Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

முன்னுதாரண நாடுகளின் கதை

தினந்தோறும் கரோனா மரணங்கள், தொற்றுகள் தொடர்பான செய்திகளே அதிகம் வருகின்றன. உலக நாடுகள் பலவும் தங்களுக்கே உரிய வழிகளில் கரோனாவை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் பிற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும் வெற்றிக் கதைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தைவான்

சீனாவுக்கு அருகில் இருக்கும் தைவான் 2.36 கோடி மக்கள்தொகையைக் கொண்டது. இங்கேஇதுவரை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை4,322; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23.வூஹானில் ஆரம்பக் கட்டத் தொற்றுகள் கண்டறியப்பட்டதுமே தைவான் விழித்துக்கொண்டது. வூஹானிலிருந்து வரும் பயணிகளை தைவான் தனிமைப்படுத்தியது. 2003-ல் சார்ஸ்வைரஸால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியிருந்த தைவானுக்கு அந்த முன்னனுபவம் கைகொடுத்தது. மருத்துவக் கட்டமைப்பை தைவான் வலுப்படுத்தியது. குடிமக்களை அதிக அளவில் பரிசோதனைக்கு உள்ளாக்கியது. உலகத்தில் பல நாடுகளையும் முந்திக்கொண்டு தைவான் முகக்கவசங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தது. பொதுமுடக்கத்தை அமல்படுத்தாமலேயே கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

நியூசிலாந்து

2020 ஜூன் மாதமே கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியை அறிவித்த நாடு நியூஸிலாந்து. இதுவரை அங்கே ஏற்பட்டிருக்கும் தொற்றுகளின் எண்ணிக்கை மொத்தமே 2,668. இவர்களில் 26 பேர் கரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். கரோனா பரவலானது பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளிலிருந்து வரும் பயணிகளை இரண்டு வாரம் தனிமைப்படுத்த உத்தரவிட்ட நியூஸிலாந்து பிரதமர் நிலவரங்களை மக்களிடம் தெளிவாக எடுத்துக்கூறினார். அரசு ஒளிவுமறைவின்றிச் செயல்பட்டது. மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஒவ்வொரு தொற்றாளரின் தொடர்பு வளையமும் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. வெளியிலிருந்து தொற்று உள்ளே வர முடியாதஅளவிலும் சமூகப்பரவல் ஏற்படாத அளவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. விளைவு,தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பே நியூஸிலாந்து கரோனாவை வெற்றிகொண்டது. இரண்டாம் அலையிலும்கூட இப்போது அங்கே தொற்று மிகக்குறைவாகவே காணப்படுகிறது. மே 23 அன்று 6 பேருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா

கரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்டநாடு அமெரிக்கா. இதற்குக் காரணம் முன்னாள்அதிபர் டொனால்டு ட்ரம்ப். பொது முடக்கங்களுக்கு எதிராகப் பேசியதில் ஆரம்பித்துமுகக்கவசம் போடாமல் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்றது வரை ஒரு மோசமான முன்னுதாரணமாக அவர் செயல்பட்டார். “தடுப்பூசி இல்லாமலேயே கரோனா போய்விடும்” என்றார். அமெரிக்காவில் இதுவரை 3,38,96,660 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது; 6,04,087 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தபோது தனது ஆட்சியின் முதல் நூறு நாட்களுக்குள் 10 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால், அந்தக் கால அளவில் 22 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகத் தொற்றுகள், இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஜனவரி 8 அன்றுஒரு நாளில் உச்ச அளவாக 3,04,214 பேருக்குத்தொற்று ஏற்பட்டது; மே 22 அன்று 20,425 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. ஜனவரி 12-ல்ஒரு நாளில் உச்ச அளவாக 4,468 பேர் உயிரிழந்தார்கள் என்றால் மே 23-ல் இறப்புஎண்ணிக்கை 228-ஆகக் குறைந்திருக்கிறது. இதுபைடன் அரசுக்குக் கிடைத்த வெற்றி. அதன்விளைவாகத்தான் முழுமையாகத் தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம்அணிந்துகொள்ளத் தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல்

தன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60%பேருக்கு ஒரு டோஸும் 57% பேருக்கு இரண்டுடோஸ்களையும் செலுத்திய இஸ்ரேல் கரோனாவுக்கு எதிரான போரில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியிருக்கிறது. முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அது ‘பச்சைக் கடவுச்சீட்டு’ (Green Passport) வழங்கியது. அந்தக் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் திருவிழாக்கள், மணவிழாக்கள், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் போன்றவற்றுக்குச் செல்லலாம். வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தின் காரணமாக மக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியில் வரலாம்என்று இந்த ஆண்டு ஏப்ரல் 18 அன்று இஸ்ரேல் அரசு அறிவித்தது.

பிரிட்டன்

அமெரிக்கா, இந்தியாவைப் போலவே கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் பிரிட்டனும் ஒன்று. தொற்றுகளைப் பொறுத்தவரை 44,62,538 தொற்றுகளுடன் உலகிலேயே 7-வது இடத்திலும்; இறப்புகளைப் பொறுத்தவரை 1,27,721 இறப்புகளுடன் உலகிலேயே 4-வது இடத்திலும் இருக்கும் நாடு அது. எனினும், கடுமையான பொதுமுடக்கம், தடுப்பூசி இயக்கம் போன்றவற்றை அந்நாடு முடுக்கிவிட்டது. கிட்டத்தட்ட 50% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 50 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 95% பேருக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறது. ஜனவரி 8 அன்று ஒரு நாள் உச்சமாக 67,928 என்று இருந்த தொற்றுகள் மே 23 என்று 2,235-ஆகக் குறைந்தது; ஜனவரி 20 அன்று ஒரு நாள் உச்சமாக 1,823 என்று இருந்த இறப்பு எண்ணிக்கை மே 22 அன்று 6-ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் கரோனாவிடமிருந்து விடுபட்டுவிடுவோம் என்று துணிச்சலுடன் பிரிட்டன் அறிவித்திருக்கிறது.

சீனா

கரோனா வைரஸ் தோன்றிய இடமான சீனாவை வெகு காலமாக உலகமே அச்சத்துடன் பார்த்துவந்தது. ஆரம்பக் கட்ட தடுமாற்றங்கள், அதிகரித்த தொற்றுகள், இறப்புகளை அடுத்து சீனா சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்தது. மருத்துவக் கட்டமைப்பை மிக விரைவாக வலுப்படுத்தியது; புதிய மருத்துவமனைகளை விரைந்து உருவாக்கியது. கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இவற்றின் விளைவாக, தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பே கரோனா தொற்றை சீனா வெகுவாகக் கட்டுப்படுத்தியது. தடுப்பூசியைப் பொறுத்தவரை இதுவரை 51.1 கோடி டோஸ்கள் தடுப்பூசி போட்டிருக்கிறது. சீனா தினமும் 1.4 கோடி பேருக்குத் தடுப்பூசி போடுகிறது. அச்சத்துடன் பார்க்கப்பட்ட நிலையிலிருந்து இன்று முன்னுதாரணமாகப் பார்க்கப்படும் நிலைக்கு சீனா உயர்ந்திருக்கிறது.

கரோனா வைரஸ் புதுப் புது வடிவம் பெற்றுவருவதாலும் அதன் வீரியம் அதிகரித்துவருவதாலும் அதற்கு எதிராகப் பெறும் வெற்றிகளெல்லாம் தற்காலிகமானவையே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கரோனா பெருந்தொற்றை சில நாடுகள் மட்டும் வெற்றிகரமாகக் கையாண்டால் போதாது. முன்னுதாரண நாடுகளைப் பின்பற்றி அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போரிட்டால்தான் இந்தப் போரை வெல்ல முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x