்ற வகையில் எல்லாத் தரப்பினராலும் மதிப்போடு பார்க்கப்படுபவர். மாணவர்களுக்கு இன்றும் வகுப்பு எடுப்பவர் என்பதால், மாணவர்களின் மனநிலையை நெருக்கமாக உணர்ந்தவர். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எப்படி அணுகுவது என்பது எல்லோருக்குமே குழப்பமாகியிருக்கும் நிலையில், மாணவர்கள் - பெற்றோர்கள் - ஆசிரியர்கள் என்று மூன்று தரப்போடும் அன்றாடம் தொடர்பில் இருக்கும் துளசிதாசன் முன்வைக்கும் கருத்துகள் தமிழக அரசு செல்ல வேண்டிய திசையைத் துல்லியமாக வழிகாட்டுகின்றன.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்திருக்கிறது. தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

தேர்வுகளை மாநில அரசு அவசியம் நடத்த வேண்டும் என்பதுதான் பெரும்பாலான கல்வியாளர்களின், அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ததுபோல இதை ரத்துசெய்துவிட முடியாது. ஆனால், பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் அரசு கேட்ட கருத்துக்கணிப்பில், ஆச்சரியமளிக்கும் வகையில் ஒருசிலர் தேர்வுகள் வேண்டாம் என்கிறார்கள். தேர்வுகள் நடக்காமல்போனால் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து அறியாமல் இப்படிச் சொல்கிறார்கள் என்று இதைப் புரிந்துகொண்டால் அது தவறு. அச்சம்தான் இதற்கு முக்கியமான காரணம். ஆகையால், தேர்வுகளைக் கண்டிப்பாக நடத்த வேண்டும். ஆனால், பெற்றோரின் அச்சத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி இந்த விஷயத்தில் முக்கியமான ஒரு அரணாக இருக்க முடியும்.

ஏன் ஒரு வருஷம் பொதுத் தேர்வு இல்லாமல் போனால் என்னவாகிவிடும் என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறதே?

கல்வித் துறை தொடர்பில் ஏதும் அறிந்திராதவர்கள் மட்டுமே இப்படி ஒரு குரலை எழுப்ப முடியும். இந்த வருஷம் தேர்வு வேண்டாம் என்றுகூட நாம் தள்ளிவைக்கலாம். ஆனால், நிலைமை சரியாகி, பிள்ளைகள் உயர்கல்வி நிலையங்களுக்குப் போகும்போது ஒரு தேர்வை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனென்றால், ஒரு வாய்ப்புக்கு ஆயிரம் பேர் மோதும் நிலையிலேயே உயர்கல்வி வாய்ப்புகள் நம் நாட்டில் இருக்கின்றன. உயர்கல்விக்குப் போகக்கூடிய மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள்தான் முக்கியமான வாய்ப்பு. கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள். இதில், 6 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடியவர்கள். மீதமுள்ள 3 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள். இவர்களில் தனியார் பள்ளிகளிலேயே 2 லட்சம் பேர் முதல் க்ரூப் எடுத்துப் படிக்கக்கூடியவர்கள். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 6,000 இடங்கள் இருக்கின்றன என்றால், ஒரு லட்சம் பேர் அதற்கு மோதுகிறார்கள். இதே போன்ற கணக்குகள் பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் உண்டு. பொதுத் தேர்வு நடத்தப்பட்டால் அதன் அடிப்படையில் கல்லூரிகள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்; இல்லாவிட்டால் ஒவ்வொரு படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்று ஆகிவிடும். அது மாணவர்களுக்கும் பெரிய அலைக்கழிப்பு; கல்வித் துறைக்கும் பெரும் குழப்படி. யோசித்துப்பாருங்கள், ஒரு மாணவர் நான்கைந்து கல்லூரிகளுக்கு முயல்கிறார் என்றால் ஒவ்வொரு கல்லூரியிலும் அவர் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஓராண்டுக்கும் மேல் எப்போது வேண்டுமானாலும் தேர்வு நடக்கலாம் என்ற பதைபதைப்பிலேயே இருக்கும் பிள்ளைகளை எல்லையற்ற அவஸ்தையில் இது தள்ளும். வசதியற்ற குழந்தைகளோ இதில் பொருளாதார ரீதியாகவே முடக்கப்பட்டுவிடுவார்கள்.

அப்படியென்றால், சிபிஎஸ்இ மாணவர்களுக்குத் தேர்வு இல்லை என்ற முடிவை எப்படி பிரதமர் அறிவித்தார்?

நியாயமான கேள்வி. அங்குமே பல குழப்பங்கள் நிலவுகின்றன. ஆனால், ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. பெரும்பான்மை சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் எவை, மாநிலக் கல்வித் திட்ட மாணவர்கள் சென்றடையும் உயர்கல்வி நிறுவனங்கள் எவை என்பதே அதுவாகும். மாநிலக் கல்வி வாரியத்தை ஒப்பிட மத்தியக் கல்வி வாரிய மாணவர்களின் வர்க்கம் வேறு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சிபிஎஸ்இ மாணவர்கள் பெரும்பான்மையும் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அரசு சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் பெரும்பாலும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்துபவை; மாநிலக் கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவர்களின் நிலை அதுவல்ல. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், பெரும்பான்மை மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம், அரசுப் பொறியியல் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், தோட்டக்கலைக் கல்லூரிகள் எனத் தமிழ்நாடு அரசுசார் கல்லூரிகள் மற்றும் அதே வழிமுறையைக் கடைப்பிடிக்கும் சுயநிதிக் கல்லூரிகளைச் சென்றடைபவர்கள். இங்கெல்லாம் பிளஸ் 2 மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே சேர்க்கை நடப்பது வழக்கம். ஆக, இதையும் அதையும் ஒரே தராசில் நிறுத்த முடியாது. ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னால், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை எந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை மாநில அரசுகளுடனும் ஒன்றிய அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும். ‘சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இன்ன அடிப்படையில் மதிப்பெண் வழங்க அறிவுறுத்தியிருக்கிறோம், அதே வரையறையை நீங்களும் யோசியுங்கள்’ என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு சொல்லியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.

சரி, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தேர்வுகளை நடத்துவதற்கு உங்களுடைய யோசனை என்ன?

ஊரடங்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்த மாதம் தேர்வு பற்றி யோசிக்க முடியாது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிட வேண்டும். இடைப்பட்ட இந்தக் காலத்தில் மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட வேண்டும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களையும் ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். தேர்வு நடக்கும் நாட்களை 23-லிருந்து 12 என்ற அளவுக்குக் குறைத்துவிடலாம். எல்லாப் பள்ளிக்கூடங்களையும் தேர்வு மையங்களாக அறிவிக்கலாம். மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பள்ளிகளிலேயே, ஒரு அறைக்கு 10 மாணவர்கள் என்ற எண்ணிக்கையில் தேர்வு எழுதலாம். சென்ற வருடம் ஊரடங்கு நாட்களில் எப்படி நீட் தேர்வு நடத்தப்பட்டதோ அதே பாணியில் இப்போது பிளஸ் 2 தேர்வுகளையும் நடத்தலாம்.

நீட் தேர்வு பற்றியும் இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. மாணவர்கள் எப்படியான மனநிலையில் இருக்கிறார்கள்?

பதற்றத்திலும் மன உளைச்சலிலும் இருக்கிறார்கள். நீட் தேர்வு நடத்தும் பட்சத்தில் அது எப்போது என்று முன்கூட்டியே அறிவித்துவிடுவது நல்லது. மாநில அரசுகள் நடத்தும் பிளஸ் 2 தேர்வுகளை அனுசரித்து நீட் தேர்வைத் திட்டமிட வேண்டும். அந்தத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான முன்தயாரிப்புகளைச் செய்துதான் ஆக வேண்டும். இப்போதும் என் கேள்வி ஒன்றுதான்: நீட் தேர்வு நடத்த முடியும் என்றால் பிளஸ் 2 தேர்வையும் நடத்த முடியும்தானே? நீட் தேர்வு நடத்தாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

ஓராண்டு காலத்துக்கு மேலாகப் பள்ளிகள் முறையாகச் செயல்படவில்லை. இந்நிலையில், தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் எந்த அளவு தயாராக இருக்கிறார்கள்?

2020 மார்ச் 23 அன்று பள்ளிக்கூடங்களை மூடினோம். தனியார் பள்ளிகளில் டிசம்பர் வரைக்கும் ஆன்லைனில்தான் பாடங்கள் நடத்தப்பட்டன. அதிலும் எலைட் பள்ளிகளில்தான் முழுநேரம் ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. மற்ற பள்ளிகள் அந்த அளவுக்கு இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களோ கல்வித் தொலைக்காட்சி வழியாகத்தான் கற்றுக்கொண்டார்கள். எனவே, மாணவர்களின் கற்றல் திறன் குறைவாகத்தான் இருக்கும். ஆகையால், இந்தச் சூழ்நிலையை அனுசரித்துக் கேள்வித் தாள்களைத் தயாரிக்க வேண்டும்; கேள்வித்தாளைச் சுருக்கமாக அமைப்பது தொடர்பிலும்கூட யோசிக்கலாம். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்வு நடத்துவதற்கு இப்போதே திட்டமிடும் பட்சத்தில் இந்தக் காலகட்டத்தில் அவர்களைத் தயார்படுத்துவதற்கும் பள்ளிகளை முடுக்கிவிட வேண்டும்.

தேர்வு நடத்துவதில்லை என்ற முடிவுக்குத் தமிழ்நாடு அரசு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். எனில், உயர் கல்விக்கான வாய்ப்புகள் எந்த அடிப்படையில் வழங்க வேண்டுமெனப் பரிந்துரைப்பீர்கள்?

நான் அந்தப் பரிந்துரையைச் செய்யப்போவதில்லை. தேர்வு அவசியம் வேண்டும். சிபிஎஸ்இயையும் சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்கள் – 10 லட்சம் குடும்பங்கள் – சம்பந்தப்பட்ட விஷயம் இது. 6 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதியுள்ளவர்களில் கீழ் நடுத்தர வர்க்க மாணவர்களும் என்ன ஆவார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பதே அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த கரோனா காலகட்டத்தில் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் கடந்த ஓராண்டில் பட்டிருக்கும் தொல்லைகளுக்கு அளவே கிடையாது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருப்பவர்களை அரசு, காலத்துக்குமான பாதிப்பில் தள்ளிவிடக் கூடாது!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x