Last Updated : 02 Jun, 2021 03:12 AM

 

Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

இளையராஜா: ஊழிக் காலத்தின் ஆசுவாசம்

இந்த ஊழிக் காலத்தில் யாரிடம் பேசினாலும், “ஒருவிதமான வெறுமையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன். மீள வழி தெரியவில்லை” என்கிறார்கள். பெருந்தொற்றானது உலகம் முழுவதும் மனச்சோர்வை விளைவித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிவந்தவர்கள் தற்போது பெருந்தொற்றுக் காலம் உண்டாக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடுகின்றனர். பெருந்தொற்றுகளும் கொடுங்காலமும் மனித குலத்துக்குப் புதிதல்ல. எத்தனையோ பேரழிவுகளைப் பல நூற்றாண்டுகளாக மனித குலம் சந்தித்து, சிதைவுற்று, மீண்டெழுந்து, தழைத்தோங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியில், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் எத்தனிப்பு நம்மை மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பமாக மாறிவிடுகிறது.

சித்ரவதை முகாமின் இசை

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள மில்லிகன் பல்கலைக்கழக இசைத் துறைப் பேராசிரியர் கெல்லி டி.பிரவுன் எழுதிய ‘தி சவுண்ட் ஆஃப் ஹோப்’ புத்தகம் நமக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஹிட்லரின் சித்ரவதைக் கூடத்தில் அகப்பட்ட யூதர்கள் தங்கள் உயிரையும் இனத்தையும் தற்காத்துக்கொள்ள இசையை நாடியதாக பிரவுன் எழுதியுள்ளார். ‘சித்ரவதை முகாம் பாடல்கள்’ என்கிற புதிய ரக இசை வடிவம் அங்கு உயிர்பெற்றதாகக் குறிப்பிடுகிறார். பிரபல ஆஸ்திரிய இசைக் கலைஞர் கஸ்டவ் மக்லரின் மருமகளான வயலின் இசைக் கலைஞர் ஆல்மா ரோஸும் இங்கு சித்ரவதை அனுபவித்திருக்கிறார். விஷ வாயுவை வெளியேற்றி லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஆஷ்விட்ச் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

நச்சுப் புகையைச் சுவாசித்துத் துடிதுடித்து மரணமடையும் யூதர்களின் ஓலமானது வெளி உலகத்துக்குக் கேட்பதைத் தடுக்க, இவர்களை இசைக் கச்சேரிகள் செய்யச் சொல்லி ஹிட்லர் ஆணையிட்டதாக பிரவுன் விவரிக்கிறார். சிறைச்சாலையைப் பார்வையிட வரும் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம், தான் போர்க் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதுபோல பாசாங்கு செய்ய ஹிட்லர் ஆசைப்பட்டார். ஏப்ரல் 1944-ல் விஷ வாயு பாய்ச்சிக் கொல்லப்படும் வரை ‘ஆஷ்விட்ச் மகளிர் இசைக் குழு’வின் தலைவியாக ஆல்மா ரோஸ் திகழ்ந்திருக்கிறார். இசை அமைப்பதற்காகவே ரோஸும் அவர் இசைக் குழுவினரும் சில காலம் வரை கொல்லப்படாமல் சித்ரவதைக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தானும் தம் மக்களும் எதிர்கொண்ட சித்ரவதைகள் குறித்து இசை மொழியில் குறிப்புகளாக ரோஸ் எழுதி வைத்திருந்தார். இசையானது மொழிகளைக் கடந்தது என்றாலும் இசை மொழியில் அவர் எழுதிய சித்ரவதைக் குறிப்புகள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டபோது உலகம் அதிர்ந்தது.

நிவாரணத்தின் சங்கதி

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தம் நிலத்தையும் உடைமைகளையும் உற்றார் உறவினர்களையும் பறிகொடுத்த மனிதர்களில் அநேகர் இசையில் தஞ்சமடைந்தனர். இசையின் ஊடாக அரசியலை, உறவுகளை, சமூக உரையாடல்களை மீட்டுருவாக்கினர். ‘தி ரெஸ்ட் இஸ் நாய்ஸ் ஃபெஸ்டிவல்’ என்பதாக இதற்கான இசை நினைவேந்தல் லண்டனில் 2013-ல் நடைபெற்றதாக ‘தி கார்டியன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்ச் சூழலிலும் எப்போதெல்லாம் பேரிடர்களும் இயற்கைச் சீற்றமும் கொள்ளை நோயும் மக்களைக் கொத்துக் கொத்தாக விழுங்கியதோ அப்போதெல்லாம் ஆற்றுப்படுத்த இசை வடிவங்கள் உருவெடுத்தன. ஒப்பாரிப் பாடல்களும், கொலைச் சிந்தும், புயல், வெள்ளச் சிந்துகளும் தமிழ்ச் சூழலில் அச்சு, ஒலி வடிவங்களில் வெளிவந்தன.

இன்றைய பெருந்தொற்றுக் காலத்திலும் கோடிக்கணக்கானோரை ஆற்றுப்படுத்தும் அற்புதத்தை இசை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு உலக இசை தினத்தை ஒட்டி இந்தியாவில் 2,000 பேரிடம் ‘ஒன்-போல்’ சந்தை ஆராய்ச்சி நிறுவனத்துடன், ஹர்மான் இசை நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பிலும் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. வழக்கத்தைவிடவும் கூடுதலாக 45 நிமிடங்கள் வரை தினந்தோறும் இசை கேட்கும் பழக்கம் கரோனா காலத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையை அனுசரித்தவர்களில் 90%-க்கு நிவாரணியாக இசை அமைந்திருக்கிறது. டிஜிட்டல் ஊடகங்கள் வழியாக அவரவர் இருப்பிடத்தில் இருந்தபடியே பிடித்தமான இசைக் கருவிகளை இசைத்து, பாடி கச்சேரி நடத்துவது, பிடித்தமான இசைக் கோவைகளோடு திரைப்படக் காட்சிகளை இணைத்து மீட்டுருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிடுவது, இசை அனுபவங்களை விவரிப்பது, இசையைக் கேட்டு ரசிப்பது போன்ற அவரவருக்குத் தெரிந்த வழிகளில் இசையோடு வாசம்புரிந்திருக்கிறார்கள்.

இசை நாயகன்

தன் இறுதி மூச்சு வரை சக இசைக் கலைஞர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆல்மா ரோஸ் போல எண்ணற்ற தமிழ் இசை ரசிகர்களின் மனங்களை இந்த ஊழிக் காலத்தில் மீட்கும் இசை ரட்சகனாக இளையராஜாவைக் காண்கிறேன். சமூக ஊடகங்களிலும் யூடியூப்பிலும் இளையராஜாவின் இசையைப் பகிர்ந்து, ‘இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், மனதுக்கு இதமளிக்கும் இளையராஜா பாடல்கள்’, ‘கரோனா பயத்திலிருந்து தப்பிக்க ஒரு வருடமாக இளையராஜா தவிர வேறு வழி இல்லை’ என்பதாகப் பதிவிடும் அநேகரை இந்தக் காலத்தில் தொடர்ந்து அவதானித்துவருகிறேன்.

45 ஆண்டுகளுக்கு முன்பு பயணித்தோம் என்றால், வேறொரு காட்சியையும் தரிசிக்க முடியும். அன்று அரசியல் தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வாகைசூடி ஒரு தசாப்தத்தை நெருங்கிக்கொண்டிருந்தது தமிழகம். ஆனபோதும் இந்திப் படங்களையும் இந்திப் பாடல்களையும் ரசித்துக்கொண்டிருந்தன அன்றைய தமிழ் நெஞ்சங்கள். அன்று திராவிடக் கட்சியின் போராட்டங்களால் விரட்டியடிக்க முடியாத இந்தியைத் தனக்கு இசை அமுதூட்டிய சின்னதாய் பாடிய, ‘அன்னக்கிளி உன்னத் தேடுது’ பாடலைத் திரையிசையாக வார்த்துச் சாதித்துக் காட்டினார் ராஜா. இந்தியை விரட்டியடிக்கும் அரசியல் திட்டமோ பிரக்ஞையோ கொண்டு படைக்கப்பட்டதல்ல ராஜாவின் இசை சகாப்தம். ஆனாலும், ராஜாவின் இசை அதைச் சாத்தியப்படுத்தியது. அதேபோன்று, பெருந்தொற்றுக் காலத்தை ஊகித்து வார்க்கப்பட்டதல்ல அவரது இசைக் கோவைகள். ஆனாலும், அன்று தொடங்கி இன்று வரை தமிழ் மனங்களைத் தன் இசை மடியில் தாலாட்டிக்கொண்டிருக்கும் இசை மீட்பர் அவரே!

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

ஜூன் 2: இளையராஜா பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x