Published : 09 Dec 2015 09:10 AM
Last Updated : 09 Dec 2015 09:10 AM

வீடு திரும்புவோர் பார்வைக்கு...

வெள்ளம் வடிந்த இடங்களில் வீடுகளில் மீண்டும் குடியேறுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

# முதலில் ஆண்கள் நுழைந்து வீட்டை ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.

# நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து, முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.

#மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியனின் துணையுடன் செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.

# அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையில் தேவையான காய்ச்சல்/ வயிற்றுப் போக்குக்கான மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.

# இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரையே குடியுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். வீட்டில் வைத்துவிட்டுப் போன மாத்திரைகள் கெட்டிருக்கிறதா என்று பார்த்து அவற்றை நீக்கிவிடவும்.

#மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். கொஞ்சம் சந்தேகம் தோன்றி னாலும் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் போயிருக்கும்.

# முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.

# வீட்டில் வைத்திருந்த சான்றிதழ்கள், குடும்ப ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், மின்வாரிய நுகர்வுப் பதிவேடு, சமையல் எரிவாயு இணைப்புக்கான பதிவேடு ஆகியவற்றைச் சேகரித்து அவற்றுக்குச் சேதம் ஏற்பட்டிருந்தால் நகல் அட்டை வாங்கிக்கொள்ளுங்கள்.

# இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும், நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.

# குடை, ரெயின்கோட், காலணிகள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருப்பது நலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x