Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

சீமானின் தேர்தல் கணக்கு

தமிழக அரசியலில் மூன்றாவது இடத்துக்குப் போட்டியிட்ட கட்சிகளுள் ஒன்றான நாம் தமிழர் கட்சியானது போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் தோல்வியைத் தழுவினாலும், இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. கூட்டணி இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு ஏறக்குறைய 6.5%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கவனிக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், சீமான் தன்னுடைய கட்சியின் வேட்பாளர் தேர்வை மிகுந்த கணக்குகளுடனேயே கையாண்டியிருக்கிறார்.

நாதகவின் பலம்

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணி மட்டுமின்றி, நாதகவும் ஒரு முக்கியக் காரணமாயிற்று. முந்தைய தேர்தலைக் காட்டிலும் இந்த முறை நாதக பல தொகுதிகளில் ஐந்து மடங்கு வரையில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அந்த வாக்குகள் திமுகவின் வெற்றியைப் பாதிக்கவில்லை; ஆனால், அதிமுகவுக்குக் காலைவாரிவிட்டிருக்கிறது. திமுகவுக்கு ஆதரவான வாக்குகளைப் பிரித்து அதிமுகவின் வெற்றிக்கு உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாதக, அதிமுகவின் வாக்குகளையும் கணிசமாகப் பிரித்து அந்தக் கட்சியின் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறது.

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி.சரோஜா, திமுக வேட்பாளரிடம் 1,952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அந்தத் தொகுதியில் நாதகவுக்குக் கிடைத்த வாக்குகள் 11,295. அந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் நாதகவுக்குக் கிடைத்த வாக்குகள் 2,076 மட்டுமே. ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 1,091 வாக்குகள் வித்தியாசத்திலும், அரியலூரில் அதிமுக கொறடா ராஜேந்திரன் 3,234 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தத் தொகுதிகளில் நாதக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பாஜக போட்டியிட்ட காரைக்குடி, பாமக போட்டியிட்ட ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளிலும் அந்தக் கட்சிகள் வெற்றிவாய்ப்பை இழந்த வாக்கு வித்தியாசங்களைக் காட்டிலும் நாதக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

இரண்டு திராவிடக் கட்சிகளையும் சரமாரியாகத் திட்டித் தீர்க்கும் சீமான், வேட்பாளர்களை முடிவுசெய்வதில் அந்தக் கட்சிகளின் அணுகுமுறையையே பின்பற்றியுள்ளார் என்பதும் கவனத்துக்குரியது. பல தொகுதிகளிலும் அந்தந்தத் தொகுதிக்குள் வலுவாக இருக்கும் சமூகத்தினரையே களம் இறக்கியுள்ளது நாதக. கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அதிக அளவில் நாஞ்சில் வெள்ளாளர் சமூக வாக்குகள் இருக்க, அதே சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவைக் களமிறக்கியது. தூத்துக்குடி தொகுதியில் நாடார் சமூக வாக்குகள் பிரதானம். அந்தத் தொகுதியில் அதே சமூகத்தைச் சேர்ந்த வேல்ராஜ் களம் இறக்கப்பட்டார். இவர் 30 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகள் பெற்று பிரதானக் கட்சிகளையே புருவம் உயர்த்த வைத்துள்ளார். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் நாதகவுக்குக் கிடைத்த வாக்குகள் மூவாயிரத்து சொச்சம் மட்டுமே. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரம் காட்டியவர் வேல்ராஜ். இப்படியான செயற்பாடுகள் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட அடித்தளமாக இருந்தாலும், தொகுதிக்குள் இருக்கும் சாதிய பலமும் அவர்களை வேட்பாளர்கள் அந்தஸ்துக்கு நகர்த்தியிருப்பதை உணர முடிகிறது.

திருப்பூர் வடக்குத் தொகுதியில் கவுண்டர் சமூகத்தினர் அதிகம். நாதக சார்பில் அதே சமூகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் களம் கண்டார். திருப்பூர் தெற்கில் முதலியார் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். நாதகவும் அதே சமூகத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தைக் களம் இறக்கியது. காங்கேயம் தொகுதியில் கவுண்டர் சமூகத்தினர் அதிகம். அதே சமூகத்தைச் சேர்ந்த சிவானந்தத்துக்கு சீட் வழங்கப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம். இதற்காக ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரை திருச்சி மேற்கில் நிற்க வைத்தது. வினோத் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தொகுதி மாறி இழுத்துவந்தனர். இதேபோல், திமுகவில் மகேஷ் பொய்யாமொழி வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியிலும் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். அந்தத் தொகுதியில் அதே சமூகத்தைச் சேர்ந்த சோழசூரனைக் களம் இறக்கியது நாதக. தொகுதிக்குள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சாதியினருக்கு சீட் கொடுக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் பயணத்தில் நாதகவும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டிருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்தும்.

விதிவிலக்கான ஒரு வியூகம்

தேர்தல் வெற்றியை அல்ல; தனக்கு இருக்கும் வாக்குகளின் வலிமையையே இந்தத் தேர்தலில் நாதக உணர்த்த விரும்பியது. அதற்காக, குறிப்பிட்ட சில தொகுதிகளில் பெரும்பான்மைச் சாதியினருக்கு மாற்றாக இரண்டாவது எண்ணிக்கையில் இருக்கும் சாதிகளிலிருந்தும் வேட்பாளர்களைக் களமிறக்கியது. பிரதானக் கட்சிகள் இந்த விபரீத விளையாட்டுக்கு அவ்வளவு எளிதில் துணிய வாய்ப்பில்லை. தேர்தல் வெற்றியைப் பற்றிக் கவலைப்படாத நாதகவின் இந்த வியூகமும் சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை அள்ளித் தந்திருக்கிறது. உதாரணத்துக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை இந்து, கிறிஸ்தவர் என்னும் அடிப்படையிலேயே வாக்களிக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக இருந்துவருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இந்து நாடார் சமூக வேட்பாளர்களைக் களமிறக்கின. நாதகவோ தொகுதிக்குள் அதற்கு இணையாக வலுவாக இருக்கும் கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வினைக் களமிறக்கியது. அவர் 52,221 வாக்குகள் பெற்றார். இது கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளைவிட மூன்று மடங்கு அதிகம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரித் தொகுதியில் மீனவர் சமூகத்துக்கு வாய்ப்பளித்தது நாதக. ஆனால், மீனவர்களின் மோடி எதிர்ப்பானது காங்கிரஸ் வாக்காக மாறுவதை உணர்ந்து கிறிஸ்தவ நாடார் சமூகத்துக்குத் தற்போது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதே நேரம், தேர்தல் களத்தில் பாஜக இந்துக்கள் வாக்குகளையும், காங்கிரஸ் சிறுபான்மை வாக்குகளையும் சார்ந்திருந்தன. அதனால், மதரீதியிலான பிரச்சாரத்தையோ உரையாடலையோ நாதக கவனமாகத் தவிர்த்துவிட்டது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இந்த வியூகம் சில சட்டமன்றத் தொகுதிகளிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. கிள்ளியூர் தொகுதியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகள் உள்ளன. அங்கு நாடார் சமூக வேட்பாளரைக் களமிறக்கிய நாதக, நாடார்கள் அதிகமாக இருக்கும் விளவங்கோடு தொகுதியில் மீனவர் சமூக வேட்பாளரைக் களமிறக்கியது. அந்தந்தத் தொகுதிகளில் பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கும் சமூகங்களின் வாக்குகளைக் கவரும் உத்தி இது. ஆனால், இந்த உத்தியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ராதாபுரத்தில் ஜேசுதாஸ், திருவாரூர் தொகுதியில் வினோதினி என 12 பொதுத் தொகுதிகளில் பட்டியல் சமூகத்திலிருந்து வேட்பாளர்களைக் களமிறக்கியது நாதக. அவர்களும் தங்கள் தொகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளனர். தனித்துக் குறையாகச் சொல்ல ஏதும் இல்லை; சாதி, மதத்தைச் சொல்லி நாதக எந்தத் தொகுதியிலும் வாக்குகளைச் சேகரிக்காவிட்டாலும் சாதி, மதம் பார்த்துப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் நடைமுறையையே நாம் தமிழர் கட்சியும் பின்பற்றியிருக்கிறது!

- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு:swaminathan.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x