Published : 12 May 2021 03:28 PM
Last Updated : 12 May 2021 03:28 PM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 37: எம்ஜிஆரின் உபசரிப்பும், ஜன்னலுக்கு அப்பால் நீலக்கடலும்!

கல்யாணி நித்யானந்தன்

1960-ல் என் கணவர் தன் நண்பர்களோடு சேர்ந்து சிறு தொழில் ஒன்றைத் தொடங்கியிருந்தார். நான் மருத்துவப் படிப்பு முடித்து ‘ஹவுஸ் சர்ஜன்’ பயிற்சியும் முடித்திருந்தேன். கையில் ஒன்றரை வயது மகன்.

ஒருநாள் என்னவர் மிக உற்சாகத்தோடு வீடு திரும்பி, ‘‘அகில இந்திய உற்பத்தி வளர்ச்சிக் கழகம், வெளிநாட்டுக்குச் சிலரைப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். நானும் விண்ணப்பித்திருந்தேன். என்னைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். பிரான்ஸில் ஆறு மாதங்கள் பயிற்சி’’ என்றார். எனக்கு மகிழ்ச்சியின் ஊடே பிரிய வேண்டுமே என்கிற கலக்கமும் இருந்தது.

அவரும், ‘‘நீ பயிற்சியின் கடைசி 2 - 3 மாதங்களுக்காக அங்கே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். உபகாரச் சம்பளத்தில் மிச்சம் பிடித்து நீ அங்கு தங்கும் செலவைச் சமாளிக்கலாம்’’ என்றார். ஆனால் பயணச் செலவு? தொழிலுக்காகக் கடன் வாங்கியிருந்ததால் செலவு ஏற்கெனவே கையைக் கடித்துக்கொண்டு இருந்தது. எங்காவது 3 - 4 மாதங்கள் வேலை செய்து பணம் சேர்க்க முடியும் என்று தோன்றியது.

அன்று டாக்டர். பி.ஆர்.சுப்ரமணியம், அப்போதைய முதல்வர் எம்ஜிஆருடைய குடும்ப மருத்துவராக இருந்தார். நான் அவருடைய மாணவியாகவும், பயிற்சி மருத்துவராகவும் இருந்தபடியால் தற்காலிகமாக வேலை கிடைக்குமா என்று அவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது, ‘‘எம்ஜிஆர் சாலிகிராமத்தில் ஒரு இலவச மருத்துவ நிலையம் (புற நோயாளிகளுக்காக) தொடங்கியிருக்கிறார். காலை 9 மணியிலிருந்து நண்பகல் 1 மணி வரை அங்கு வேலை காலியாக இருக்குமா என்று பார்க்கிறேன்’’ என்று கூறி, என்னை எம்ஜிஆர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

கனிவுடன் மிருதுவாக உரையாடி, ஜானகி அம்மையார் எங்களை வரவேற்று உபசரித்ததை மறக்க முடியாது. எம்ஜிஆர் வந்தவுடன் முதல் கேள்வி ‘‘ஏதாவது சாப்பிட்டீர்களா?’’ என்பதுதான். அதுவரை அவரது அதிதி உபசரணை பற்றிக் கேள்விதான்பட்டிருந்தேன். அது எத்தனை உண்மையானது என்று அறிந்தேன். என் தேவையைக் கேட்டதும் உடனே வேலையில் சேருமாறு கூறினார்.

இதற்குள் என்னவர் பறந்துவிட்டார். அவரை வழியனுப்ப வந்த அவருடைய பெற்றோர் எனக்கு உதவியாகத் தங்கிவிட்டார்கள். வீட்டு மேல் வேலைக்கும், குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் ஒரு பெண்மணியை நியமித்துவிட்டு வேலையில் சேர்ந்துவிட்டேன்.

காலைச் சமையலை முடித்துவிட்டு 2 பேருந்துகளில் பயணித்து 9 மணிக்குள் மருத்துவ மையத்தை அடைவேன். வரிசையாக நோயாளிகள், வழக்கமான மருந்துகள் எல்லாம் இருக்கும். அவசர நிலையில் முதலுதவியாகச் செலுத்த வேண்டிய ஊசி மருந்துகள் உண்டு. திடீரென்று எம்ஜிஆர் அங்கு வருவார். ‘‘எல்லாம் சவுகரியமாக இருக்கிறதா? ஏதாவது மருந்துகள் தேவையென்றால் சொல்லுங்கள். உடனே வாங்கி விடலாம்’’ என்று சொல்வார். ஒருநாள் தவிர்க்க முடியாமல் நான் 15 - 20 நிமிடங்கள் தாமதமாகப் போனேன். அங்கு எம்ஜிஆர் அமர்ந்திருந்தார். நான் வியர்க்க விறுவிறுக்க, கோட்டை மாட்டிக்கொண்டே மன்னிப்பு கேட்டேன்.

‘‘எப்படி வருகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்டார். நான் 2 பேருந்துகள் மாறி வருகிறேன் என்ற விவரத்தைக் கேட்டவுடன், தனது கார் டிரைவரைக் கூப்பிட்டு, ‘‘நாளை முதல் டாக்டரம்மா வீட்டுக்குப் போய்க் கூட்டிவர வேண்டும். வேலை முடிந்ததும் கொண்டுபோய் விட வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். என்னிடம், ‘‘டாக்டரம்மா... விலாசத்தை விவரமாக எழுதிக் கொடுங்கள்’’ என்றார். நான் அதெல்லாம் தேவையில்லை என்று மறுக்க முயன்றேன். என்னைக் கையமர்த்தி, ‘‘நீங்கள் பதற்றமின்றி இருந்தால்தான் நோயாளிகளை நிம்மதியாகக் கவனிக்க முடியும்’’ என்று புன்னகைத்து, கைகூப்பிச் சென்றுவிட்டார். ‘பொன்மனச் செம்மல்’ என்று சும்மாவா சொன்னார்கள்!

மூன்று மாதங்கள் முடிந்தன. கையில் இருந்த காசைக் கூட்டிக் கழித்துப் பார்த்து, போகும்போது கப்பலில் போய், திரும்பும்போது என்னவருடன் விமானத்தில் திரும்பத் தீர்மானித்தேன். அன்று ‘விசா’ எல்லாம் கிடையாது. இருவழிப் பயணச் சீட்டும், முன்பதிவும் கட்டாயம் கிடையாது. திரும்பும் தேதியை நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குப் பயணிக்க கப்பல்களை இரண்டு நிறுவனங்கள்தாம் இயக்கிவந்தன. ஒன்று பிரிட்டிஷ் நிறுவனம் P & O. மற்றொன்று இத்தாலிய நிறுவனமான ‘லாயிட் ட்ரிஸ்டினோ’ (Lloyd Tristino). இது கொச்சி துறைமுகத்திலிருந்து புறப்படும்.

பயண நிறுவன ஏஜெண்ட், ‘‘மூன்றாம் வகுப்புச் சீட்டு எடுத்தால் போதும். அறைதான் பல படுக்கைகள் (15) உள்ளதாக இருக்கும். மற்றபடி, உணவு மற்ற வசதிகளை உபயோகிக்கும் உரிமை எல்லாம் 2-வது வகுப்புப் பயணிகளுக்கும் உங்களுக்கும் ஒன்றுபோலத்தான்’’ என்று கூறினார்.

கொச்சி துறைமுக அதிகாரி என் குடும்பத்தின் நீண்டநாள் குடும்ப நண்பர். என் கொழுந்தன் அப்போதுதான் ஐஏஎஸ் முடித்து செங்கனூரில் உதவி மாவட்ட அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றிருந்தார். நான் ரயிலில் கொச்சிக்குப் போனேன். அங்கு என்னைச் சந்தித்த என் கொழுந்தனுடன், நாங்கள் அந்தத் துறைமுக அதிகாரியின் வீட்டில் இரவு தங்கினோம். மறுநாள் கப்பல் இரவு 9 மணிக்குப் புறப்படும். பயணிகள் காலை 10 மணிக்குத் துறைமுகத்தை அடைய வேண்டும் என்று கூறியிருந்தார்கள். ஆனால், நான் துறைமுக அதிகாரியின் விருந்தினர் என்பதால் மாலை 4 மணிக்குப் போனால் போதுமென்று கூறினார். நானும் பயண ஏஜெண்டைச் சந்தித்து நான் இறங்கும் துறைமுகமான ஜெனோலாவிலிருந்து பாரீஸுக்கு ரயில் பயணச் சீட்டை உறுதிப்படுத்திக்கொண்டேன். அதுவும் 2-வது வகுப்புதான்.

துறைமுகத்தில் ராஜ வரவேற்பு. நான், என் கொழுந்தன், அவரது நண்பரான ஒரு காவல்துறை துணை ஆணையாளர் மூவரையும் கப்பலிலிருந்து ஒரு அதிகாரி வரவேற்று, கப்பலுக்குக் கூட்டிப்போனார். மேல் தட்டை அடைந்ததும் நீச்சல் குளம், வளையம் வீசி விளையாடும் இடம், நடைபாதை, உணவகம், பயணிகள் உணவுக் கூடம், நூலகம், தனியாக அமர்ந்து கடிதங்கள் எழுத ஒரு அறை, உடுப்புகளை இஸ்திரி செய்துகொள்ள வசதி, அழகு நிலையம், சின்ன சின்ன பலவிதமான கடைகள், அடேயப்பா... மிதக்கும் 5 நட்சத்திர ஹோட்டல் போல இருந்தது. சுற்றிக் காண்பித்த மாலுமி ‘‘கீழே உங்கள் அறைக்குப் போகலாமா?’’ என்று கேட்டுவிட்டு ஒரு படிக்கட்டில் இறங்கத் தொடங்கினார். இறங்கினோம்... இறங்கினோம்... இறங்கிக் கொண்டே இருந்தோம். நீர் மட்டத்துக்கு கீழேதான் மூன்றாவது வகுப்பு அறை டார்மெட்டரி (Dormetry).

மேலும் கீழுமாக 12 படுக்கைகள். நல்ல மெத்தை, விரிப்புகள், கம்பளி உட்பட. குளிரூட்டப்பட்ட அறைதான். உடைமைகளை வைக்க அடுக்குப் பலகைகள். அதில் மற்ற பயணிகளுடைய சில உடைமைகள் வைக்கப்பட்டிருந்தன. அடுத்து வரிசையாக 6 குளியல் / ஒதுங்கும் அறைகள். என் பெட்டியை ஒரு பணியாளர் கொண்டு வந்து வைத்தார். அறையில் ஜன்னல் கிடையாது. ஒரு வட்டமாக தடிமனான கண்ணாடி பொருத்தப்பட்ட ஒன்று ‘போர்ட்ஹோல்’ (Porthole). வெளியில் பார்த்தால் கடல். ஆஹா! நீர்மட்டத்துக்குக் கீழே அல்லவா பயணிக்கிறோம்!

ஆறு மணிக்கே உணவுக் கூடத்துக்குப் போனோம். என்கூட அமர்ந்த என் கொழுந்தன் கேலி செய்யத் தொடங்கினார். ‘‘ராஜோபசார வரவேற்பு, ஒரு துணை மாவட்ட அதிகாரி, ஒரு துணை ஆணையாளர் தொடர, கடல் மட்டத்துக்கு அடியில் ஓர் அறை’’ என்று.

என் சக பயணிகளைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆறு கேரளத்துச் செவிலியர் ‘பாதுவா’ என்கிற இத்தாலிய நகரத்துக்குப் போகிறார்கள். சற்று வயதான பெண்மணி ஒருவர், ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கிலாந்துக்குத் தன் உறவினர்களைச் சந்திக்கப் போகிறார். இவர்தான் பின்வரும் நாட்களில் எனக்கு ‘ஸ்க்ராபிள்’ என்னும் வார்த்தை விளையாட்டை அறிமுகப்படுத்தினார். நாங்கள் இருவரும் பலமுறை விளையாடி மகிழ்ந்தோம்.

கப்பல் புறப்பட ஊதுசங்கு ஒலித்தது. நாங்கள் மேல்தட்டில் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டு, கப்பல் புறப்படுவதை வேடிக்கை பார்த்தோம். கப்பலைக் கரையுடன் பிணைத்திருந்த தடிமனான கயிறுகளை விடுவித்தார்கள். துறைமுகத்திலிருந்து வெளியேற வழிகாட்டும் பிரத்யேகப் படகுகள் கப்பலை இழுக்கத் தொடங்கின. சுருட்டப்பட்ட பல நிறக் காகித ரிப்பன்கள் வீசியெறியப்பட்டன. கரையிலுள்ளோர் ஆரவாரமாக வழியனுப்ப நாங்கள் கைவீசி விடைபெற்றோம். அறைக்குத் திரும்பிக் கடலலைகளின் தாலாட்டில் சுகமாக உறங்கினோம்.

காலையில் எழுந்து ‘ஏறி ஏறி’ மேல் சூட்டுக்குப் போனேன். 10 பேர் கூட இல்லை. மீன்கள் கூட்டம் நீந்துவதையும் வெயிலில் வெள்ளிபோல் மின்னி, துள்ளிக் குதிப்பதையும் கண்டேன். உணவுக் கூடத்தை அடைந்தபோது மேஜைகளில் ஓரிருவர் இருந்தனர். பரிமாறுபவரிடம் கேட்டபோது, ‘‘கடல் கொந்தளிப்பால் பலருக்கு வயிற்றைப் புரட்டி வாந்தி வரும், தலை சுற்றும். அது பழக 3 - 4 நாட்கள் ஆகும். அதுவரை இப்படித்தான்’’ என்றார். ரங்க ராட்டினம், வீசியாடும் ஊஞ்சல் இவற்றை ரசிக்கும் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை. காலை உணவை உண்டேன்.

5-ம் நாள் ஏமன் துறைமுகத்தை அடைந்தோம். பல பயணிகள் 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஊரைச் சுற்ற அனுமதி பெற்றுச் சென்றார்கள். நான் கப்பலிலேயே தங்கினேன். சாதாரணமாக மேல் தட்டில் நாற்காலிகளில் உட்கார காசு கொடுக்க வேண்டும். அன்று வெகு சிலரே இருந்ததால் நான் காலி நாற்காலியில் உட்காருவதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. சில சிறுவர்கள் கடலில் நீந்தி கப்பல் அருகில் வந்து காசு கேட்டார்கள். போடப்பட்ட காசை நீரில் மூழ்கி எடுத்து மேலே சிரித்துக்கொண்டு வந்தார்கள்.

கப்பல் மேற்கு நோக்கிப் போவதால் சூரியோதயம் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது. இதனால், காலை உணவு நேரமும் தாமதமாக வந்தது. விடிந்த உடன் காபி குடித்துப் பழகிய எனக்குப் பசியெடுத்தது. உணவே சங்கடமானதுதான். ஏனென்றால், நான் சுத்த சைவம். என்னைத் தவிர வேறு எந்த ‘சுத்த சைவமும்’ கப்பலில் இல்லை.

காலையில் ரொட்டி, வெண்ணெய், ஜாம். மதியம் அரை வேக்காடு சோறும், வேக வைத்த காய்கறிகள், ‘ஸாலட்’தான். என் மீது பரிதாபம்கொண்ட எங்கள் மேஜை பரிமாறுபவர் ‘ஜியோவானி’ ‘‘நான் நல்ல ஆம்லெட் செய்து தருகிறேன். சீஸும் தக்காளியும் சேர்த்து மிக ருசியாக இருக்கும். முட்டை வாசனை வராது’’ என்று என்னிடம் கெஞ்சுவார். அவருக்குத் தெரியுமா நான் எப்படி என் 7-வது வயதில் கோழி முட்டையைச் சந்தித்தேன் என்று?

அப்போது எனக்கு அடிக்கடி தொண்டைப் புண் (டான்ஸிலைட்டிஸ்) வரும். என் நோய்த் தடுப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவர் ஆலோசனைப்படி தினசரி முட்டை கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. முட்டை விற்கும் அம்மணி வாயிற்படிக்கு வெளியில் நிற்பார். நான் படி தாண்டி மூக்கைப் பிடித்துக்கொண்டு வாயைத் திறப்பேன். முட்டை உடைக்கப்பட்டு என் வாயில் ‘லபக்’ என்று விழும். நான் விழுங்கிய உடனே என் அப்பா ஒரு ஆரஞ்சு மிட்டாயை வாயில் போடுவார். மறுபுறம் என் தாயார் ஒரு முழுத் தக்காளியை என் கையில் தருவார் (லஞ்சம்).

உங்களுக்குத் தெரியுமோ என்னவோ! அன்று (1942) தக்காளி, இன்று மாதிரி தினசரிக் காய்கறிகளில் ஒன்று அல்ல. ரசத்தில்கூட என்றாவதுதான் போடப்படும். தக்காளித் தொக்கு எல்லாம் கேள்வி கூடப்பட்டதில்லை. அதனால், ஒரு முழுத் தக்காளி தினசரி என்பது ‘லஞ்சம்’தான். 5 - 6 நாட்களுக்குப் பிறகு தீர்மானித்தேன். ‘‘ஜியோவானி ஒன் வெல் குக்ட் ஆம்லெட் வித் சீஸ் அண்ட் டொமேட்டோ’’ என்றேன். அவர் கண்கள் விரிய சிரித்ததில் காதுகள் எச்சிலாகாத குறைதான். அன்று நான் ‘ஆம்லெட்’ தின்னப் பழகியது பிற்காலத்தில் மேல் நாடுகளில் பலமுறை என் பசியடங்கவும் என்னைச் சாப்பிட அழைத்தவர்களுடைய சங்கடத்தையும் தீர்க்கவும் உதவியது.

என் அடுத்த அனுபவம் சூயஸ் கால்வாயைக் கடந்ததுதான். கப்பல்கள் வரிசையாகப் புறப்பட்டு வழிகாட்டிப் படகுகளைத் தொடர்ந்து போகத் தொடங்கின. துறையும், முனையில் சிலர் கப்பலை விட்டு இறங்கி எகிப்திய ‘பிரமிட்’களைக் காண சுற்றுலாப் பயணமாகச் சென்றார்கள். அன்று இரவு மறுமுனையில் கப்பலில் சேரும் ஏற்பாடு.

கால்வாய்ப் பயணம் ஆச்சரியமான அனுபவம். ஒருபுறம் வெறும் மணல் வெளி. மறுபுறம் பசுமை. சில இடங்களில் கால்வாய் மிகக் குறுகலாக இரு கரையையும் தொட்டு விடுமோ என்கிற மாதிரி இருந்தது. சில இடங்களில் நல்ல அகலம்.

மறுநாள் நாங்கள் மத்தியத் தரைக் கடலை அடைந்தோம். ‘நீலக்கடல்’ என்கிற வர்ணனையைக் கேட்டிருக்கிறோம். ஆனால், இத்தனை அழகான ஆழ்ந்த நீல நிறம். கண்ணனும் திருமாலும் கண்டிப்பாக இந்த அழகு நீலமாகத்தான் இருப்பார்கள். இந்தக் கடலில்தான் நாங்கள் அடுத்த மூன்று துறைமுகங்களையும் அடைந்தோம். இதில் பயணிக்கும்போது பல இடங்களில் கரை கண்ணுக்குத் தெரியும்படிதான் பயணித்தோம். ‘எட்னா’ என்கிற எரிமலையைக் காண முடிந்தது. அது உறங்கிக்கொண்டு இருந்தது. ஆனால், ‘ஸ்ட்ராம்போலி’ என்கிற எரிமலையோ 24 மணி நேரத்தில் பல முறை சீறி, தீயை உமிழ்ந்துகொண்டு இருக்கும். இந்தக் காட்சியை நாங்கள் கப்பலில் இருந்து இரவில் கண்டோம்.

அடுத்த துறைமுகம் ‘மெஸ்ஸீனா’. அது ஒரு தீவு. கடற்கரையை ஒட்டிய அழகான சாலை. பயணிகளில் ஒரு இத்தாலியருடன் நான் சிநேகமாகி இருந்தேன். அவருக்கு மெஸ்ஸீனாவில் உறவினர் ஒருவர் இருப்பதாகவும், அவர் அவர்களது வீட்டுக்குப் போவதாகவும் கூறினார். என்னையும் உடன் வருமாறு அழைத்தார். நான் சம்மதித்ததும் என்னைக் கூட்டிப் போனார். எப்படித் தெரியுமா? இரட்டைக் குதிரை ‘சாரட்’டில்! எனக்கு அந்த அனுபவத்தை அந்த நண்பர் அளித்தார்.

அந்த வீட்டில் எல்லாரும் கலகலப்பாக, நட்புடன் பழகினார்கள். அவர்கள் வீட்டில் ஓர் இளம்பெண். என் புடவையைப் பார்த்து வியந்துகொண்டு இருந்தாள். நான் ஒரு காரியம் செய்தேன். ஒரு அங்கியை மாட்டிக்கொண்டு என் புடவையை அவளுக்குக் கட்டி விட்டேன். நம்ம காஞ்சிபுரம் பட்டு! ஆனால் என்ன, ரவிக்கைக்கு பதில் ஒரு ‘டி-ஷர்ட்’. அந்தப் பெண் குதூகலமாய்த் தடுக்கி விழாத குறையாய், வளைய வந்தாள். பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

மறுநாள் ‘நேப்பிள்ஸ்’ நகரத் துறைமுகத்தை அடைந்தோம். ஒரு பிரபல பழமொழி உண்டு. ‘சாவதற்கு முன் நேப்பிள்ஸ் நகரத்தைப் பார்த்துவிடு’ என்று. மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் நான் ஊரைப் பார்க்கப் போனேன். அது பழமையும், கண்ணை உறுத்தும் புதுமையுமான கலவையாக இருந்தது. நான் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன்.

ஒருவழியாக ‘ஜெனோவா’ துறைமுகத்தை அடைந்தோம். கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குக் கூடப் பயணித்தவர்களை பிரியும் நேரம் வந்துவிட்டது. அறையைப் பகிர்ந்துகொண்ட செவிலியர் ‘ஸ்க்ராபிள்’ விளையாடிய பெண்மணி, உணவுக் கூடத்தில் பரிச்சயமான சில மாணவர்கள், கிருதாவும், தாடியுமான கேப்டன், எனக்கு ‘ஆம்லெட்’ செய்து கொடுத்த ஜியோவானி என எல்லாரிடமும் விடைபெற்றேன். நான் பாரீஸுக்குப் போக ரயில் இரவு 9 மணிக்கு. கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் இங்கிலாந்துக்குப் போகும் மாணவர்களது ரயிலும் புறப்பட இருந்தது. அதனால், நாங்கள் ரயில் நிலையத்துக்குப் போய் எங்கள் பெட்டிகளை, உடைமைகளை காப்பகத்தில் வைத்துவிட்டு ஊர்சுற்றப் போனோம்.

‘பீட்சா’ என்பது இந்தியாவை (கண்டிப்பாகச் சென்னையை) வந்தடையாத நாட்கள் அவை. நாங்கள் ஒரு ‘பீட்சாரியா’வை, அதாவது ‘பீட்சா’க்கள் மட்டும் தயாரித்து விற்கும் உணவகத்தைக் கண்டோம். கண்ணெதிரில் பீட்சாவைத் தயாரித்து ‘தகதக’வென்று எரியும் அடுப்பில் சுட்டு எடுத்துக் கொண்டிருந்தார்கள். எனக்குச் சுத்த சைவம் வேண்டுமென்று ஆங்கிலத்தில் கூறி ‘புரிய’ வைத்தேன்.

கொடுத்ததைப் பயத்துடன் முகர்ந்து பார்த்தும் கொஞ்சமாக ருசித்தும் உறுதிசெய்து கொண்டேன். கையில் பிடித்துக் கடித்து ருசித்தேன். அன்று அறிமுகமான ‘அசல்’ பீட்சாவின் ருசி இன்றுவரை என் நினைவில். நினைத்தாலே ‘ஜொள்ளு’ ஊறும். இன்று நம்மவர்கள் ‘பீட்சா’வை நன்றாகச் செய்வது மட்டுமின்றி மசால், பனீர் என்று இந்தியச் சுவையை ஊட்டி அசத்துகிறார்கள் - கில்லாடிகள்!

ரயில் ஏறி அமர்ந்ததும் கப்பலின் நினைவுகளை அசைபோட்டேன். ‘டெக்’கில் உலாவியது, தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தது (நாற்காலிக்குக் காசு கொடுப்பது தண்டம் என்பதில்) மற்ற பயணிகளுடன் அளவளாவியது, நடந்த கேளிக்கைகள், தலைமை மாலுமியுடன் அவர் மேஜையில் ஒருநாள் உண்டது.. என பலப்பல!

கப்பல் கம்பெனி செய்திருந்த ஒரு ஏற்பாட்டைக் கூறியே ஆக வேண்டும். ஒவ்வொரு துறைமுகத்தில் உள்ள அவர்களது அலுவலக விலாசங்களைப் புறப்படும் முன்னே அறிவித்து இருந்தார்கள். அதனால், ஒவ்வொரு துறைமுகத்தை அடைந்தவுடன் பயணிகளுக்குள்ள தபால்களை விநியோகித்தார்கள். என் ஐந்தாவது திருமண நாளன்று, நான் ஏமன் துறைமுகத்தை அடைந்தபோது, என்னவரிடமிருந்து அழகான ரோஜா வரையப்பட்டு, நறுமணத்துடன் ஒரு ‘கார்டு’ காத்திருந்தது. எதிர்பாராத பரிசு.

எனது ரயில் பாரீஸை அடைந்தது. ஒரு கையில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடனும் மறு கையில் சாக்லேட்டுடனும் நடைமேடையில் என்னவர் நின்றிருந்தார். வெளிநாடு, அதுவும் பாரீஸ் (காதலர்களின் நகரம்) என்பதால் கூச்சமின்றிப் பாய்ந்து அணைத்துக்கொண்டேன். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏன் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஜோடிகளைக்கூடச் சாதாரணமாகவே கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஹும்.. நான்கு சுவருக்குள் இருக்க வேண்டியது நடுத்தெருவுக்கு வந்தால், இதுதான் மதிப்பு.

சாக்லேட்டைக் கையில் எடுத்தவுடன் என் குட்டி மகனின் நினைவு. அவன் மழலையில் ‘‘அம்மா கடக்குப் (கடைக்கு) போயி, பொள்ளங்கா, காபரீஸ் வாங்கலாமா?” (அவன் புடலங்காயின் பரம ரசிகன்) என்று கூறும் குரல் என் மனதில் கேட்டது. கொஞ்சம் தொண்டை அடைத்தது.

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x