Last Updated : 06 May, 2021 03:12 AM

 

Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

பிரசாந்தும் சுனிலும்: இரு பிரச்சாரக் கதைகள்!

இரண்டு கட்சிகளுமே இந்தத் தேர்தலில் வியூக அணி வைத்துக் களமிறங்கின. பிரசாந்த் கிஷோருடன் ஆளுங்கட்சியான அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று தகவல்கள் வந்தபோதே திமுக சுதாரித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. அதிமுகவுக்கும் பிரசாந்துக்கும் இடையே ஒப்பந்தங்கள் ஏதும் ஏற்படாத நிலையில், அவருடன் திமுக கைகோத்துக்கொண்டது. சுனிலைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது அதிமுக. ஒருகாலத்தில் பிரசாந்த் கிஷோரும் சுனிலும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள் என்பதும், திமுகவுடன் வேலை பார்த்தவர்தான் சுனில் என்பதும் இதில் வேடிக்கையானது.

வங்கத் தேர்தலில் வியூகம் வகுப்பதற்காக பிரசாந்த் கிஷோருடன் கைகோத்துக்கொள்வதில் மம்தா அலாதியான ஆர்வம் காட்டினார். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அவருக்கான ஆதரவு அப்படி இருக்கவில்லை. எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்த ஒரு கட்சி வியூக வகுப்பாளரின் பின்னால் செல்வதா என்று கேள்விகள் எழுந்தன. தமிழ்நாட்டைப் பற்றி அறிந்திராத ஒரு வடமாநில பிராமணரின் பின்னால் திமுக செல்வதா என்று கட்சிக்கு உள்ளேயும் கேலி பேசினார்கள். திமுகவின் தலைமை மட்டுமல்ல; தொண்டர்கள் வரையில் காலமாற்றங்களும் கோலமாற்றங்களும் நிறைய வந்திருக்கின்றன. எதிர்க்கட்சியின் அணுகுமுறையிலும்கூட. இந்த நிலையில்தான், தவறான தேர்தல் வியூகங்களால் மட்டுமே தோற்றுவிடக் கூடாது என்று திமுக முடிவெடுத்தது.

திமுகவின் பிரச்சார வியூகம்

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் யோசனைகளில் ஒன்றுதான் ‘ஸ்டாலின்தான் வாராரு’ தீம் சாங்க். உரத்த குரலில் நாகூர் ஹனீபா பாடல்கள் கேட்டுப் பழகிய மேடைகளில் இந்தப் பாடல் ஆரம்பத்தில் விநோதமாகப் பார்க்கப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல பலருடைய நாக்குகளிலும் அந்தப் பாடல் ஒட்டிக்கொண்டது. அதுபோலவே, குளிர்பான விளம்பரங்கள்போல ஒரே மாதிரி தமிழகம் முழுவதும் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளும் ஐபேக்கின் யோசனைதான். அது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவிடவில்லை என்றாலும், மிகவும் தெளிவாக ஒரு அரசியலைச் செய்தது. அந்த விளம்பரங்களில் ஸ்டாலினைத் தவிர வேறு யாருமில்லை. கிராமசபா கூட்டங்கள் தொடங்கி பிரச்சாரக் கூட்டங்கள் வரையில் அரங்க வடிவமைப்பு, செட் பிராப்பர்ட்டி வரைக்கும் ஸ்டாலினைத் தவிர அங்கு வேறு யாருக்கும் இடமில்லை. ஸ்டாலினின் ‘க்ளீன் இமேஜை’த் தக்கவைத்துக்கொள்ள கட்சிக்காரர்களிடமிருந்தே அவரைப் பிரித்துக்காட்டியது ஐபேக்.

திமுகவில் மாவட்டச் செயலாளருக்கு ஒருவர், மண்டலப் பொறுப்பாளருக்கு ஒருவர் என்று கட்சிக்கு இணையாகவே ஒரு கட்டமைப்பை உருவாக்கி, சுமார் 500 பேருடன் இயங்கியது பிரசாந்த் அணி. சென்னையில் ஐபேக் தலைமை அலுவலகம் இயங்க, தொகுதிவாரியாக இளைஞர் பட்டாளம் ஒன்று அனுதினமும் தகவல்களை அனுப்பியபடியே இருந்தது. அவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அறிக்கைகளாகவும் யோசனைகளாகவும் சபரீசன் வழியாகக் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுவந்தன. கட்சியின் மற்ற எந்தத் தலைவர்களோடும் ஐபேக் நிறுவனத்துக்குத் தொடர்புகள் இல்லை. யார் யாருக்குத் தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது, யாரை நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பு தொடங்கிய யோசனைகள் வேட்பாளர் தேர்விலும் கணிசமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க ஐபேக் அனுப்பி வைத்த ஒவ்வொரு தகவலும் தேர்தலைத் தாண்டி, கட்சியின் உள்கட்டமைப்பு பற்றியும் ஆழமாகப் பரிசீலிக்க வைக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதிமுக அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கி நின்ற திமுக பொறுப்பாளர்களைக் கிளை வாரியாக ரிப்போர்ட் செய்திருக்கிறது ஐபேக். அதே நேரத்தில், ஒவ்வொரு தொகுதியிலும் அமமுக, நாதக, மநீம கட்சி வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகளைப் பிரிப்பார்கள் என்ற கணிப்பையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறது. எனவே, தேர்தலுக்கு முந்தைய சில நாட்களில் அதிமுக உருவாக்கிய கடைசி அலையில் திமுகவின் வேட்பாளர்கள் திணறினாலும், தலைமையிடம் பதற்றம் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் அண்ணா அறிவாலயத்திலிருந்து இயங்கிய ‘வார் ரூம்’ வாக்குச் சாவடி நிர்வாகத்தைக் கையிலெடுத்துக்கொண்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் 10 வழக்கறிஞர்களை நியமித்து வாக்குச் சாவடிகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்று அவர்களுக்குப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுக்க ஏறக்குறைய 2,000 வழக்கறிஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடி வாரியாக ஆராய்ந்த வழக்கறிஞர் குழுவும் அதிருப்தி அறிக்கைகளைப் பகிர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஐபேக் அறிக்கைகளுடன் இந்த அறிக்கைகளும் சேர்ந்து திமுகவின் அடித்தளத்தில் ஏற்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத விரிசல்களைச் சரிசெய்யும் வாய்ப்பை வழங்கியிருக்கின்றன.

அதிமுகவின் பிரச்சார வியூகம்

ஐபேக்கைத் தவறவிட்டாலும் அங்கு பயிற்சிபெற்றவரும், திமுகவுக்கு 2019 மக்களவைத் தேர்தலுக்கு வியூகம் வகுத்தவருமான சுனிலுடன் சேர்ந்து களமிறங்கியது அதிமுக. ஐபேக்குடன் சபரீசன் மட்டுமே தொடர்பில் இருந்ததைப் போல, சுனில் அணியினரும் பழனிசாமியுடன் மட்டுமே தொடர்பில் இருந்தார்கள். பழனிசாமி தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் இருந்தபோதும்கூட அவரது மகன் மிதுன் குமார் வழியாக மட்டுமே தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கட்சிக்காரர்கள், உறவினர்களின் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தார் மிதுன்குமார். எனவே, அதிமுக வெற்றிக்காக என்னென்ன வியூகங்கள் வகுக்கப்பட்டன, அவற்றில் என்னென்ன செயல்படுத்தப்பட்டன என்பதெல்லாம் சுனிலுக்கும் பழனிசாமிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான், தென்மாவட்டங்களில் வருகிற பாதிப்பைப் பொருட்படுத்தாமல், தனக்கு மட்டுமே பலன் தருகிற வகையில் வன்னியர் தனி இடஒதுக்கீடு, தேமுதிகவை வெளியேற்றுவது போன்ற முடிவுகளை அவர் செயல்படுத்தினார். முதல்வரின் இமேஜை முன்னிலைப்படுத்துவது, முதல்வர் போகும் இடங்களில் அவருக்கான பேச்சைத் தயாரித்துக்கொடுத்தது எல்லாம் சுனில் அணியின் வேலைகள்தான்.

பிரசாந்த் அணி 500 பேருடன் இயங்கியது என்றால், சுனில் அணியோ வெறும் 50 பேருடன் இயங்கியது. திமுகவுக்காக வேலைபார்த்ததன் மூலம் தமிழகத்தின் பூகோள, அரசியல் வரைபடங்களைக் கரைத்துக் குடித்திருந்த அந்த அணி, அதை அப்படியே அதிமுக வேட்பாளர் தேர்வுக்கும் பயன்படுத்தியது. ஏற்கெனவே எம்பியாக இருக்கும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், கட்சியை விட்டு ஒதுங்கியிருக்கும் சைதை துரைசாமி (இவர் விருப்ப மனுவே கொடுக்கவில்லை) போன்றோரை வேட்பாளராக்கியதும் இவர்களது யோசனைதான். 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்துவதைவிட ஆட்சியமைக்கத் தேவையான 120 தொகுதிகளில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்துவது என்று முடிவெடுத்து வியூகத்தை மாற்றியமைத்ததும் இந்த அணியே. கட்சிக்குள் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய நிர்வாகிகளை நிர்ணயிப்பது, மாவட்ட - ஒன்றிய அமைப்புகள் பிரிப்பது, கூட்டணி வகுப்பது போன்றவற்றிலும் சுனிலின் மூளை பயன்பட்டிருக்கிறது.

அதிமுக தேர்தல் வியூகங்களின் வெற்றி என்பது பெரிதும் அதன் பிரச்சார உத்திகள்தான். எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக கையில் எடுக்கும் அஸ்திரங்களையெல்லாம் ஆளுங்கட்சியான அதிமுக கையில் எடுத்துக்கொண்டது ஆச்சரியம். ‘தில்லுமுல்லு முன்னேற்றக் கழகம்’ என்ற தலைப்புடன் அதிமுகதான் பிரச்சாரக் காணொளிகளை முதலில் வெளியிட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அதே பாணியில், திமுகவும் எஜமான் – அடிமைகள் என்று காணொளிகளை வெளியிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் உத்திகளை எதிர்க்கட்சியைத் தீர்மானிக்கவிடாமல் தனது வழியில் பயணிக்க வைத்தது அதிமுகவுக்கு ஒரு வெற்றிதான். தேர்தல் பிரச்சாரம் முடிகிற நாளன்று செய்தித்தாள் விளம்பரங்களை வெளியிட்ட அதிமுக, அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு திமுகவுக்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது.

பிரசாந்த் கிஷோர், சுனில் இருவரின் வரவும் தேர்தல் அணுகுமுறையை வெகுவாக மாற்றியிருக்கிறது. கிண்டலும் கேலியுமான பிரச்சார வியூகங்கள் வழியாக இரண்டு கட்சிகளும் மாறிமாறித் தங்களைச் சீண்டிக்கொண்டன என்றாலும், அதில் இன்னொரு வகையில் சீண்டப்பட்டது மக்களின் கோரிக்கைகளும்தான். தனிநபர் விதந்தோதல்கள் மற்றும் தனிநபர் தாக்குதல்களை அதிகம் மையப்படுத்தும் இந்தப் புதிய வகைப் பிரச்சார வியூகத்தால் மக்களின் கோரிக்கைகள் பெரும் அளவில் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இதுவரை யாரும் இதை விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இது உண்மையில் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டியது!

கிண்டலும் கேலியுமான பிரச்சார வியூகங்கள் வழியாக இரண்டு கட்சிகளும் மாறிமாறித் தங்களைச் சீண்டிக்கொண்டன என்றாலும், அதில் இன்னொரு வகையில் சீண்டப்பட்டது மக்களின் கோரிக்கைகளும்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x