Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துமா அரசு?

கடந்த ஓராண்டில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், வனஸ்பதி, கடலை எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருப்பது சாமானிய மக்களைக் கவலைக்குள் ஆழ்த்திவருகிறது. கடந்த ஆண்டு மே மாத விலையுடன் ஒப்பிடும்போது சூரியகாந்தி எண்ணெயும் பாமாயிலும் 50%-க்கு மேல் விலை உயர்ந்துள்ளன. சமையல் எண்ணெய்களின் மாதாந்திர சராசரி விற்பனை விலையானது கடந்த 11 ஆண்டுகளில் கண்டிராத மிகப் பெரும் விலை உயர்வைச் சந்தித்துள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் மட்டுமல்லாது சமையல் எண்ணெய்களின் பயன்பாடும் இந்தியர்களின் தினசரி உணவுப் பழக்கத்தில் முதன்மையானவை. கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்கெனவே பெரும்பாலானவர்களின் குடும்ப வருமானம் குறைந்திருக்கும் நிலையில், சமையல் எண்ணெய் விலை உயர்வு அவர்களது அன்றாட உணவுச் செலவை அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் மொத்த உள்நாட்டுத் தேவை ஆண்டொன்றுக்குச் சுமார் 240 லட்சம் டன்கள் என்ற நிலையில், அவற்றில் பாதியளவுகூட இங்கு உற்பத்தியாகவில்லை. கூடுதல் தேவையைப் பூர்த்திசெய்திட வெளிநாடுகளிலிருந்தே சமையல் எண்ணெய் இறக்குமதியாகிறது. இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பாமாயிலும் உக்ரைன், அர்ஜெண்டினாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயும் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2019-20-ல் மட்டும் 133.5 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டுத் தேவையில் இது ஏறக்குறைய 56%. இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,560 கோடி.

தேவையில் பாதிக்கும் மேலாக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதும், கடந்த சில மாதங்களில் சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்திருப்பதும் சில்லறை விலையிலும் எதிரொலிக்கிறது. தாவர எண்ணெய்களிலிருந்து உயிரி எரிபொருட்கள் தயாரிக்கப்படுவதும் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணியாகியிருக்கிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சமீபத்திய அறிக்கைகளின்படி, அர்ஜெண்டினா உள்ளிட்ட பல நாடுகளில் சமையல் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. இது இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் சமையல் எண்ணெய் அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கூடுதல் சுங்க வரிகளைக் குறைத்தாலும், அதனால் சர்வதேச விலை உயருமே தவிர, சில்லறை விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எனவே, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு அனைத்து வகை சமையல் எண்ணெய்களும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அது பெயரளவுக்கானதாக இல்லாமல் வழங்கப்படும் சமையல் எண்ணெயின் அளவும் உயர்த்தப்பட வேண்டும். அதே நேரத்தில், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதுபோலவே, தாவர எண்ணெய்களின் உற்பத்தியிலும் சுயசார்பு நிலையை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x