Published : 16 May 2021 06:51 am

Updated : 16 May 2021 06:51 am

 

Published : 16 May 2021 06:51 AM
Last Updated : 16 May 2021 06:51 AM

மாநகர இரைச்சலுக்குள் அதிரும் தம்புரா!

the-disciple

‘கோர்ட்’ என்ற ஒற்றைத் திரைப்படத்தின் வாயிலாக உலக சினிமா பார்வையாளர்களின் கவனம் ஈர்த்த மராத்திய திரைப்பட இயக்குனர் சைதன்ய தம்ஹானே. அவருடைய அடுத்த திரைப்படமான ‘தி டிசைப்பிள்’ இன்னும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தபோது இந்துஸ்தானி இசை பாணிகளில் ஒன்றான ‘த்ருபத்’ குறித்து மணிகவுல் எடுத்த ஆவணப்படம் நினைவுக்கு வந்தது. இந்துக் கோயில்களில் கடவுள் முன்பாக மட்டுமே பாடப்பட வேண்டியதாக ‘த்ருபத்’ இருந்திருக்கிறது. அதற்குப் புரவலர்களாக மொகலாய மன்னர்களும் ராஜபுத்திர அரசர்களும் இருந்துள்ளனர். புரவலர்கள் இல்லாமல் போனதால் சென்ற நூற்றாண்டில் மகத்துவமும் ஆதரவும் குறைந்துபோன ‘த்ருபத்’தின் நிலையை விவரணையே இல்லாமல் துல்லியமாக மணிகவுல் காட்சிப்படுத்தியிருப்பார். ‘த்ருபத்’துக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் புகழ்பெற்று இன்று அருகிவரும் வழிபாட்டு இசை வடிவமான ‘கயால்’ பாணி இசையைச் சொல்லித்தரும் குருவுக்கும் அவரது மாணவனுக்கும் இடையிலான உறவுதான் ‘தி டிசைப்பிள்’ படத்தின் அடிப்படை.

இசை, எழுத்து, நிகழ்த்துக்கலை, நுண்கலைகளைப் பொறுத்தவரை ஒரு கலைஞரின் திறனை, மேதைமையை மதிப்பிட புறவயமான கருவிகள், திட்டவட்டமான திறன் அளவீடுகள், அவரது வெற்றி மற்றும் புகழை நிர்ணயிக்கச் சூத்திரங்கள் எதுவும் இல்லாத நிலையே இன்னமும் இங்கே நிலவுகிறது. ஒரு காலகட்டம், ஒரு மரபு, அதன் ஆதரவுச் சூழல், ஒரு காலகட்டத்தின் விழுமியங்களோடும் சமய மரபுகளோடும் பிணைக்கப்பட்ட சாஸ்திரிய இசை போன்ற வடிவங்களுக்குள் நுழையும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் எதிர்கொள்ளும் சஞ்சலங்களின் கதையே ‘தி டிசைப்பிள்’. கலைஞனாக இருப்பதும், கலைஞன்போல இருப்பதும் வேறு வேறானதுதான். ஆனால், இரண்டுக்குமான அல்லல்கள் ஒன்றுதான் என்ற உண்மையை நமது முகத்தில் அறைவதுபோல சொல்கிறது. சாஸ்திரிய இசை கோரும் குருபக்தி, அர்ப்பணிப்பு, பொருளியல் மற்றும் புலனின்ப தியாகங்கள் எல்லாவற்றையும் செய்தாலும், தான் கலைஞனாக இருக்கிறோமா அல்லது கலைஞன்போல இருக்கிறோமா என்பதுதான் நாயகன் சரத் நெருல்கரின் அலைக்கழிப்பாக உள்ளது.


ரியாலிட்டி ஷோக்கள் வழியாக ஒரே நாளில் புகழ்பெறும் பாடகர்கள் மத்தியில், சமூக வலைத்தளங்கள் வழியாகக் கலைஞர்களின் திறனும் மேதைமையும் புகழும் நிர்ணயிக்கப்படும் காலகட்டத்தில், உள்ளேயும் வெளியேயும் நெருக்கடி கொடுக்கும் நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் மரபாகச் சொல்லப்பட்டு வந்த அர்ப்பணிப்புக்கு, குருபக்திக்கு, சாதனை என்று சொல்லப்படும் நெடிய பயிற்சிக்கு, பல ஆண்டுக் காத்திருப்புக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வியைக் கேட்கிறது.

மனம் தான் ஈடுபடும் மரபிசையின் காலத்தில் குவிய முயல, உடலும் வாழ்க்கையும் நவீன அன்றாடம் கோரும் நெருக்கடிகளை நோக்கி இழுக்கும் போராட்டத்தைப் படம் முழுக்கப் பின்னணியில் அழுத்தமாக அதிர்ந்துகொண்டிருக்கும் தம்புராவின் ஒலி சொல்கிறது. ‘கயால்’ பாணி பாடகராக ஆசைப்பட்டுத் தோற்றுப்போன தந்தையின் சுமையானது சரத் நெருல்கருக்குச் சிறுவனாக இருக்கும்போதே இறங்கிவிடுகிறது. புகழ்பெற்ற சாஸ்திரிய இசைக் கலைஞர்களின் கச்சேரிகள், அவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான கதைகள், அவர்களைச் சுற்றி எழுப்பப்பட்ட புனிதங்கள் ஆகியவற்றுடன் ‘கயால்’ பாணியைக் கற்கத் தொடங்குகிறான். நெருல்கரின் குருவான விநாயக் ப்ரதான், அருகிவரும் ‘கயால்’ சம்பிரதாயத்தின் காவலராகக் கருதப்படுபவர்; அதே நேரத்தில், மேடைக் கச்சேரிகள் நிறைய செய்து பிரபலமான கலைஞரும் அல்ல. குரு-சிஷ்யன் சார்ந்த அதிகாரம், புனிதம், கண்டிப்பைக் கடைப்பிடிப்பவர் அவர். முதுமையும் நோயும் பீடித்த குருவுக்குக் குளிக்க வைத்து உடைமாற்றுவது வரை பணிவிடைகள் செய்யும் லட்சிய சிஷ்யனாக சரத் நெருல்கர் இருக்கிறான். விநாயக் ப்ரதானின் குருவும், தனது வாழ்நாளில் ஒரு இசைத்தட்டைக்கூட வெளியிடாதவரும், இசை மேதையாகக் கருதப்படுபவருமான பெண் இசைக் கலைஞர் மாய். அவர் இசை தொடர்பில் பேசிய பேச்சுகளின் ஒலிப்பதிவு, அன்றாட நெருக்கடிகளுக்கு மத்தியில் சரத் நெருல்கருக்கு லட்சியப் பயணத்துக்கான தூரத்து ஒளிச்சுடராகத் தெரிகிறது. ‘கயால்’ பாணியில் நிபுணத்துவத்தை அடைவதற்காக நாற்பது வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இசை சாதனையிலேயே இருக்கும் சரத் நெருல்கருக்கு, இசை சார்ந்த தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை என்று குரு விமர்சிக்கிறார்.

தனித்தும் பசித்திருந்தும் செய்யப்படுவதுதான் கலைசாதகனின் பயணம் என்று மாய் சொல்லும் வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலளித்தாலும் இரவில் அவனைத் துரத்தும் உடல் இச்சையின் வாதைகளிலிருந்து தப்ப முடியவில்லை. சத்தியம் என்பது அசிங்கமானது; அதைக் கலைஞன் பார்க்கும் தைரியத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்கிறாள் மாய். அவள் தொடர்பிலும் குரு தொடர்பிலும் ஒரு மதுவிடுதியில் பத்திரிகையாளர் ஒருவர் சில செய்திகளைச் சொல்லும்போது அந்த உண்மைகளை நாயகனால் விழுங்கவே முடியாமல் அவர் முகத்தில் தண்ணீரை எறிந்துவிட்டு வருகிறான்.

கச்சேரிகள் வழியாகக் கிடைக்கும் புகழ், கச்சேரிகள் தொடர்பில் கட்டுரைகள் எழுதுதவற்காகத் தொடர்புகளில் ஈடுபடுவது, புகைப்படம் எடுப்பது, இணையதளம் உருவாக்குவது எனத் தனது இசைவாழ்க்கை செழிப்பதற்குத் தற்காலம் கோரும் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகிறான் நாயகன். அவனது சகக் கலைஞர்கள் அடையும் புகழும், தனது கச்சேரிகளுக்குக் கிடைக்கும் எதிர்வினைகளும் இணையம் வழியாக அவனையும் பாதிக்கின்றன.

பிரபல்யமும் மேதைமையும் எப்போதும் இணைந்திருப்பதில்லைதான். மேதைகளையும் அவர்களது தோல்விகளையும் சுற்றிப் பின்னப்படும் புனிதங்கள் எல்லாம் வெற்றி பெறாததாலேயே திறன் குறைந்தவர்களைச் சுற்றிப் பின்னப்படுவதையும் இப்படம் கவனப்படுத்துகிறது. இசை, இலக்கியம், நுண்கலைகளில் உலகம் முழுவதும் கவனிக்கப்படாத மேதைகள் - வெற்றிபெற்ற கலைஞர்கள் தொடர்பில் தொடரும் முரண்களையும் கதைகளையும் ஞாபகப்படுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், கிஷோரி அமோன்கர் போன்றோர் நமக்கு ஞாபகமூட்டப்படுகிறார்கள்.

சரத் நெருல்கர் அவனது குரு விநாயக் பிரதான் இருவருக்குமான ஆத்மார்த்த உறவைச் சொல்லும்போதே ஆசிரியர், மாணவர் மீது செலுத்தும் அதிகாரம், பாரபட்சம், மௌனங்களையும் இந்தப் படம் சத்தமின்றிக் காண்பிக்கிறது. அத்துடன் அவர்கள் காக்கும் புனிதம் அவர்களுக்குச் சுமையாக ஆகிவிட்டதோ என்ற கேள்விகளையும் ஏற்படுத்துகிறது. காதல், பாலுறவின்பம் எல்லாவற்றையும் இழந்து சாதனையில் ஈடுபட்டாலும் சரத் நெருல்கரின் இசையின் இடம் என்ன என்பதற்குத் திரைப்படம் தெளிவான பதிலை - வாழ்க்கைபோலவே - சொல்லவில்லை. ரயிலில் நாட்டுப்புறப் பாடலொன்றைப் பாடியபடி செல்லும் யாசகன் நாயகனைக் கடந்து நம் கண்ணில் துளியாக மறைகிறான். சரத் மிகத் தாமதமாகத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியுடனும் மகளுடனும் தன் வீட்டை நோக்கி ரயிலில் பயணிக்கிறான்.

உலகப் பார்வையாளர்களுக்குத் தனது படைப்பைச் சமைக்கிறோம் என்பதற்காக, பிரமாண்டத்தன்மை, பாலுறவுக் காட்சிகள் என அந்தச் சந்தை கோரும் எந்த சுவாரஸ்ய இடுபொருட்களையும் இயக்குனர் சேர்க்கவில்லை. பெரிதாக சுவாரஸ்யமற்ற மும்பையின் நடுத்தர வர்க்கத்துக் குடியிருப்பு வீடுகளுக்குள் புழங்குவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும், தனித்துவமான கலாச்சார அம்சங்களைக் கொண்ட, பொறுமையை வேண்டும் நிதானமான மராத்தியத் தன்மையை வைத்திருக்கும் திரைப்படம் இது. ஒளிப்பதிவாளர் மைக்கேல் சோபாசின்ஸ்கியின் பணி குறிப்பிடப்பட வேண்டியது. அதிகம் வசனங்கள் இல்லாத இந்தப் படத்தின் தொனியை இசைதான் நிர்ணயிக்கிறது. நாயகனின் ஏக்கமும் நிம்மதியின்மையும் அர்ப்பணிப்பும் மேதைமையை அடைவதற்கான பரிதவிப்பும் அனீஷ் ப்ரதானின் இசை வழியாகவே சொல்லப்பட்டுவிடுகிறது.

திறமையும் புகழும் சில வேளைகளில் சந்திக்கின்றன. சில வேளைகளில் சந்திப்பதில்லை. ஆனால், அது கேட்கும் விலை என்ன?

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in


The discipleமாநகர இரைச்சலுக்குள் அதிரும் தம்புரா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x