Published : 16 May 2021 06:47 AM
Last Updated : 16 May 2021 06:47 AM

நரியம்பட்டு ஸலாம்: ரூமியின் தமிழ்த் தூதுவர்

தம்பி

மஸ்னவி
ஜலாலுத்தீன் ரூமி
தமிழில்: நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம்
மொத்த விலை: ரூ.3,700 (7 தொகுதிகள்)
ஃபஹீமிய்யா ட்ரஸ்ட்
வெளியீடு
தொடர்புக்கு: 98415 67213

கரோனா காலகட்டத்தில் நாம் இழந்த ஏராளமான ஆளுமைகளுள் ஒருவர்தான், ரூமியின் ’மஸ்னவி’யைத் தமிழுக்குக் கொண்டுவந்த நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம் (76). உலகின் கவிதைப் பேரிலக்கியங்களுள் பாரசீக சூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ‘மஸ்னவி’யும் ஒன்று. 29,118 செய்யுட் பாக்களில் உருவான கவிதை நூல் இது. ரூமி கி.பி. 1258-ல் எழுதத் தொடங்கி 1273-ல் தனது மரணம் வரை எழுதிய நூல் ‘மஸ்னவி’. இது மிகப் பெரிய நூலாக இருப்பதால் பகுதி பகுதியான மொழிபெயர்ப்புகள் உலக மொழிகளில் ஏராளமாக வெளியாகியிருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் ஆர்.ஏ.நிக்கோல்ஸன் என்ற ஆங்கிலேயரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் முழுமையாக வெளியான ‘மஸ்னவி’ மிகவும் புகழ்பெற்றது. தமிழிலும், மஸ்னவியின் தேர்ந்தெடுத்த பகுதிகளை ஆர்.பி.எம்.கனி மொழிபெயர்த்திருக்கிறார். நரியம்பட்டு ஸலாமின் பெருமுயற்சியில் ரூமியின் ‘மஸ்னவி’ தமிழுக்கு முழுமையாக வந்திருக்கிறது. 2008-ல் தொடங்கிய மொழிபெயர்ப்பு இது. இதுவரை 7 தொகுதிகளும் ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுதிகளில் பாரசீக மூலம், உருது வடிவம், தமிழில் பாரசீக ஒலிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்பு என்று பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நரியம்பட்டு ஸலாம் 1945-ல் ஆம்பூருக்கு அருகில் உள்ள நரியம்பட்டில் பிறந்தார். 1970-களில் சென்னைக்கு வந்து பெரியமேடு பகுதியில் தோல் தொழில் நிறுவனம் நடத்திய ஸலாம், மூப்பு காரணமாகவும் தொழிலில் ஏற்பட்ட நசிவு காரணமாகவும் 2000-களில் நரியம்பட்டுக்கே திரும்பிவந்துவிட்டார். ஸலாமுக்கு தமிழ், அரபி, ஆங்கிலம், உருது, இந்தி, பாரசிக மொழிகள் தெரியும். நேரடிப் புத்தகங்கள், மொழிபெயர்ப்பு என்று கிட்டத்தட்ட 100 புத்தங்களை அவர் வெளியிட்டிருக்கிறார். கண்ணதாசன் பதிப்பகத்துக்காக ஓஷோவின் புத்தகங்கள் பலவற்றை ஸலாம் மொழிபெயர்த்திருக்கிறார். கண்ணதாசனின் ‘அந்தி, சந்தி, அர்த்தஜாமம்’ நூலைத் தமிழிலிருந்து உருதுவுக்கு ஸலாம் மொழிபெயர்த்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனினும், அவருடைய மொழிபெயர்ப்புப் பணியின் சிகரமாக ரூமியின் ‘மஸ்னவி’யைத்தான் கூற வேண்டும்.

‘மஸ்னவி’யைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தூண்டுதலை ஸலாமுக்குத் தந்தவர் காந்தி கண்ணதாசன். ஓஷோவின் புத்தகங்களில் அடிக்கடி ரூமியின் ‘மஸ்னவி’ பற்றிய குறிப்புகளைப் படித்துவிட்டு அதை மொழிபெயர்க்குமாறு ஸலாமிடம் காந்தி கண்ணதாசன் கூறியிருக்கிறார். ‘மஸ்னவி’ மிகப் பெரிய புத்தகம் என்பதால் முதலில் அந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மொழிபெயர்த்து ‘மலர்வனம்’ என்று புத்தகமாக்கினார் ஸலாம். அதைத் தொடர்ந்து மவ்லவி அபூதாஹீரின் தூண்டுதலின் பேரில் ‘மஸ்னவி’யை முழுமையாக மொழிபெயர்க்க ஆரம்பித்தார். இதன் முதல் பாகம் 2008-லும், ஏழாம் பாகம் 2020-லும் வெளியாயின. நரியம்பட்டு ஸலாமுக்கு பாரசிகம் தெரிந்திருந்தாலும் மொழிபெயர்க்கும் அளவுக்கு அதில் புலமை இல்லாததால் ‘மஸ்னவி’யின் உருது மொழிபெயர்ப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு மொழிபெயர்த்தார். வெறும் மொழிபெயர்ப்பாக மட்டுமல்லாமல் அதற்குத் தெளிவுரையையும் ஸலாம் கொடுத்திருக்கிறார்.

உருது மொழியில் உள்ள இரண்டு குர்ஆன் மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருப்பதும் அவருடைய சாதனைகளுள் ஒன்று. காலம்சென்ற வஹீதுத்தீன் கானின் 12 சிறு நூல்களையும் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் ஸலாம். ‘என் இறைவனோடு நான்’, ‘ஞானகுருவின் மகிமைகள்’, ‘ஞானச் சிதறல்’, ‘ஞான விடியல்’, ‘துளிகளாய்த் தோன்றும் கடல்கள்’, ‘உண்மையைத் தேட வேண்டியதில்லை’, ‘நாரதரின் பக்தி சூத்திரம்’ (2 பாகங்கள்), ‘ரூமியின் 365 நாட்கள்’, ‘சூஃபி கதைகள்’, ‘அன்பென்னும் ஓடையிலே’, ‘புரட்சி விதை’, ‘விளக்கின் கீழே விதை’ முதலான நூல்களும் இவரது மொழிபெயர்ப்பில் முக்கியமானவை. அயராத மொழிபெயர்ப்பாளரான நரியம்பட்டு ஸலாமின் பெயரை, ரூமியின் ‘மஸ்னவி’ மொழிபெயர்ப்பு என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x