Last Updated : 12 Dec, 2015 10:06 AM

 

Published : 12 Dec 2015 10:06 AM
Last Updated : 12 Dec 2015 10:06 AM

வேதனைப்படுத்தும் சரும நோய்கள்

வெள்ள பாதிப்பால் மக்களை வேதனைப்படுத்துகிற சரும நோய்கள் குறித்த ஒரு பார்வை

சென்னையில் உள்ள மருத்துவ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரித்துவருவதையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் தினமும் கூடிக்கொண்டேபோவதையும் குறிப்பிட்டார்கள். மேலும், வெள்ள பாதிப்பின்போது ஏற்படுகிற நோய்களுடன், இந்தமுறை சரும நோய்களின் பாதிப்பு அதிகம் என்கிறார்கள்.

என்ன காரணம்? வாரக்கணக்கில் மழை நீர் வடிய வழியில்லாமல், வெள்ளத்திலேயே மக்கள் நடந்து பணிக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஒரு காரணம். வழக்கத்தைவிட, இந்தமுறை வெள்ளத்தில் தத்தளித்தவர்களும் வெள்ளநிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டவர்களும் அதிகம் என்பது இன்னொரு காரணம்.

பதம்பார்க்கும் சேற்றுப்புண்

பாதங்களில் நிறைய ஈரம் படும்போது விரல் இடுக்குகளில் உண்டாகிற நோய்க்கு ‘சேற்றுப் புண்’ ( Athlete’s foot ) என்று பெயர். சில வகைப் பூஞ்சைக் கிருமிகள் விரல் இடுக்குகளைத் தாக்குவதால் இது ஏற்படு கிறது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பும் வலியும் தொல்லை தரும். சில நாட்களில் கொப்புளங்கள் வெடித்துப் புண் உண் டாகும். பிறகு விரல்களில் விரிசல் ஏற்படும். சிலருக்கு இது கை விரல் இடுக்குகளிலும்கூட ஏற்படுகிறது.

இறுக்கமான ஷூக்களை நீண்ட நேரம் அணிந்திருப்பவர்களுக்கும் தண்ணீரில் அதிகம் புழங்கும் விவசாயிகள், தோட்ட வேலை/ பண்ணை வேலை மற்றும் வீட்டு வேலை செய்கிறவர்களுக்கும் விரல் இடுக்குகளில் பூஞ்சை வளரத் தேவையான சூழல் நிலவுகிறது. இதனால் இவர்களுக்குச் சேற்றுப்புண் வருகிறது. இப்போது வெள்ளத்தில் அதிக நேரம் இருந்தவர்களுக்கும் தேங்கி நிற்கும் மழைநீரில் புழங்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கும் வெள்ள நிவாரணப் பணிகளில் உதவியவர்களுக்கும் இது ஏற்பட்டுள்ளது.

படையும் படர்தாமரையும்

இதுவும் ஒரு வகைப் பூஞ்சைக் கிருமியின் பாதிப்பால் வருகிற நோய்தான். பொதுவாக, சுத்தமில்லாத இடங்களில் உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் தொடை இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுவது வழக்கம். இப்போது வெள்ள பாதிப்பால் பல நாட்களுக்கு ஒரே உடையை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலும் ஈரத் துணிகளுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் இந்த நோய் பலரையும் பாதித்துள்ளது.

தொடை இடுக்குகளைப் பாதிக்கிற இன்னொரு முக்கிய நோய் ‘சரும மடிப்பு நோய்’(Intertrigo). வழக்கமாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், தொப்புள், இடுப்பு, தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி, விரல் இடுக்குகள் இப்படிப் பல இடங்களில் பூஞ்சை பாதிப்பு அதிகமாகத் தெரியும். இந்த இடங்களில் பாக்டீரியா தொற்றும்போது ‘சரும மடிப்பு நோய்’ ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு இரவில் கடுமையான அரிப்பை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுக்கும். இது தவிர, உடலில் ஈர உடைகளுடன் நீண்ட நேரம் இருப்பதும் அதிக குளிர்ச்சியான சூழலும் ‘படர்தாமரை’ (Ring worm) எனும் தேமல் நோய்க்கு வரவேற்பு தருகின்றன.

தொல்லை தரும் ஒவ்வாமை அரிப்பு

வெள்ளநீரால் மிகவும் தொல்லை கொடுப்பது ஒவ்வாமை காரணமாக வருகின்ற சரும அரிப்பு. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பலவகையான கழிவுகள், பூச்சிகள்/வண்டுகளின் விஷக்கடிகள் போன்றவற்றால் ஏற்படுகிறது. இது பலருக்கு நிரந்தரத் தொல்லையாகவும் மாறிவிடுவது உண்டு, எப்படியென்றால், சருமத்தில் அரிப்பு ஏற்படும்போது சொறிந்துவிடுகிறோம். அப்போது அதில் நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கித் தடித்து நீர் வடிகிறது. போகப் போக அந்த இடங்கள் கறுப்பாகின்றன. இது ‘கரப்பான்’(Eczema) எனும் அரிப்பு நோய்க்கு வழிவகுத்துவிடுகிறது.

சரும வெடிப்பும் பனிக் காயங்களும்

வெள்ளத்தில் அதிகம் புழங்கியவர்களுக்கு அதிக ஈரத்தைத் தாங்க முடியாதநிலையில் சருமம் எளிதில் வெடித்து, செதில் செதிலாக உறிந்து பிறகு தடித்துவிடும் (Keratosis). முக்கியமாக உள்ளங்கையும் பாதமும் பல்லாங்குழிகள்போல் ஆகிவிடும். இது ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மழை வெள்ளத்தைத் தொடர்ந்து இப்போது இரவில் குளிர் அதிகரிக்கிறது. இது பலருக்குப் பனிக் காயத்தை (Cold Bite) ஏற்படுத்துகிறது. கன்னம், காது, தாடை, மூக்கு, உதடு, கை-கால் விரல்கள் ஆகிய பகுதிகளில் உள்ள சருமத்தில் விரிசல்கள் தோன்றி கடுமையான வலியை ஏற்படுத்தும். சருமத்தில் இருக்கிற சிறு ரத்தக் குழாய்கள் அதிக குளிர்ச்சியைத் தாங்க முடியாதபோது அவை சுருங்கிப் போகின்றன. அப்போது அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து திசுக்கள் இறக்கின்றன. இதன் விளைவுதான் பனிக் காயங்கள்.

வேதனைகளைக் குறைக்க என்ன வழி?

முதலில் உடலில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை நீரில் உடைகள் நனைந்திருந்தால் வீட்டுக்கு வந்ததும் உடனடியாக மாற்றிவிட வேண்டும். சுடுநீரில் முகம், கை கால்களைக் கழுவ வேண்டியது முக்கியம். குறிப்பாக, விரல் இடுக்குகளில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி நன்கு கழுவ வேண்டும்.

தினமும் இரண்டு வேளை மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும். ‘ஆன்டிசெப்டிக் சோப்பு’ போட்டுக் குளிப்பது நல்லது. மழைக் காலத்தில் நன்றாகக் காய்ந்த பருத்தி ஆடைகளை அணிவதே நல்லது. ஈரமான உள்ளாடைகளை அணியவே கூடாது. ஆலோவீரா கலந்த களிம்பு, ஆலிவ் எண்ணெய் அல்லது பாரபின் எண்ணெயை உடலில் தேய்த்துக்கொண்டால் சரும அரிப்பு குறையும். மழைக் காலத்தில் கால்களுக்கு நல்ல காற்றோட்டம் தேவை. கால்களில் ஷூ அணிவதற்குப் பதிலாக காற்றோட்டமுள்ள செருப்புகளை அணிவது நல்லது. படர்தாமரை போன்ற பூஞ்சை நோயுள்ளவர்கள் பயன்படுத்திய துண்டு மற்றும் ஆடைகளை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஈரத் தரையில் துண்டு விரித்துப் படுக்க வேண்டாம். பாய், ஜமுக்காளம் போன்றவற்றை விரித்துப் படுப்பதே நல்லது. மழைக்காலம் என்றாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் பானங்களைக் குறைத்துக்கொண்டு பழங்களையும் பழச்சாறுகளையும் அருந்த வேண்டும். உடலில் காயம் பட்டிருந்தால் டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உடல் சுத்தம், உடை மற்றும் உணவு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, சருமப் பிரச்சினைகள் வருவதைத் தடுக்கலாம்.

- கு. கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x