Published : 28 Dec 2015 08:51 AM
Last Updated : 28 Dec 2015 08:51 AM

அமெரிக்காவை வதைக்கும் ஏற்றத்தாழ்வு!

பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிரிட்டிஷ் - அமெரிக் கப் பொருளாதார நிபுணர் ஆங்கஸ் டீட்டன். நுகர்வு, வறுமை, நல்வாழ்வு தொடர்பாக அவர் ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை அளித்திருக்கிறார். அக்டோபர் மாதம் இவ்விருது குறித்த அறிவிப்பு வெளியான அதே நேரத்தில், அமெரிக்க மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்து புள்ளிவிவரங்களுடன் கூடிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை அவர் வெளியிட்டார். ஆன் கேஸ் என்பவரும் அவருடன் இணைந்து அந்த ஆய்வில் பணியாற்றியிருக்கிறார். நோபல் விருது நிகழ்ச்சி அளவுக்குக் கவனத்தைப் பெற வேண்டிய அறிக்கை அது.

அமெரிக்கர்களின் வருமானம், வயது, அவர்களுடைய நோய் விவரங்கள், மரணமடையும் வயது ஆகியவற்றைப் பதிவு செய்து ஒப்பிட்டுப் பார்த்து விரிவாக அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அமெரிக்கர்களின் சராசரி ஆயுள் குறைந்துவருகிறது என்ற உண்மையை அது சுட்டுகிறது. அதிலும் வெள்ளை நிறத்தவர்களைவிட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் (கருப்பினம்) ஆயுள் குறைந்துவருகிறது. பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை, போதை மருந்துப் பயன்பாடு, மதுப் பழக்கம் ஆகியவற்றால் அதிகம் இறக்கின்றனர்.

வெட்டிப் பெருமை

உலகிலேயே செல்வ வளத்தில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அமெரிக்கா தன்னைப் பற்றிப் பெருமை பேசுகிறது. 2009-ம் ஆண்டைத் தவிர்த்து பிற ஆண்டுகளில் நபர்வாரி ஜி.டி.பி. அதிகரித்தே வருகிறது. செல்வ வளம் என்பது மக்களுடைய ஆரோக்கியத்திலும் ஆயுட்காலத்திலும் எதிரொலிக்க வேண்டும். வேறெந்த நாட்டைக் காட்டிலும் அமெரிக்காதான் மருத்துவத்துக்கு நபர்வாரியாக அதிகம் செலவிடுகிறது. பிரான்ஸில் இந்தச் செலவு அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 12%; அமெரிக்காவிலோ 17%. அப்படியும் பிரெஞ்சுக்காரர்களைவிட அமெரிக்கர்களின் சராசரி ஆயுள் 3 ஆண்டுகள் குறைவு.

அமெரிக்காவில் பல்வேறு மத, இன, மொழிக் குழுக்கள் இருப்பதால்தான் இப்படி என்று பல ஆண்டுகளாக வாதிட்டு வருகின்றனர். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் வெள்ளை அமெரிக்கர்களைவிடக் குறைவு. நிற அடிப்படையிலான இந்த வேறுபாடு கற்பனையல்ல, உண்மை. 2014-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் வெள்ளை நிற ஆண்களைவிடக் கருப்பின ஆண்களுக்கு 5 வயது குறைவாகவும், பெண்களுக்கு 4 வயது குறைவாகவும் இருக்கிறது. அமெரிக்க சமூகத்தில் காணப்படும் நிறவேற்றுமைக்கு இது மற்றொரு அடையாளம்.

சராசரி வருவாயைப் பொறுத்தவரை வெள்ளைக் குடும்பங்களைவிட ஆப்பிரிக்க-அமெரிக்கக் குடும்பங்களுக்கு 60% குறைவு. பணக்கார நாடுகளில் அமெரிக்காவில் மட்டும்தான் குடும்ப சுகாதாரம் என்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், சில வெள்ளை அமெரிக்கர்கள் கருப்பின இளைஞர்கள் இள வயதிலேயே இறப்பதற்கு அரசோ அதன் கொள்கைகளோ காரணம் அல்ல. மாறாக, அந்த இளைஞர்களின் பழக்க வழக்கங்கள்தான் என்று கூறுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மைதான்; குடிப்பது, போதை மருந்துகளைப் பயன்படுத்துவது போன்றவை கருப்பின இளைஞர்களிடம் வெள்ளை அமெரிக்கர்களைவிட அதிகம்தான். இதற்கும் காரணம், அவர்களுடைய குறைந்த வருவாயும், சமூகரீதியாக ஏற்படும் மன உளைச்சல்களும்தான். குறைந்த வருவாயில் வாழ்வது கடினமாக இருப்பதால் மலிவாகக் கிடைக்கும் போதைப் பொருட்களையும் மதுபானங்களையும் குடித்துத் தங்களுடைய கவலைகளை மறக்க முயற்சிக்கின்றனர்.

ஆய்வு தரும் தகவல்

இப்படி நிற அடிப்படையிலான மக்களின் வாழ்க்கை முறை, பழக்கங்களை மட்டும் குறைகூறிக்கொண்டிருக்க முடியாது. அமெரிக்க சமூகத்தில் பிளவு வலுத்துவருகிறது. அது வெள்ளை, கருப்பு என்ற நிற அடிப்படையிலானது மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கும் 1% அமெரிக்கர்கள் மற்றும் அப்படியல்லாத இதர அமெரிக்கர்கள் என்றும், அதிகம் படித்த அமெரிக்கர்கள், கல்லூரிகளுக்குக்கூடச் செல்ல முடியாத அமெரிக்கர்கள் என்றும் பிளவுபட்டுவருகிறது. இந்த வேறுபாடுகளை அவரவர் பெறும் ஊதியங்களால் மட்டுமல்ல, அவரவர்களுடைய சராசரி ஆயுள் மூலமும் அளவிடலாம். வெள்ளை அமெரிக்கர்களிலும் வருவாய் குறைந்தவர்கள் பணக்கார வெள்ளை அமெரிக்கர்களைவிட விரைவில் இறக்கிறார்கள்.

படிப்பிலும் இந்த ஏற்றத்தாழ்வு அப்பட்டமாக வெளிப் படுகிறது. முழு நேரம் வேலை செய்யும் ஆண்களுடைய சராசரி வருமானம் உண்மை மதிப்பில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிடக் குறைவு. பள்ளியிறுதி வரை மட்டுமே படித்த ஆண்களின் வருமானத்தின் உண்மை மதிப்பு 19% குறைவாக இருக்கிறது.

செலவுகளைச் சமாளிக்க வழி தெரியாமல் ஏராளமான நடுத்தரக் குடும்ப அமெரிக்கர்கள் வங்கிகளிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். வேலையில்லாமல் இருப்பவர்கள் - குறுகிய காலத்துக்கு மட்டுமே அப்படி இருக்க நேரும் என்ற அடிப்படையில் - வேலையில்லாதோருக்கான காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பிறகு அதுவும் கைகொடுக்காமல் போனதால் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது.

வேலைக்குப் போகும்போது கிடைத்துவந்த பல சலுகைகள் இப்போது பறிக்கப்பட்டுவிட்டன. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த அமெரிக்கர்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றனர். இதனால் கல்வி, சுகாதாரம், உணவு ஆகியவற்றின் செலவுகளைக் குறைத்துக்கொள்கின்றனர். இது அவர்களுடைய சராசரி ஆயுளில் எதிரொலிக்கிறது. குழந்தைகளைக் கல்லூரியில் படிக்க வைக்க வங்கிகளில் கடன் வாங்கினால்தான் முடியும் என்ற நிலை நடுத்தர வகுப்புக்கு இருக்கிறது. ஆனால், அந்தக் கடனுக்கான வட்டியோ அதிகமாகவே இருக்கிறது. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் விட முடியாது. மற்றெல்லா கடன்களைவிட கல்விக் கடன்கள்தான் அதிகமாகவும் அதிகம் அடைபடாமலும் இருக்கிறது.

அன்றைய ரஷ்யாவிலும் இப்படி

1990-களில் நான் உலக வங்கியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருந்தபோது ரஷ்யாவிலிருந்தும் இதே போன்ற தகவல்கள் வந்தன. சோவியத் ஒன்றியம் சிதைந்து சின்னாபின்னமான பிறகு, ரஷ்யாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 30% சரிந்தது. உலக அளவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்தபோது ரஷ்யாவில் மட்டும் குறைந்தது. ஒரு நாடு எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறதா, மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்பதை அளவிட ஜி.டி.பி. என்பது ஒருபோதும் சரியான அளவுகோலாக இருக்காது என்று ‘சமூக வளர்ச்சி - பொருளாதாரச் செயல்பாடுகளை அளப்பதற்கான சர்வதேச ஆணையம்’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தபோது வலியுறுத்தினேன். அப்போது இணைத் தலைவராக என்னுடன் பணியாற்றினார் டீட்டன். அதையேதான் டீட்டன் இப்போது அமெரிக்க நடுத்தர வகுப்பு மக்களைப் பற்றிய தரவுகள் மூலம் நிரூபித்திருக்கிறார். அடுத்த நிலைக்கு முன்னேறப்போகும் வர்க்கமாகப் பார்க்கப்பட்ட நடுத்தர வர்க்கம் இப்போது போகும் நிலையைப் பார்த்தால், நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் 1% பெரும் பணக்காரர்கள், எஞ்சியோர் ஏழைகள் என்று ஆகிவிடும்போலத் தெரிகிறது.

- ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ்,

கொலம்பியா பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர்;

2001-ல் பொருளாதாரத்துக்கான நோபல் விருதைப் பெற்றவர்.

தமிழில்: சாரி, ©: ‘தி கார்டியன்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x