Last Updated : 11 May, 2021 03:11 AM

 

Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

கரோனாவை அறிய சி.டி. ஸ்கேன் அவசியமா?

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்திப் குலேரியா ‘கரோனா தொற்றாளர்கள் அனைவருக்கும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை தேவையில்லை’ என்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதே அறிக்கையில், ஒருமுறை சி.டி. ஸ்கேன் எடுப்பது 400 முறை எக்ஸ்ரே எடுப்பதற்குச் சமம் எனவும், இந்த நிலைமை நீடித்தால் நாளடைவில் நாட்டில் புற்றுநோய் ஆபத்து பெருகும் எனவும் எச்சரித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ‘இந்தியக் கதிர்வீச்சு நிழற்படக் கழக’த்தின் (Indian Radiological and Imaging Association) தலைவர் அமர்நாத் ‘அறிவியலுக்குப் பொருந்தாத இந்த அறிக்கையை குலேரியா அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது’ என மறுப்பு தெரிவித்ததும் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஸ்கேன் விஷயத்தில் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியது.

சி.டி. ஸ்கேன் சர்ச்சை

நவீன மருத்துவத்தில், ஒரு நோயைக் கணிப்பதற்கும், காரணம் அறிவதற்கும், முறையான சிகிச்சைக்குப் பிறகு நோய் குறைகிறதா, வளர்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக, எந்தவொரு தனிப் பரிசோதனையும் 100% சரியாக நோயைக் கணிப்பதில்லை. அதனால்தான், ஒரே நோய்க்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. அதோடு, பயனாளியின் அறிகுறிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், கரோனா தொற்றாளர்களுக்கு ‘ஆர்டிபிசிஆர்’, சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் முக்கியமாகின்றன. ‘ஆர்டிபிசிஆர்’ கரோனா தொற்று உள்ளதா என்பதைத் தெரியப்படுத்தவும், சி.டி. ஸ்கேன் அந்தத் தொற்று ஏற்படும் நுரையீரல் பாதிப்பை அளவிடவும் உதவுகின்றன. இவற்றில் சி.டி. ஸ்கேன் தேவையில்லாமல் பயன்படுத்தப்படுவதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் குலேரியா.

“அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் கரோனா தொற்றாளர்கள் குணமாகும் வரை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அதுபோன்ற மருத்துவக் கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. ஆகவே, அந்த நாடுகளோடு ஒப்பிட்டு, இந்தியாவிலும் தொற்றாளர்களுக்கு சி.டி. ஸ்கேன் தேவையில்லை என்று கூறுவது சரியில்லை.” இப்படியொரு விவாதமும் இந்திய மருத்துவர்களிடம் இருக்கிறது. இந்தப் பின்னணியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்திருக்கும் சி.டி. ஸ்கேனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் புரிந்து நடந்துகொண்டால், இந்தச் சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் போகும்.

எப்போது, யாருக்குத் தேவை?

கரோனா அறிகுறிகள் ஆரம்பித்த 5 - 7 நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி சி.டி. ஸ்கேன், ‘ஆர்டிபிசிஆர்’ எடுப்பது சரியாக இருக்கும். தற்போது பரவிவரும் வேற்றுருவ கரோனா கிருமிகள் ‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனையில் தப்பிவிடுவதால், 100 பயனாளிகளில் 30 பேருக்குத் தவறான முடிவுகளைக் காட்டிவிடுகிறது. அதே சமயம், இவர்களுக்கு சி.டி. ஸ்கேனில் கரோனா பாதிப்பு இருப்பது தெரிகிறது. ஆகவே, ‘ஆர்டிபிசிஆரி’ல் தொற்று இல்லை என்று சொன்னவர்களுக்கும் நோயின் அறிகுறிகள் தீவிரமானால் சி.டி. ஸ்கேன் எடுப்பது அவசியம்.

மூச்சுத்திணறல், இடைவிடாத இருமல், உடல் அசதி, பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் அளவு 6 நிமிட நடைக்குப் பிறகு 94%-க்கும் குறைவாக இருத்தல், நெஞ்சுவலி ஆகிய நிலைமைகளில் சி.டி. ஸ்கேன் அவசியம். கரோனா பாதிப்பு கடுமையாக இருப்பவர்களுக்கு நுரையீரலில் ரத்த உறைவுக்கட்டி உருவாகி, திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதை முன்னரே அறிந்து உயிர் காப்பதற்கும், பயனாளியின் சுவாசப்பையில் பிற தொற்றுகள் இருந்தால் தெரியப்படுத்தவும் சி.டி. ஸ்கேன் உதவும். இன்னொரு முக்கியமான நன்மை என்னவென்றால், குறைவான நேரத்தில் அதிகம் பேரைப் பரிசோதிக்க முடியும். ஸ்கேனில் தெரியும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சையைத் தீர்மானிக்க முடியும்.

எப்போது தேவையில்லை?

சி.டி. ஸ்கேனைப் பயனாளிகள் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முக்கியமாக, நோயின் ஆரம்பத்தில் மேற்கொள்ளக் கூடாது. காய்ச்சல், இருமல் இருந்தாலே சி.டி. ஸ்கேன் அவசியமில்லை. அறிகுறிகள் எதுவும் இல்லை, மிதமான அறிகுறிகளுடன் நோய் குணமாகிவருகிறது, மூச்சுத்திணறல் இல்லை, ஆக்ஸிஜன் 94%-க்கும் எனில் சி.டி. ஸ்கேன் தேவையில்லை. அதே நேரத்தில், ஸ்கேனில் கரோனா பாதிப்பு இல்லை என்று வந்து, பயனாளிக்குத் தொற்றுக்குரிய அறிகுறிகள் இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று குணமானவர்கள் நுரையீரலில் பாதிப்பு குறைந்துவிட்டதா என்பதை அறிய சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டியதில்லை. காரணம், அந்தப் பாதிப்பு மறைய 8 வாரங்கள் வரை ஆகும்.

எக்ஸ்ரே மாற்று ஆகுமா?

சி.டி. ஸ்கேனுக்குப் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவு பல மடங்கு அதிகம் என்பதால் பயனாளிக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்பது சமூகத்தின் அச்சம். ஸ்கேனுக்குப் பதிலாக எக்ஸ்ரே எடுக்கலாமா என்றவொரு கேள்வியும் இருக்கிறது. இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தில் சி.டி. ஸ்கேனுக்குப் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவு மிகவும் குறைவு. 12 விநாடிகளில் கதிர்வீச்சு முடிந்துவிடுகிறது. இதனால், மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வழியில்லை. குறிப்பாக, கரோனாவுக்காக ஒரே ஒருமுறை மேற்கொள்ளப்படும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை புற்றுநோயை ஏற்படுத்திவிடும் என்று அச்சம்கொள்ளத் தேவையில்லை.

அடுத்ததாக, கரோனாவின் ஆரம்பப் பாதிப்பை எக்ஸ்ரே பரிசோதனையில் கணிக்க முடியாது. மேலும், இதில் கூருணர்வு (Sensitivity) குறைவு. அதனால், பாதிப்பின் படிநிலைகளைப் பகுக்க முடியாது. முதன்முதலில் சீனாவில் கரோனா பரவியபோது, பயனாளியின் எக்ஸ்ரே படத்தைப் பார்த்துச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். ஆனால், நாளடைவில் எக்ஸ்ரேயைவிட சி.டி. ஸ்கேனில் கிடைக்கும் நன்மைகளே அதிகம் எனப் புரிந்ததும் ஸ்கேனைக் கட்டாயமாக்கினார்கள். கரோனா தீவிரமாகப் பரவும் இன்றைய சூழலில் சி.டி. ஸ்கேனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உலகச் சான்று இது.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x