Published : 05 May 2021 06:58 PM
Last Updated : 05 May 2021 06:58 PM

கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த 100 நாட்களில் செய்ய வேண்டியவை என்னென்ன?- மருத்துவர் சுரேந்திரன் வழிகாட்டல்

கரோனா வைரஸ் உற்பத்தியானதாகக் கருதப்படும் சீனாவில் 2019 டிசம்பர் முதல் இன்று வரை கரோனாவால் மரணமடைந்தவர்கள் ஐயாயிரத்திற்கும் குறைவு. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டாகிவிட்டது. இன்றைய நிலையில் தினந்தோறும் தொற்று அந்நாட்டில் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது.

நடந்தது எப்படி?

கரோனா வந்தவுடன் சீனா, வூஹான் மாநிலத்தையே சீல் வைத்துவிட்டது. 10,000க்கும் அதிகமான படுக்கை வசதிகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவமனையை ஒரு மாதத்தில் உருவாக்கியது. தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் - ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள்,- பணியாளர்களைக் களத்தில் இறக்கியது. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் - இருமல் கண்டறியப்பட்ட நோயாளிகள் - கரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கு நான்கு பிரிவுகள் செயல்பட்டன.

1. காய்ச்சல் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
2. பாசிட்டிவ் ஆக அறியப்பட்ட மிதமான நிலை நோயாளிகள் கண்காணிப்புப் பிரிவுக்கும்
3. மத்திய நிலை நோயாளிகள் - சிகிச்சைப் பிரிவுக்கும்
4. கடுமையான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் அனுப்பப்பட்டார்கள்.

தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு 70 சதவீதம் பேருக்கு மேல் போடப்பட்டு விட்டது. இன்று சீனா பாதுகாப்பாக இருக்கிறது.

இரண்டாம் அலை 100 நாட்கள் இருக்கும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த 100 நாட்களில் நாம் செய்ய வேண்டியவை?

சென்னையிலும் எல்லா மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரில் மருத்துவக் கல்லூரியும், அடுத்த பெரிய நகரங்களில் மாவட்ட மருத்துவமனைகளும் உள்ளன. அவற்றின் செயல்பாட்டை இரண்டாகப் பிரித்து,

1. கரோனா சேவைப் பிரிவு
2. கரோனா அல்லாத மருத்துவ சேவைப் பிரிவு என 2 பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும். அவற்றில் தனித்தனியாக நுழைவு வழி- வெளியேறும் வழி எனச் சரியான வழிகாட்டுதல்களுடன் செயல்பட வேண்டும்.

தனியார் மருத்துவமனைனகள் அனைத்திலும் காய்ச்சல் கண்டறியும் பிரிவு செயல்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய நோயாளிகள் உடனடியாக கரோனா சிகிச்சை மையம், மருத்துவக் கல்லூரி அல்லது மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு, கரோனா சோதனை செய்யப்பட்டு பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

100 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் 50 சதவிகிதம் கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட வேண்டும். 100 படுக்கைகளுக்குக் கீழ் உள்ள மருத்துவனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கும் வசதிகள் இருக்காது. அங்கு கோவிட் நோயளிகளைச் சேர்த்தால் அவை நோய் சிகிச்சை மையமாக இருக்காது, நோய் பரப்பும் மையமாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். அவசியமானால் கல்லூரி வளாகங்களையும் பெரிய விடுதிகளையும் அரசு கையகப்படுத்தி, கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம்.

அரசு- தனியார் என்று பிரித்துப் பார்க்காமல் கரோனா சிகிச்சை மருத்துவமனைகளுக்கு மருந்துகள் - ரெம்டெசிவிர், ஆக்சிஜன் உள்ளிட்டவை தங்கு தடையின்றிக் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோவிட்-19 மருத்துவப் போராளிகளான மருத்துவர் - செவிலியர் - பணியாளர்களுக்குத் தக்க பாதுகாப்புக் கவசங்கள் வழங்க வேண்டும். அவர்களே நோய்வாய்ப்பட்டால் மருத்துவச் செலவு வழங்குவதாகவும் உயிரிழக்க நேர்ந்தால் இழப்புத் தொகை வழங்கப்பட அரசு பிறப்பித்த உத்தரவுகள் தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டால் மருத்துவர்களும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பத்தாரும் ஓரளவு பாதுகாப்புணர்வு பெறுவார்கள்.

மனித குலம் கோவிட்-19 தொற்றிலிருந்து தப்ப வேண்டுமானால் ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 70 முதல் 80 சதவீதம் பேர் நோய்த் தடுப்பாற்றாலைப் பெற வேண்டும். அதற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.

முதலாவது:

தடுப்பூசி இல்லாத காலத்தில் மக்கள்தொகையில் 80 சதவீதம் பேரை - இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நோய்க் கிருமி அலை அலையாக வந்து தாக்கி 2 சதவீதம் முதல் 7 சதவீதம் பேரைக் கொன்றுவிடும். மீதமுள்ள மக்கள் அனைவரும் நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவார்கள். உதாரணம் பிப்ரவரி 1918 முதல் ஏப்ரல் 1920 வரை உலகை அலற வைத்த ஸ்பானிஷ் ஃப்ளு நோய். இயற்கையான முறையில் ஒரு சமூகமே நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவது என்பது பேரழிவை ஏற்படுத்திவிடும். எனவே இது சாத்தியமான ஒன்றல்ல.

இரண்டாவது வழி:

குறுகிய காலத்தில் 2 அல்லது 3 மாதங்களுக்குள் நாட்டின் (அல்லது மாநிலத்தில்) 70 முதல் 80 சதவீதம் பேரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வது - இப்பொழுது மத்திய, மாநில அரசுகளின் நிதானப் போக்காலும், மக்களிடம் உள்ள தயக்கத்தாலும் கோவிட்-19 வைரஸ் புதிய வேகத்தில், புதிய உருமாற்றம் அடைந்து நமது அரசின் நீண்ட கால தடுப்பூசிச் செயல் திட்டத்தைப் பயனற்றதாக்கி விடும். எனவே இப்போதைய தேவை குறுகிய காலத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வதுதான். (உதாரணம்-சீனா, இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா)

மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்கும் தரமான இந்திய உற்பத்தியாளர்களுக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தம் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும்.

உதாரணமாகத் தமிழ்நாட்டில் அரசு செவிலியர் 20,000 மற்றும் கிராமப்புற செவிலியர் 30,000 என 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுடன் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் 30,000 பேர் இருப்பார்கள். மொத்தம் 80,000 பேரில் 50,000 பேரைப் பொது சிகிச்சைக்கு வைத்துக்கொண்டு, மீதி 30,000 செவிலியரைத் தடுப்பூசியை நாள் ஒன்றுக்கு ஒரு செவிலியர் மக்களுக்கு 100 ஊசி எனச் செலுத்தினால் ஒரே நாளில் 30 லட்சம் ஊசி போடலாம்.

24 நாட்களில் 6 கோடி ஊசி தமிழகத்தில் போட்டால், விடுமுறை நாட்கள் போக இரண்டே மாதத்தில் 75 சதவீதம் மக்களுக்குப் போட்டுவிடலாம். தமிழகம் பாதுகாப்பான கரோனா அச்சமில்லாத மாநிலமாக மாறிவிடும். இந்தக் கணக்கு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதைச் சரிவரச் செய்தால் எல்லா மாநில மக்களும் 100 சதவீதம் கோவிட் 19-க்கு எதிரான சமூகப் பாதுகாப்பைப் பெற்று விடுவார்கள் என்பது நிச்சயம்.

இது சாத்தியமா?

இதை சாத்தியமாக்க கரோனா தடுப்பூசி போடுவது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்! தடுப்பூசியின் அவசியம் பற்றியும் அதுவே கரோனா எதிர்ப்புப் போரில், நமது முக்கியமான ஆயுதம் என்பதையும் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதையும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் சேர்ந்து அரசு, அரசுப் பணியாளர்கள், அரசியல் கட்சிகள், மக்கள் சேவை சங்கங்கள் (ரோட்டரி, லயன்ஸ் கிளப், சேம்பர் ஆப் காமர்ஸ்) என அனைவரும் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்.

இதில் முனைப்புடன் செயலாற்றிட வேண்டும். மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த செயல்பாடுகளைத் தலைமையேற்று வழிநடத்த வேண்டும்.

கட்டுரையாளர்: மருத்துவர் சுரேந்திரன்,

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், ஊரகச் சுகாதாரத்தின் தேசியத் தலைவர்,

தொடர்புக்கு: drsurendranrvs@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x