Last Updated : 17 May, 2021 04:10 PM

2  

Published : 17 May 2021 04:10 PM
Last Updated : 17 May 2021 04:10 PM

கரோனாவும், பெண்களின் வேலை இழப்பும்!

‘‘கடந்த 22 ஆண்டுகளாக உலக அளவில் வறுமை குறைந்திருந்தது. அதன்பின் கரோனா வந்தது. இதன் காரணமாக வேலை இழப்பு, வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் பெண்களுக்கு.

பலவீனமான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள், ஏழ்மையான பலரைப் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளியுள்ளன” என்கிறார் ஐ.நா.வின் மூத்த ஆராய்ச்சியாளாரான ஜினெத் அச்கோனா.

21ஆம் நூற்றாண்டுக்கான கரும்புள்ளியாக மாறியுள்ள கரோனா நெருக்கடியால் உழைக்கும் பெண்கள் மீண்டும் வறுமை நிலைக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். மூன்று வேளை உணவு பல வீடுகளில் இரண்டு வேளையாக மாறியிருக்கிறது. இதில் பெண்கள் பட்டினியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். வறுமையும், வேலை நிரந்தரமின்மையும் பெண்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தொழில் துறையில் அவர்கள் அளித்த பங்கேற்பையும் குறைத்திருக்கிறது.

கடந்த 15 வருடங்களாக இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் மெல்லக் குறைந்துகொண்டே வருகிறது. இந்தகைய நிலையில் கரோனா என்னும் பெருந்தொற்று பெண்கள் பணிக்குச் செல்வதற்கான வாய்ப்பினையும், சூழலையும் எதிர்மறையாக மாற்றியுள்ளது.

கரோனா தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும் 4.7 கோடிக்கும் அதிகமான பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சர்வதேச தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம். இந்நிறுவனம் 5 நாடுகளில் நடத்திய கருத்துக்கணிப்பில் கரோனா காலத்தில் வேலை இழப்பு, சம்பளக் குறைவு, அளவுக்கு அதிகமான வீட்டு வேலை காரணமாக சுமார் 43% பெண்கள் பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

கரோனாவால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி பாதியாகக் குறைந்திருக்கிறது. பாலினப் பாகுபாடு இந்த வேலையிழப்பிலும் முக்கியப் புள்ளியாக அமைந்திருக்கிறது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் முழுவதும் ஆண்களைவிட, பெண்களே அதிகப்படியான வேலையிழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். இந்தியாவும் அதைத்தான் பிரதிபலித்துள்ளது.

தொடர்ந்து குறையும் இந்தியப் பெண்களின் பங்களிப்பு

கரோனா காலம் மட்டுமல்லாது அதற்கு முந்தைய ஆண்டுகளிலிருந்தே இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்திருக்கிறது. 2000ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் 25.6% ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை அடுத்த 19 ஆண்டுகளில் அதாவது 2019ஆம் ஆண்டில் 20.3% ஆகக் குறைந்துவிட்டதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பைச் சந்திக்கும் குறு, சிறு நிறுவனங்கள் பல, தங்களது நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்படுவதால் ஆட்குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஒரு நிறுவனத்தில் 5 பேர் நீக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களில் 3 பேர் பெண் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். நிறுவனங்களில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் பணியமர்த்தப்படாத சூழலில், கரோனாவைக் காரணம் காட்டி பெண்கள் தொடர்ந்து பணியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும், ஊதிய உயர்வுக்குக் காத்திருந்த பெண்களுக்கு இந்த கரோனா காலம் அதனை மறக்கடிக்கச் செய்துள்ளது. தங்களின் சம்பள உயர்வை எதிர்பார்க்காமல் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனங்கள் சொல்லாமல் சொல்லி வருகின்றன.

ஊரடங்கு காலகட்டங்களில் பெண்கள் வேலையிழப்பு குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில் 19 சதவீதப் பெண்களுக்கு வேலையே கிடைக்கவில்லை என்றும், 40%க்கும் அதிகமானவர்கள் நிரந்தர வேலையை இழந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது, ஊரடங்கில் ஏழு மடங்குக்கு அதிகமாக பெண்கள் வேலை இழப்பைச் சந்திக்கிறார்கள். பல பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாத சூழலும் உருவாகியுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டில் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த ஊரடங்கால் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு பெருமளவு குறைந்துவிட்டது என்றும், இதன் காரணமாகத் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என்றும் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

கைவிடப்பட்ட அமைப்பு சாரா பெண்கள்

மிகவும் நெருக்கடியான இக்காலகட்டத்தில் அமைப்பு சாரா பெண்களின் நிலையைக் குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் வேலைக்குச் சேரும்போது நிர்ணயிக்கப்பட்ட அதே சம்பளத்தையே பல வருடங்களாக அப்பெண்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் இந்த கரோனா காலத்தில் அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரியும் பெண்கள் பலர் தங்களது பணிகளை இழந்திருக்கிறார்கள்.

வீட்டு வேலை, பீடித் தொழில், பின்னலாடை நிறுவனங்கள், தேயிலைத் தோட்டப் பெண்கள், கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள் எனப் பல துறைகளில் பெண்கள் வேலை இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள்.

“சில மாதங்களுக்கு முன்னர்தான் புற்றுநோயால் எனது கணவரை இழந்தேன். கணவரின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தின் ஒட்டுமொத்த பாரமும் என் மீது விழுந்துள்ளது. மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட எனது இரண்டு குழந்தைகளையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஊரடங்கு காலம் எனக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று அச்சம் காரணமாக நிறைய இடங்களில் வீட்டு வேலைக்குச் செல்ல முடிவதில்லை. தற்போது இரண்டு வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறேன். எனினும் அந்த வருமானம் எனது குடும்பத்தைக் கவனிக்கவும், வீட்டு வாடகை கொடுக்கவும் போதுமானதாக இல்லை” என்று சென்னை பெரம்பூரில் வசிக்கும் தேவி தன் கையறு நிலையை வெளிப்படுத்தினார்.

தேவி மட்டுமல்ல, அமைப்பு சாரா வேலைகளில் ஈடுபடும் பெரும்பாலான பெண்கள் இந்த ஊரடங்கு காலகட்டங்களில் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கான அரசியல் அதிகாரம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தும் சக்தி அமைப்பின் துணை நிறுவனர் தாரா கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘நெருக்கடி காலங்களைப் பொறுத்தவரை அடித்தட்டில் இருக்கும் மக்களின் வேலைகள்தான் முதலில் பறிக்கப்படும். உதாரணத்துக்கு வீட்டு வேலை செய்பவர்கள், கட்டிடத் தொழிலாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டாம் உலகப் போரின்போது ஆண்கள் போரில் ஈடுபட்டபோது பெண்கள் எல்லாம் தொழிற்சாலைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். போர் முடிந்து திரும்பியதும் அந்த வேலையை ஆண்கள் எடுத்துக் கொண்டார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை அவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாகத்தான் உள்ளனர். அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரியும் பெண்களுக்குக் குறைந்த அளவு சம்பளமே அளிக்கப்படுகிறது. பணி நீக்கம் என்று வரும்போது முதலில் இப்பெண்கள்தான் வேலை இழக்கிறார்கள். ஏனென்றால் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளைக் கவனிப்பதுதான் முதல் கடமை என இந்தச் சமூகம் கட்டமைத்துள்ளது. இந்தக் காரணத்தால்தான் படித்த பெண்களும் அமைப்பு சாரா தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பாதி நேரம் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு மீதி நேரம் துணி தைக்கும் பணியைச் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டே அமைப்பு சாரா தொழில்களில் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு இருக்க, அமைப்பு சாரா தொழில்களின் நலனில் நாம் திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். இப்பெண்கள் அனைவரும் அமைப்பு சார்ந்த தொழில்களின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் உள்நாட்டு வளர்ச்சி, தனி நபர் வருமானம் என அனைத்தும் அதிகரிக்கும்.

பகுதி நேரம் வேலை செய்தாலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு வரவேண்டும். ஒரு நிறுவனத்தில் 100 பெண்கள் பணிபுரிந்தால் அவர்களது சிறு குழந்தைகளுக்கான பாராமரிப்பு மையங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். பெண்களைப் பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு எம்மாதிரியான சலுகைகள் தருகிறார்களோ அவ்வாறே அமைப்பு சார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் படித்த பெண்கள் நல்ல சம்பளத்ததுடன் பணி சார்ந்த பாதுகாப்பையும் பெறுவார்கள். இவை எல்லாம் அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான படித்த பெண்கள் இருக்கும்போது 30 சதவீதம்தான் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழ வேண்டும்.

பெண்களின் தலையெழுத்து மாற வேண்டும் என்றால், அவர்களை அமைப்பு சார் நிறுவனங்களில் இணைக்க வேண்டும். அதற்கான திட்டங்களை அரசுதான் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்கிறார் தாரா கிருஷ்ணசாமி.

என்ன தேவை?

கடந்த 20 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்கள் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை வெறும் புள்ளிவிவரங்களாகக் கடக்காமல் அதன் பின்னணியில் உள்ள உளவியல் சிக்கல்களைக் களம் கண்டு தீர்க்க வேண்டும். குடும்பமா? வேலையா? என்ற குழப்பத்தில் சிக்கியுள்ள இளம் பெண்களுக்குத் தெளிவான பாதையைக் காட்டும் பொறுப்பும், அவசியமும் அரசுக்கு உள்ளது.

அமைப்பு சாரா பெண்களைப் பொறுத்தவரை நீண்ட காலமாக அவர்களது தேவைகளாக ஒலிக்கும் மருத்துவக் காப்பீடு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்குதல், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அவர்களது உழைப்புக்கான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கான சம உரிமை, சம வாய்ப்பு, சம ஊதியம் என்பதை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அதைச் சாத்தியமாக்குவதற்கான முயற்சியில் மகளிர் நல வாரியங்கள் செயல்பட வேண்டும். அதற்கு நாட்டிலுள்ள பெண் அமைப்புகள் எல்லாம் பிரிந்து கிடக்காமல் ஒரே குடையின் கீழ் சேர வேண்டும்.

மேலும், அதிகாரத்துக்கு அஞ்சாமல், பணியிடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு சம அளவில் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரம் உச்சத்தை அடைய முடியும். இதற்குத் தடையாக இருக்கும் பழமைவாதங்கள் அகற்றப்பட வேண்டும். சமூக மாற்றங்கள் நாடு முழுவதும் நிகழ வேண்டும்.

கரோனாவால் பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை பெண்கள் எதிர்கொண்டு இருக்கிறார்கள். பல பெண்கள் மீண்டும் வீடுகளுக்குள் அடைபட்டுக் கொண்டிருக்கும் சூழலை கரோனா ஏற்படுத்தியுள்ளது. நகர்தலில்தான் பெண்களின் முன்னேற்றம் உள்ளது. இருண்ட, நீண்ட சுரங்கத்தின் முடிவில் உள்ள வெளிச்சம்போல, நிச்சயம் இந்தக் காலத்தையும் கடக்க வேண்டும்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

* லாட்லி ஊடகக் கூட்டாய்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் பார்வை மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும் லாட்லி (Laadli ) மற்றும் யுஎன்ஹெப்பிஏவுக்கும் (UNFPA) தொடர்பில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x