Published : 24 May 2021 03:10 am

Updated : 24 May 2021 06:06 am

 

Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 06:06 AM

சுந்தர்லால் பகுகுணா: ஒரு காந்திய வாழ்க்கை

sundarlal-bahuguna

இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழலியர்களுள் ஒருவரும் காந்தியருமான சுந்தர்லால் பகுகுணா (94) கடந்த வெள்ளியன்று கரோனாவுக்குப் பலியானார். இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களின் யுகம் ஒன்று அவருடைய மறைவோடு முடிவுக்கு வருகிறது. ராஜேந்திர சிங், வந்தனா சிவா போன்ற பல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் பகுகுணா. அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 1970-களில் உத்தராகண்டில் உருவான சிப்கோ இயக்கம்தான். உலக அளவில் இது ஒரு முன்னோடி சுற்றுச்சூழல் இயக்கமாகும்.

இன்றைய உத்தரகாண்டின் தேரி கர்வால் மாவட்டத்தின் மரோடா கிராமத்தில் ஜனவரி 9, 1927-ல் சுந்தர்லால் பகுகுணா பிறந்தார். சிறு வயதிலேயே காந்தி மீது ஈர்ப்புகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய தேரி கர்வால் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவ் சுமன் பகுகுணாவின் ஆதர்சங்களுள் ஒருவர். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் சுந்தர்லால் பகுகுணா காங்கிரஸில் இருந்தார். வினோபா பாவேவாலும் அவருடைய பூதான இயக்கத்தாலும் பகுகுணா வெகுவாக ஈர்க்கப்பட்டார்.


கிராம மக்களிடையேதான் வாழ வேண்டும் என்ற நிபந்தனையுடன் விமலாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். சிப்கோ இயக்கத்துக்கு முன்பு மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் பகுகுணா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சாராய மாஃபியாக்கள் எப்படி அந்தப் பிரதேசத்திலுள்ள பட்டியலின மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருக்கின்றன என்பதையும், இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களே என்பதையும் கண்ட பகுகுணா அந்தப் பெண்களுக்காக ஒரு ஆசிரமம் தொடங்கினார். மதுவுக்கு எதிராக பகுகுணா 1968-ல் நடத்திய போராட்டமானது 1971-ல் மது விற்பனைக்கு உத்தர பிரதேச மாநில அரசு தடை விதிப்பதற்கு முக்கியமான காரணமானது. பிறகு, சட்டத்தின் வாசல் வழியே மது அந்த மாநிலத்துக்குள் நுழைந்தது என்பது வேறு விஷயம்.

சிப்கோ இயக்கத்தின் பின்னணி

உத்தராகண்ட் மாநிலம் இயற்கை எழில் பொங்கும் இமயமலைப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய நதிகளுள் ஒன்றான கங்கை உற்பத்தியாகி ஓடும் பகுதி அது. அதே நேரத்தில், நிலச் சரிவு, வெள்ளம் என்ற இயற்கைப் பேரிடங்களைத் தொடர்ந்து அனுபவித்துவரும் பிராந்தியம் அது. சுதந்திரத்துக்கு முன்பும் சரி சுதந்திரம் அடைந்த பிறகும் சரி, வளர்ச்சியின் பேரில் அங்குள்ள இயற்கை வளங்கள் வெகு வேகமாகச் சுரண்டப்பட்டன. மரங்களும் அதிக அளவில் வெட்டப்பட்டன. இந்தச் சூழலில், 1970-ல் அலக்நந்தா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி சுற்றுப்புற கிராமங்களை மூழ்கடித்தது. தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. உயிரிழப்பு, வீடுவாசல் இழப்பு என்று அப்போது ஏற்பட்ட சேதம் அளவிடப்பட முடியாதது. மரங்கள் வெட்டப்படுவதற்கும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். இந்தப் பின்னணியில்தான் சிப்கோ இயக்கத்தைப் பார்க்க வேண்டும்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருக்கிறது என்ற அக்கறை சிறிதும் இன்றி அப்போதைய அரசு அந்த மக்களைக் கலந்தாலோசிக்காமல் தனியார் நிறுவனங்களுக்குக் காடுகளையும் தாரைவார்த்துக்கொண்டிருந்தது. உள்ளூர் மக்களும் மரம் வெட்டிகொண்டிருந்தார்கள் என்றாலும் அது விவசாய உபகரணங்கள் செய்வதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமாகத்தான் இருந்தது. அது மிகச் சிறிய அளவிலான கொடுக்கல்வாங்கல் முறை, காடுகளுக்கும் அங்கே வசிக்கும் மனிதர்களுக்கும் இடையில் நீண்ட காலம் நிலவிய முறை அது. மக்களின் உரிமையை மதிக்காமல் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மரம் வெட்டும் உரிமையை வழங்கியது மாநில அரசு. அதை எதிர்த்து சமோலி மாவட்ட மக்களிடையே உருவானதுதான் சிப்கோ இயக்கம். ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அது எதுவும் பலனளிக்காததால் சிப்கோ இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான சந்தி பிரசாத் பட் ஒரு யோசனை கூறினார். மரம் வெட்டும் ஆட்கள் வரும்போது எல்லோரும் மரங்களை அணைத்துக்கொண்டு நிற்பது. இந்தியில் ‘சிப்கோ’ என்ற சொல்லுக்குக் கட்டிப்பிடித்தல், அணைத்தல் என்பது பொருள். இப்படிப் பிறந்ததுதான் இந்த இயக்கம். சந்தி பிரசாத் பட், சுந்தர்லால் பகுகுணா, கௌரா தேவி போன்றோர் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

மரங்களைக் கட்டிப்பிடித்தல்

நிறுவனங்களின் கூலித் தொழிலாளர்கள் மரம் வெட்ட வரும்போது ஆண்கள், பெண்கள் எல்லோரும் மரங்களைக் கட்டிக்கொண்டு நின்றார்கள். மரவெட்டிகளால் ஏதும் செய்ய முடியவில்லை. கூடிய விரைவில் அந்தப் பிரதேசம் முழுக்க இந்த இயக்கம் பரவியது. காந்திய முறையில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் பிறந்ததை இந்தியாவே வேடிக்கை பார்த்தது. பகுகுணாவும் அவரது மனைவியும் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். சிப்கோ இயக்கத்தின்போது காஷ்மீர் முதல் கோஹிமா வரை 4,800 கி.மீ. பாத யாத்திரையை பகுகுணா மேற்கொண்டபோது மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பலரும் அவருடன் சென்று, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிப்கோ இயக்கம் பெருவெற்றி அடைந்தது.

சிப்கோ இயக்கத்தின் சிறப்பு என்னவென்றால் அது ஒற்றைத் தலைமையைக் கொண்டதல்ல; கூடவே பெருமளவில் பெண்களை ஈடுபடுத்திய இயக்கம் அது. மரத்தைக் கட்டிக்கொண்டு பெண்கள் நிற்கும் ஒரு புகைப்படம் அந்த இயக்கத்தின் வரலாற்றைச் சொல்லிவிடும். நெருக்கடி நிலையின்போது சிப்கோ இயக்கம் தடைபட்டது என்றாலும் 1977-லிருந்து மறுபடியும் தொடங்கியது. இந்திரா காந்தி மற்படியும் ஆட்சிக்கு வந்தபோது பகுகுணாவை வரவழைத்துச் சந்தித்தார். அதன் விளைவாக, இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கு மேல் மரங்களை வெட்டுவதற்கு 15 ஆண்டு காலத் தடையை 1981-ல் விதித்தார். இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சுற்றுச்சூழல் மீது பெரும் அக்கறை கொண்டிருந்தவர் என்றால் அது இந்திரா காந்திதான். அதற்கு சாலிம் அலி, சுந்தர்லால் பகுகுணா போன்றோர் பங்களித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

சிப்கோ இயக்கத்தோடு பகுகுணா ஓய்ந்துவிடவில்லை. பாகீரதி நதியின் குறுக்கே தேரி அணை கட்டப்படுவதை எதிர்த்து 1995-ல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த அணை உருவாக்கும் பாதிப்புகள் குறித்து ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்ததை அடுத்து 45-வது நாளில் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார். தேவ கவுடா ஆட்சிக் காலத்திலும் அந்த அணையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். எனினும், அந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 2004-ல் நிரப்பப்பட்டது.

“எனக்குத் தெரிந்தவரை ஒட்டுமொத்த உலகத்திலேயே மரங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் சுந்தர்லால் பகுகுணாதான்” என்று ‘மரங்களின் மனிதர்’ ரிச்சர்ட் பார்பே ஒருமுறை குறிப்பிட்டார். ‘சுற்றுச்சூழல்தான் நீடித்த பொருளாதாரம்’ என்ற முழக்கத்தை சிப்கோ இயக்கத்தின்போது பகுகுணா உருவாக்கினார். வளர்ச்சியைக் காரணம் காட்டி காடு, மலை உள்ளிட்ட இயற்கை வளங்கள் எப்போதையும் விட அதிகமாகச் சுரண்டப்படும் தற்காலத்தில், அதனால் எப்போதையும்விட அதிகமாக நாம் பாதிப்புக்குள்ளாகிக்கொண்டிருக்கும் சூழலில் சுந்தர்லால் பகுகுணாவின் முழக்கம் இப்போதுதான் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in


ஒரு காந்திய வாழ்க்கைசுந்தர்லால் பகுகுணாகரோனாSundarlal bahuguna

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x