Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

நிவாரணம் உண்டா?

ஜி.செல்வா

நாற்பது வயது என்றாலும், வலுவான உடலைக் கொண்டிருந்த செல்வம் இவ்வளவு சட்டென்று இறந்திருக்கக்கூடியவர் அல்ல. யாரும் இவருடைய மரணத்தை நினைத்துகூடப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவரையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கரோனா வாரிச்சுருட்டிவிட்டது. கரோனாவாலும் ஊரடங்காலும் தமிழக அடித்தட்டு மக்கள் எப்படியான இடர்ப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு செல்வமும் அவரது குடும்பமும் சாட்சிகளாகிறார்கள்.

2015 பெருவெள்ளத்தைத் தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரக் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த தீவிரமாக அரசு களமிறங்கியபோது, சூர்யா நகர் குடியிருப்புப் பகுதியைப் பாதுகாத்த அரசியல் செயல்பாட்டாளர் செல்வம். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருந்த நேரத்தில், “தீவிரமாகத் தேர்தல் வேலை செய்கிறோம். ஆட்சிக்கு வந்ததும் இந்தப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சுப்பிரமணியம் அண்ணனிடம் சொல்லியிருக்கிறேன்” என்றார். இப்போது செல்வம் உயிரோடு இல்லை.

செல்வம் சளி, காய்ச்சல் காரணமாகத் தனியார் மருத்துவமனைக்கு மே 7 அன்று அழைத்துச் செல்லப்படுகிறார். சில மருந்துகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். அடுத்த நாள், அருகில் இருக்கும் ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி சிடி ஸ்கேன் எடுக்கிறார்கள். கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சேர்வதற்காக இரவு 7 மணிக்கு ஆம்புலன்ஸைத் தொடர்புகொள்கின்றனர். நள்ளிரவு 2 மணிக்கு ஆம்புலன்ஸ் வருகிறது. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அதிகாலை நான்கரை மணிக்கு இடம் கிடைக்கிறது.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த சில தினங்களில் அவரது உறவினர் வெங்கடேசனுக்கு (43) தொற்று உறுதிசெய்யப்படுகிறது. இவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவரது தம்பி செந்தில் பட்ட பாடுகள் சொல்லி மாளாது. ஒருவழியாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார்கள். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பாக அவரது வீட்டிலுள்ள அனைவருக்கும் பரிசோதிக்கப்படுகிறது. குழந்தைகளும் பெண்களும் என எட்டு பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் ஐஐடி வளாகத்திலுள்ள முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.

தனது குடும்பத்தில் இருந்த அனைவருமே தொற்றுக்குள்ளான நிலையில், தாயார் மலர்க்கொடிக்கு நாடித்துடிப்பு குறைகிறது. இவருக்குத் தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை சொன்னாலும் நாடித்துடிப்பு குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மலர்க்கொடியும் இரவு எட்டரை மணியிலிருந்து அதிகாலை நான்கரை மணி வரை ஆம்புலன்ஸில் காத்திருக்க வேண்டியிருந்தது.

இத்தகு சூழலில் பாட்டி சிங்காரம்மாள் மே 17 அன்று காலமாகிறார். அடுத்த நாள், மலர்க்கொடி இறந்துவிடுகிறார். இதற்கிடையில் சித்தி மகாலட்சுமிக்கு (45) கரோனா உறுதிசெய்யப்பட்டு, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்; அவரால் தொற்றிலிருந்து மீள முடியவில்லை. மே 23 அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வெங்கடேசன் இறந்துபோகிறார். ஒவ்வொருவரின் உடலையும் மருத்துவமனையிலிருந்து கொண்டுவந்து இறுதி நிகழ்வுகள் முடிப்பதற்குள் படாதபாடு படுகிறார் செந்தில். இவ்வளவுக்குப் பிறகும் குடும்பத்தை மீட்டுவிடலாம் என்ற செந்திலின் நம்பிக்கைக்குக் காரணம், செல்வம் மட்டும்தான். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. மே 27 அன்று செல்வம் இறந்துபோகிறார். ஒரே குடும்பத்தில் ஐந்து மரணங்கள்.

அடுத்தடுத்த தொற்று, சிகிச்சைக்கான அலைச்சல், உடலைத் தகனம் செய்யப் படும் பாடு என இவ்வளவு துயரங்களோடு இன்னொரு துயரத்தையும் அந்தக் குடும்பம் எதிர்கொள்ள நேர்கிறது. செல்வத்தின் இறப்புச் சான்றிதழில் கரோனா நெகட்டிவ் என்று கூறியிருப்பது, மீதமிருக்கும் அக்குடும்பத்தினரை மீள முடியாத ஆற்றாமைக்குக் கொண்டுசெல்கிறது. செல்வத்துக்கு இரண்டு குழந்தைகள். தந்தையை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் எதுவுமே இந்தக் குழந்தைகளுக்கு இப்போது கிடைக்காது.

இது செல்வத்தின் குடும்பத்துக்கான நிலை மட்டும் அல்ல. கரோனா உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறவர்கள் ஓரிரு வாரங்களில் தொற்றிலிருந்து விடுபடுகிறார்கள்; ஆனால், அது உண்டாக்கிய பக்கவிளைவுகளிலிருந்து விடுபட முடியவில்லை. அவர்களுடைய மரணத்தை கரோனாவின் கணக்கில் அரசு எழுதுவதில்லை. இந்த இடைவெளி சரிசெய்யப்பட வேண்டியதில்லையா? அப்படி செய்யும்பட்சத்தில்தான் அரசு உருவாக்கியிருக்கும் நலத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பலனளிக்க வழிவகுக்கும். சென்னை மாநகரத்தின் மையப் பகுதியிலுள்ள, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியிலுள்ள குடும்பத்தின் நிலைமை இது. தமிழகமெங்கும் உள்ள இப்படியான குடும்பங்களைக் கண்டறிவதும், உளப்பூர்வமாக அவர்கள் பக்கம் அரசு நிற்பதும் இந்தப் பேரிடர் காலத்தின் மிகப் பெரும் தேவையாகும்.

- ஜி.செல்வா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்.தொடர்புக்கு: selvacpim@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x