Published : 18 May 2021 03:11 am

Updated : 18 May 2021 05:01 am

 

Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 05:01 AM

பாஜகவுக்கு 2022 தேர்தலில் உபி பதிலளிக்கும்: அகிலேஷ் யாதவ் பேட்டி

akilesh-yadav-interview

கரோனா பெருந்தொற்று உத்தர பிரதேசத்தின் கிராமப்புறங்களில் மிக மோசமான சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்கிறார் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ். கரோனா பெருந்தொற்று பற்றிய உண்மையை மக்களிடையே மறைத்ததால்தான் பலரும் கும்ப மேளாவுக்குச் சென்றார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

கரோனாவால் இறந்தவர்கள் என்று கருதப்படுபவர்களின் சடலங்கள் கங்கையிலும் யமுனையிலும் மிதக்கின்றன அல்லவா? பெருந்தொற்று மேலாண்மையைப் பற்றி அந்தச் சடலங்கள் உணர்த்தும் உண்மை என்ன?


திட்டமிடலைப் பற்றியா பேசுகிறீர்கள்? அட, திட்டமிடலை விடுங்கள்; பாஜக விரும்பியிருந்தால் எங்கள் எழுத்தாளர்கள், கவிஞர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருந்திருக்க முடியும். 1918-ல் ஸ்பானிஷ் ஃப்ளூ பெருந்தொற்று தாக்கியபோது சூர்யகாந்த் திரிபாதி நீராளா இப்படி எழுதியிருந்தார்: ‘பார்வைக்கு எட்டும் தொலைவு வரை சடலங்கள், மேலும் சடலங்கள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகின்றன.’ ஆனால், வரலாற்றிலிருந்தோ தனது தவறுகளிலிருந்தோ பாஜக எந்தப் பாடத்தையும் கற்கவில்லை.

கரோனா பெருந்தொற்றை உத்தர பிரதேசம், பிஹார், பிற வட இந்திய மாநிலங்களின் குக்கிராமங்களுக்கெல்லாம் கொண்டுசென்றதும் கரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணமான மிகப் பெரும் நிகழ்வாகவும் கும்ப மேளாவைப் பலரும் கருதுகின்றனர். நீங்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களா?

மக்களின் மதநம்பிக்கையுடன் விளையாடிவிட்டார்கள் என்றுதான் நான் சொல்வேன். அரசு உணர்த்திய செய்தி மிகவும் தவறானது. கரோனாவைத் தாங்கள் வென்றுவிட்டதாக பாஜக அறிவித்தது. தேர்தல்களைத் தவிர பாஜகவால் எதையும் திட்டமிட முடியாது. அரசாங்கத்தை நம்பியதால் அப்பாவி மக்கள் கும்ப மேளாவுக்குச் சென்றார்கள், ஆனால் உண்மையானது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. ஜனவரி மாதம் டாவோஸ் நகரத்தில் இந்தியா கரோனாவை வென்றுவிட்டது என்றும், 150 நாடுகளுக்கு இந்தியா உதவிசெய்திருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டதை நினைவுகூருங்கள். இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் காண முடியும் – பிற நாடுகள் நமக்கு உதவிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிவரை மருத்துவக் கட்டமைப்பின் மோசமான நிலைமையைக் கூறும் விதத்தில் ஏராளமான காணொளிகள் பரவிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்கு எந்த மாதிரியான எதிர்வினைகள் கிடைக்கின்றன?

உத்தர பிரதேசத்தில் சுகாதாரச் சேவைகள் இயங்கிக்கொண்டிருப்பதற்குக் காரணம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர்தான். லக்னோவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை கரோனா மருத்துவமனையாக மாற்றலாம் என்று ஏப்ரல் தொடக்கத்திலேயே கூறினேன். அதைச் சாத்தியப்படுத்துவதற்கு முதல்வருக்கு மூன்று வாரங்கள் ஆகியிருக்கின்றன. கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசம். கடந்த ஆண்டிலிருந்து பாஜக எதையும் திட்டமிடவில்லை. உத்தர பிரதேசத்தில் உங்கள் பரிதவிப்பை வெளிப்படுத்துவதும்கூடக் குற்றமே.

உத்தர பிரதேசத்தில் ஏழைகளுக்கு மருத்துவ சேவை அளிப்பது எப்போதுமே சவாலாகவும் பிரச்சினையாகவும் இருந்திருக்கிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகள் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் தற்போது இந்தப் பெரிய மாநிலத்தின் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

ஒரு பெருந்தொற்றானது இரண்டுக்கும் மேற்பட்ட அலைகளைக் கொண்டிருக்கும் என்று வரலாறு நமக்குக் கூறுகிறது. நான் ஒரு குழுவை அமைத்திருப்பேன். அந்தக் குழுவானது ஆக்ஸிஜன் திறனை அதிகரிப்பதிலும் இலவசமாகத் தடுப்பூசி போடுவதிலும் கவனம் செலுத்துவதாக அமைந்திருக்கும். சொத்துகளை அபகரித்துவிடுவேன் என்றும், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றும் மக்களை நான் அச்சுறுத்த மாட்டேன். பிரதமரால் மார்ச் மாதம் அமைக்கப்பட்ட குழு ஒன்று ‘இரண்டாவது அலை’ குறித்து எச்சரித்தது. ஆனால், தேர்தல்கள் காரணமாக யாரும் அந்த எச்சரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. நிபுணர்களின் கருத்துகளுக்கு செவிமடுப்பது முக்கியம். பெருந்தொற்று என்பது உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல; வேலைவாய்ப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற கடுமையான சமூகப் பிரச்சினைகளுக்கு அது இட்டுச்செல்கிறது. பிற நோய்களைக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை, மக்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. குடும்ப வன்முறையும் துஷ்பிரயோகமும் அதிகரித்திருப்பதால் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் உதவி கேட்கும் படியிலான தொலைபேசி எண்கள் உருவாக்கப்பட வேண்டும்; பிற உதவிகளும் செய்யப்பட வேண்டும். உண்மை நிலவரத்தைப் பற்றி அறியும்படியிலான துல்லியமான தகவல்கள் திரட்டப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் யோகி ஆதித்யநாத் அரசைப் பொறுப்பாக்குவதற்கு உத்தர பிரதேசத்தின் எதிர்க்கட்சியினர் தவறிவிட்டதைப் போல தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதும் பாஜகவுக்கு மாற்று ஒன்றை அவர்களால் முன்வைக்க முடியாததும்தான் இதற்குக் காரணமா?

எந்த ஜனநாயகத்திலுமே ஒரு அரசாங்கத்தைப் பொறுப்பாளியாக ஆக்குவதற்கு நான்கு தூண்கள் வேண்டும். அப்படி நடந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு எந்த முயற்சியையும் எடுக்கத் தயாராக இருக்கிறது பாஜக. உத்தர பிரதேசத்தின் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள் - சமாஜ்வாதி கட்சி கணிசமாக வென்றிருக்கிறது - நாங்கள் எங்கள் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். சமாஜ்வாதி கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் மக்களுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், இதை நாங்கள் விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. எதிர்க்கட்சியினர் பலவீனமாக இருக்கிறது என்று சொல்வது பாஜகதான்.

உத்தர பிரதேசச் சட்டமன்றத்துக்கான தேர்தல் 2022-ல்நடக்கவிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் நீங்கள் வைத்த கூட்டணி படுதோல்வி அடைந்துவிட்டது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனித்துப் போட்டியிடுமா?

நான் பல தடவை சொல்லிவிட்டேன், சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். சிறிய கட்சிகளுடன் நாங்கள் சில உடன்பாடுகள் செய்துகொள்வோம்.

வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி பெற்ற பெருவெற்றி சொல்லும் அரசியல் செய்தி என்ன?

முதலாவதாக, வங்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி முழு மூச்சில் செயல்பட்டும் தோல்வியடைந்துவிட்டது. இரண்டாவதாக, பிளவுபடுத்துதலையும் அவமானப்படுத்துதலையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் எப்போதுமே பலனளிக்காது. இன்னும் நிறைய பாடங்கள் உள்ளன. தற்போதைக்கு அவற்றை விரிவாக ஆராய்வது பொருத்தமாக இருக்காது.

பிராந்தியக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் தங்களுக்குள்ள செல்வாக்குடன் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதானா?

இந்தியாவின் அடித்தளமே அதன் கூட்டாட்சி அமைப்புதான். முதலாவதாக, மாநிலத்துக்கான போராக இருக்கும். அடுத்தது, நாட்டுக்கான போராக இருக்கும். பாஜக தனது சித்தாந்தத்தை எல்லோர் மீதும் திணிக்க விரும்புகிறது; ஆனால், இந்தியா என்பது மிகுந்த பன்மைத்துவம் வாய்ந்த நாடு. ஒரு மொழி, ஒரு சமூகம், ஒரு மாநிலம் அல்லது ஒரு பகுதி மற்றதைவிடச் சிறந்தது என்று நாம் சொல்லலாகாது. நாம் அனைவரும் சரிசமமானவர்கள்; ஆனால், இந்தியாவின் அரசியலில் உத்தர பிரதேசம் முக்கியமான பங்கு வகிக்கும்; 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உத்தர பிரதேசம் பலத்த அடியைக் கொடுக்கும்.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசைஅகிலேஷ் யாதவ் பேட்டிஅகிலேஷ் யாதவ்பாஜகAkilesh yadav interview

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x