Published : 07 May 2021 03:12 am

Updated : 07 May 2021 04:01 am

 

Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 04:01 AM

தடுப்பூசி அறிவியல்: யாருடைய சொத்து?

covid-19-vaccine

டிசம்பர் 2019-ல் கரோனா தலைகாட்ட ஆரம்பித்தது. ஜனவரி 2020-ல் அதன் மரபுக் கட்டமைப்பு அறியப்பட்டது. அடுத்த 10 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராகிவிட்டன. இம்மாதிரி உயிர் காக்கும் மருந்துகள் மக்களைச் சென்றடைவதில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டறியப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. ஆய்வு வெற்றியடையும்போது நிறுவனங்கள் மருந்தின் கலவையையும் செய்முறையையும் பகிர்ந்துகொள்வதில்லை. எனவே, மருந்துகள் அதீத விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க முடிவதில்லை. 1995-ல் உலக வணிக அமைப்பு உருவாக்கிய ஒப்பந்தம் இவர்களின் நலனைக் காக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் வணிகம் தொடர்பான சட்டங்கள் (டிரிப்ஸ்) என்பது அந்த ஒப்பந்தத்தின் பெயர்.

டிரிப்ஸ் சட்டத்துக்கு ஆதரவாகச் சொல்லப்படும் வாதம், சிலர் பாடுபட்டு உருவாக்கிய அறிவுசார் சொத்து பகிர்ந்துகொள்ளப்பட்டால், நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்வம் இராது என்பதாகும். சில பொருளியல் அறிஞர்கள் இதற்கு ஒரு மாற்றை முன்வைக்கின்றனர். மனித குலத்துக்கு அவசியமான மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்குத் தக்க பரிசும் பணமும் பாராட்டும் வழங்கி அந்த அறிவைப் பொதுவுடைமை ஆக்கிவிட வேண்டும். அப்போது எல்லா நிறுவனங்களாலும் அந்த மருந்தைத் தயாரிக்க இயலும். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.


இந்த முறை தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கியதிலிருந்தே அரசுப் பணத்தைப் பல நாடுகள் தாராளமாகச் செலவு செய்தன. இதுவரை உலக அளவில் ரூ.7 லட்சம் கோடி பொதுப் பணம் செலவிடப்பட்டிருப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ஆனாலும், இந்தத் தடுப்பூசிகளின் உரிமம் நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கிறது. எப்படி?

மாடர்னா என்கிற தடுப்பூசியை உருவாக்குவதில் அந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட நை-எய்ட், பார்டா ஆகிய ஆய்வு நிறுவனங்கள் அமெரிக்க அரசின் நிறுவனங்கள். எல்லாச் செலவையும் அரசே ஏற்றுக்கொண்டது. ஆனால், உரிமம் மாடர்னாவிடமே இருக்கிறது. பைசர் அமெரிக்க நிறுவனம். அதனுடன் இணைந்து பணியாற்றிய பயோ-என்-டெக் என்கிற ஜெர்மானிய நிறுவனம், சீனாவிடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் நிதியுதவி பெற்றது. எனினும் உரிமம் பைசரிடமே இருக்கிறது. ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் அரசு ஆதரவில்தான் உருவாகியது. இப்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று கோவிஷீல்ட். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரஜெனகா என்கிற பிரிட்டிஷ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியது. இந்த உருவாக்கத்தில் 97% செலவினம் அரசால் ஏற்கப்பட்டது. ஆனால், அதன் உரிமம் ஆஸ்ட்ரஜெனகாவிடம்தான் இருக்கிறது. தனது உரிமத்தை அது பல அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்றது. அப்படித்தான் புனேயில் உள்ள இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட், கோவிஷீல்டின் உரிமத்தைப் பெற்றது. சீரம் தனது மருந்தை ஒன்றிய அரசுக்கு ரூ.150-க்கு விற்றுவருகிறது. அதை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கிவருகிறது.

ஏப்ரல் 19 அன்று ஒன்றிய அரசு ஒரு கொள்கை முடிவை அறிவித்தது. அதன்படி, 18 முதல் 44 வயதினருக்கான மருந்தை மாநிலங்களும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். இப்போது சீரம் நிறுவனம் மாநிலங்களுக்கு ரூ. 300, தனியாருக்கு ரூ.600 என்று விலை வைத்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசின் முதலீட்டில், ஒரு பல்கலைக்கழகத்தில் உருவான தொழில்நுட்பம், இன்று இந்தியச் சந்தையில் ஒரு முதலாளிக்கு லாபம் ஈட்டித்தருகிறது.

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் இன்னொரு தடுப்பூசி கோவேக்சின். இதன் தயாரிப்பாளர் பாரத் பயோடெக் எனும் ஹைதராபாத் நிறுவனம். இந்த மருந்தின் உருவாக்கத்தில் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துக்கு (ஐ.சி.எம்.ஆர்) கணிசமான பங்கு இருக்கிறது. இந்திய அரசின் நல்கையும் இருக்கிறது. ஆனால், மேலை நாடுகளைப் போல அரசின் பங்கு எவ்வளவு என்பது பொதுத்தளத்தில் அறியக் கூடவில்லை. இந்த நிறுவனம், ஏப்ரல் 19-க்குப் பிறகு மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.1,200 என்று புதிய விலைப்பட்டியலை அறிவித்திருக்கிறது.

கூடுதல் விலையானாலும் பரவாயில்லை, அவற்றை வாங்கி மக்களுக்கு இலவசமாகச் செலுத்துவோம் என்று தமிழகம், கேரளம், மஹாராஷ்டிரம் முதலான வளர்ந்த மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. ஆனால், சந்தையில் மருந்து இல்லை. ஒன்றிய அரசு இரண்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கும் ரூ.4,500 கோடி வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும். ஆனால், அவை சந்தைக்கு வரத் தாமதமாகும். போதுமான அளவிலும் இருக்காது. மேலும் எந்த மாநிலங்களுக்கு வழங்குவது என்பதை நிறுவனங்களே முடிவு செய்யுமா என்பதும் தெரியவில்லை.

இந்தச் சூழலை எப்படி நேரிடுவது? பல வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர். இன்றளவும் பிள்ளை களுக்கு அம்மை, காசநோய், போலியோ, நிமோனியா, நாய்க்கடி, மஞ்சள் காமாலை முதலிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஒன்றிய அரசுதான் மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குகிறது. அதைப் போலவே இந்த கரோனா தடுப்பூசி மருந்தையும் ஒன்றிய அரசே நேரடியாக வாங்கி, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். ஏனெனில், ஒன்றிய அரசிடம்தான் நிதி, நிபுணத்துவம், அதிகாரம், அயலுறவு எல்லாம் இருக்கிறது.

இதைத் தாண்டி, மாநில அரசுகள் தடுப்பூசியை வாங்க விரும்பினால் அதற்கான சுதந்திரமும் அவற்றுக்கு இருக்க வேண்டும். மேலும், அரசு கோவிஷீல்டு முதலான மேலை நாட்டு மருந்துகளின் காப்புரிமையை வாங்கி, நமது பொதுத் துறை, தனியார் துறை மருந்து நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். கோவேக்சினின் காப்புரிமையையும் கையகப்படுத்தி இன்னும் பல உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள மக்களின் பணத்தில் அறிவியலர்கள் தடுப்பூசிகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அவை வியாபாரிகளின் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த மருந்துகளால் நாடு பயனுற வேண்டும். அதை நமது அரசுகளால் செய்ய முடியும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.comதடுப்பூசி அறிவியல்Covid 19 vaccineகரோனாஅறிவுசார் சொத்துரிமைமாடர்னா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x