Published : 28 May 2021 06:55 AM
Last Updated : 28 May 2021 06:55 AM

அறிவியலில் அறம் எங்கே?

சீனிவாச ராமாநுஜம்

நவீன அறிவியலை அறத்தோடு இணைத்துப் பார்க்கும் எஸ்.என்.நாகராஜனின் சிந்தனையானது இந்திய அளவிலேயே புதிய தொடக்கமாகும். நவீன அறிவியலை எஸ்என்என் விமர்சனரீதியாக அணுகுவதற்கு ஆதாரமாக இருந்த நிகழ்வு சுவாரஸ்யமானது. அந்த நிகழ்வை அவர் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டிருக்கிறார். கல்லூரியில் உயிரியல் பாடத்துக்காகத் தவளைகளை ஆய்வுக்கூடத்தில் வெட்டவிருந்தபோது அவரிடம் எழுந்த முதல் கேள்வி: “ஒரு உயிருள்ள பிராணியை இப்படி வெட்டிப் பெறும் அறிவானது நியாயமானதுதானா?” இந்த அனுபவம்தான் அறிவியல் குறித்த எஸ்என்என் பார்வையைத் தீர்மானிப்பதாக இருந்தது. அறிவியலில் அறத்தை அவர் இணைத்துப் பார்க்கும் புள்ளியானது இந்தத் தவளையை வெட்டுவதிலிருந்து தொடங்குகிறது.

நவீன அறிவியலானது அடிப்படையில் நேர்மறையான சிந்தனை முறையாகும். இந்த நேர்மறைவாதத்தை எதிர்த்து மிக விரிவான வாசிப்புகள் காணக்கிடைக்கின்றன. அறிவியலின் உள்ளார்ந்த தர்க்கத்தின் அடிப்படையை விமர்சனமாகப் பார்ப்பதில் தொடங்கி, அதன் முறையியல், பரிசோதனைகளில் மட்டுப்பட்ட தன்மை, அறிவியலின் மொழியான கணிதவியல் பண்பு குறித்து விசாரணை செய்யும் பார்வை வரை நமக்குக் கிடைக்கின்றன. நவீன அறிவியலைச் சமூகவியல்ரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் அணுகும் பார்வைகளும் விரிந்த தளத்தில் காணப்படுகின்றன. கார்ல் மார்க்ஸ் இந்த நேர்மறைவாதத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். எஸ்என்என் இந்த மரபின் தொடர்ச்சி என்று நாம் கூறலாம்.

நேர்மறைவாத அடிப்படையில் முன்வைப்பவர்கள் நவீன அறிவியல் உள்ளார்ந்து எத்தகைய விழுமியங்களையும் கொண்டிருக்கவில்லை என்றே வாதிடுகிறார்கள். அதாவது, ஒரு பத்திரிகையாளர் செய்திகளைத் தொகுத்துக் கொடுப்பதுபோலத்தான் இயற்கை அதற்குள் மறைத்துக்கொண்டிருப்பவற்றை ஒரு அறிவியலர் தொகுத்துக் கொடுக்கிறார் என்பதாக முன்வைக்கிறார்கள். ஆனால், ‘அறிவியல் என்ற சிந்தனைமுறையில் உள்ளார்ந்த விழுமியங்கள் என்று ஏதுமில்லை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?’ என்று எஸ்என்என் கேள்வி கேட்கிறார். ‘சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும்போது, மானுட விழுமியங்கள் வர்க்கத்தைச் சார்ந்திருக்கும்போது எவ்வாறு அறிவியல் மட்டும் உள்ளார்ந்த விழுமியங்கள் ஏதுமற்றதாக இருக்க முடியும்?’ என்று கேட்கிறார். இந்தக் கேள்விகள் முக்கியமானவை.

நவீன அறிவியலானது முதலீட்டியச் சமூகத்தில் முதலீட்டிய விழுமியங்களையும், சோஷலிஸ சமூகத்தில் உழைக்கும் மக்கள் சார்ந்த விழுமியங்களையும் பெறக்கூடியது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இவர்களிடம் அறிவியலின் கோர முகத்தை நினைவூட்டினால், அதாவது ஹிரோஷிமா நாகசாகியை நினைவூட்டினாலோ, போபாலில் நடந்த கோரத்தாண்டவத்தை நினைவூட்டினாலோ இவையெல்லாம் ஏகாதிபத்தியத்தின், முதலீட்டியத்தின் லீலைகள்தானே தவிர அறிவியலின் / தொழில்நுட்பத்தின் உள்ளார்ந்த விழுமியங்களால் விளைந்தவையல்ல என்று வாதிடுகிறார்கள். அணு அறிவியலின் ஆபத்தை முன்வைத்துப் பேசினால், அதாவது செர்னோபில் துயரத்தை முன்வைத்தால் அறிவியலை சாதகமானது என்றும், பாதகமானது என்றும் பிரித்துக்கொள்கிறார்கள். மேலும், சிலர் அறிவியல் வேறு, தொழில்நுட்பம் வேறு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். எஸ்என்என் இந்தத் தளங்களைக் கடந்து நவீன அறிவியலின் உள்ளார்ந்த கட்டமைப்பைத் தத்துவார்த்தரீதியாக அணுக முயன்றார்.

எஸ்என்என் கேட்ட கேள்வியை நாமும் இங்கு கேட்டுக்கொள்வோம். மானுடர்களாகிய நாம் இந்த உலகத்தின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கிறோம் என்றாலும், நம்மை இதிலிருந்து செயற்கையாக விலக்கி வைத்துக்கொள்ளாமல் அறிவியல் அறிவு (புறவயத்தன்மையிலான அறிவு) என்று ஒன்று சாத்தியமா? மார்க்ஸ் இப்படி மானுடர்கள் அவர்களை விலக்கி வைத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. மானுடர்களின் உழைப்பு இந்த உலகத்தை மட்டுமல்லாமல் மானுடர்களையும் மாற்றி அமைக்கிறது என்றார் மார்க்ஸ். இப்படியாக இருக்கிறது என்றால், நாம் உழைப்பின் அறம் குறித்து அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.

நாம் அறிவியலை மானுட உழைப்பின் பகுதியாக ஏற்றுக்கொள்வோம் என்றால், நாம் நவீன அறிவியல் என்ற சிந்தனைமுறையில் அறத்தின் பங்கு குறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. இதைத்தான் எஸ்என்என் செய்தார். ஆனால், நவீன அறிவியல் அறம் குறித்து அக்கறை காட்டுகிறதா என்று எவர் கேட்டாலும் எப்படி அவர்கள் பழமைவாதிகளாகவும், நவீனச் சிந்தனைகளுக்கு எதிரானவர்களாகவும் பார்க்கப்படுகிறார்களோ அதேபோல் எஸ்என்என் பார்க்கப்பட்டார்.

இன்று நவீன அறிவியல் கொடுக்கும் எல்லா அதிகாரமும் யார் வசம் இருக்கிறது? மேல்வர்க்கத்தினர்தானே இந்த அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் ஏன் கண்மூடித்தனமாக அரசுமையவாத அறிவியலை ஊக்குவிக்கிறார்கள்? நவீன அரசும் அறிவியலையும் தேசப் பாதுகாப்பையும் கொண்டுதானே அதன் இருப்புக்கான நியாயத்தைப் பெருகிறது? இங்கே நவீன அரசுக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு பற்றிய எஸ்என்என் பார்வையை எடுத்துக்கொள்வோம். அவர் மிகச் சரியாக அறிவியல் எதிர்ப்பிலிருந்து பாசிஸம் பிறப்பதில்லை; நவீன அறிவியலின் முறையான குழந்தைதான் பாசிஸம் என்கிறார். நவீன அரசு அதன் இருப்புக்கான தார்மீகத்தை நவீன அறிவியலிலிருந்துதான் பெறுகிறது. மதக் கலவரங்களைக் காட்டிலும் அறிவியலின் பெயராலும் வளர்ச்சியின் பெயராலும் நடத்தப்பட்ட, நடத்தப்படும் படுகொலைகள்தான் அதிகம். நாம் இதைக் கவனத்தில் கொள்வதில்லை.

துயரம் என்னவென்றால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகளைத் தவறு என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அறிவியலின் பெயரால், வளர்ச்சியின் பெயரால் நடக்கும் உயிரிழப்புகளை நாம் கொலைகள் என்பதாகக்கூட உணர்வதில்லை. நாம் மூதலீட்டியத்தை எதிர்க்க நவீன அறிவியலில் உள்ளார்ந்த பண்புகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் எஸ்என்என். ஏனெனில், மூதலீட்டியமும் நவீனத்துவமும் உழைக்கும் மக்களின் தொழில்நுட்ப அறிவை அர்த்தமற்றதாக்கிவிட்டது. பல நூற்றாண்டுகளாக உழைத்துப் பெற்ற அவர்களுடைய அறிவு ஏன் அர்த்தமில்லாதவை ஆயின?

நவீன அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் உள்ளூர்வாதம் சார்ந்து காந்தி எதிர்க்கவில்லை. இதனால்தான், ‘மரபான தொழில்நுட்பம் அல்லது நவீன தொழில்நுட்பம் என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான கேள்வி இல்லை. இது பல்வேறு தொழில்நுட்ப மரபுகள் தொடர்பான கேள்வி’ என்றார் காந்தி. அதாவது, அறத்தளத்திலிருந்து நவீன அறிவியலை/தொழில்நுட்பத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார். அதனால்தான், அவரை மிகச் சுலபமாகப் பிரயோஜனமில்லாத யோகி என்று ஒதுக்கித்தள்ளுகிறார்கள். இதற்கு நிகரான நிலைப்பாட்டையே எஸ்என்என் மார்க்ஸிய அடிப்படையிலிருந்து முன்வைக்கிறார்.

அறிவியலின் அறம் குறித்து எஸ்என்என் எழுப்பிய கேள்வியானது மார்க்ஸிய அறத்தோடு இணைந்தது; பிறகு, அதிலிருந்து அவருடைய மரபான தமிழ் வைணவத்துக்குள் அதற்கான வேர்களைக் கண்டெடுக்கச் சென்றார். எஸ்என்என் அளவில் வைணவமானது இந்து மதம் என்ற குடையின் பகுதியான வெளிப்படவில்லை; இந்த மண்ணில் தோன்றிய சமயமாக வெளிப்படவில்லை; அது சமூக வெளிப்பாடாக வெளிப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை, வைணவத்தில் அறிவியல்ரீதியான அறமும் சமூகரீதியான அறமும் முழுமையாக ஒன்றிணையும் புள்ளிகளாகின்றன. இந்தியாவில் அறிவியலைச் சமூகவியல்ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் அணுகியவர்களில் எஸ்என்என் ஒரு முன்னோடி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் முன்வைத்த பார்வைகள் மீது நாம் விமர்சனங்களை முன்வைக்க முடியும்; சிலவற்றை நிராகரிக்க முடியும்; பலவற்றை வளர்த்தெடுக்க முடியும். முக்கியமான விஷயம் என்னவென்றால், வரும் தலைமுறையினர் அவரோடு உரையாடுவதற்கான வாய்ப்பை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். இதுவே அவரது பெரும் சாதனை.

- சீனிவாச ராமாநுஜம், ‘இந்து மதம்: ஒரு விசாரணை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x