Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

தடுப்பூசி இயக்கத்தில் பின்வரிசையில் இருக்கும் தமிழகத்தை முன்னேற்றுக!

நாடு முழுவதும் தடுப்பூசி கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு கரோனாவை எதிர்கொள்ளும் போராட்டத்தைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கி இருக்கிறது என்றால், முந்தைய ஆட்சியில் காட்டப்பட்ட மெத்தனம் தமிழகத்தை இந்திய அளவிலுமே பின்வரிசையில் தள்ளியிருக்கிறது. புதிய அரசு தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல மக்களிடம் நம்பிக்கையூட்டும் செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன் ஒன்றிய அரசிடமும் கூடுதலான ஒதுக்கீட்டைக் கேட்டுப் பெற வேண்டும்.

இந்தியாவில் கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீரில் மட்டுமே மூத்த குடிமக்களில் 60% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தினரான 45-59 வயதுக்குட்பவர்களில் இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் மட்டும்தான் 50% பேரைத்தான் தடுப்பூசி சென்றடைந்திருக்கிறது; அதேபோல, 18-44 வயதினரில் குஜராத், டெல்லியில் மட்டுமே 5% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 17% பேரும், 45-59 வயதினரில் 15.3% பேரும் மட்டுமே முதல் தவணைத் தடுப்பூசியை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். நாட்டிலேயே இந்த வயதினரில் தமிழகத்தில்தான் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 77.9% பேருக்குத் தடுப்பூசி கிடைத்திருப்பதுடன் ஒப்பிட்டால் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது தெரியவரும்.

கரோனாவின் இந்த அலையில், உயிரிழப்புக்கு வயது ஒரு காரணமாக இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. இளம் வயதினரின் இறப்பு விகிதம் அதிகரித்துவரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச்செய்ய வேண்டியது அவசரத் தேவை. ஆகையால், வயது வேறுபாடின்றித் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் உத்தியைத் தமிழகம் கையில் எடுக்கலாம்; இதில் முன்னுரிமை அளிக்கையில் முன்களப் பணியாளர்கள், மூத்த குடிகள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் என்று வரிசைப்படுத்தலாம் என்றாலும், ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோரை வயதைக் காட்டிப் பின்னே தள்ள வேண்டியது இல்லை. 18 வயதைக் கடந்தோர் தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புக்குப் பிறகு பெரிய கூட்டம் முன்பதிவுசெய்து காத்திருக்கிறது. தடுப்பூசி கிடைப்பதில் நிலவும் பற்றாக்குறை வெளிப்படையாகத் தெரியும் நிலையில், ஏனைய மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி குறிப்பிட்ட காலகட்டத்தில் தடுப்பூசி இலக்கை அடைவதற்கு ஏற்ப தடுப்பூசிகளை அளிக்க ஒன்றிய அரசை நிர்ப்பந்திக்கலாம். தடுப்பூசியில் எவ்வளவு பின்தங்குகிறோமோ அவ்வளவுக்கு கரோனாவுக்கு உயிர்கள் சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் நாம் அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x