Last Updated : 16 Jun, 2014 10:00 AM

 

Published : 16 Jun 2014 10:00 AM
Last Updated : 16 Jun 2014 10:00 AM

குறும்புக்காரக் கவிஞர் சித்தலிங்கய்யா!

சித்தலிங்கய்யாவின் ‘உலகே, உன்னோடு ஒரு வார்த்தை’ என்ற சுயசரிதை குறித்து…

சித்தலிங்கய்யாவின் சுயசரிதையை, மறைந்த டி.ஆர். நாகராஜ்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். பெங்களூரில் கோஷியின் பரேட் கேஃப் என்ற இடத்தில் நாங்கள் சந்தித்துக்கொண்டபோது நான் கூறினேன், “மிகச் சிறந்த இந்திய சுயசரிதைகள்கூட நகைச்சுவை சிறிதும் இல்லாமல் வறட்சியாக இருக்கின்றன; மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, நிராத் சி. சௌத்ரி போன்றவர்களின் சுயசரிதைகளில் ஒரு நகைச்சுவைத் துணுக்குகூட இல்லை” என்று அலுத்துக்கொண்டேன்.

“நீங்கள் பொதுவாகக் குறிப்பிடுவன அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுயசரிதைகளுக்குத்தான் பொருந்தும்; கன்னடத்தில் எழுதப்பட்ட சுயசரிதைகள் எப்போதுமே இப்படி வறண்டதாக இருந்ததில்லை. நாடக ஆசிரியர் பி. லங்கேஷ், கவிஞர் சித்தலிங்கய்யா இருவருடைய சுயசரிதைகளிலும் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது - அதிலும் இருவரும் தங்களைத் தாங்களே கேலி செய்துகொள்வதில் நிபுணர்கள்” என்றார் நாகராஜ்.

எனக்குத் தெரிந்தவரையில், லங்கேஷின் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால், சித்தலிங்கய்யாவின் புத்தகம் சாகித்ய அகாடமியால் சில ஆண்டுகளுக்கு முன்னால் முதல் தவணையாக வெளியிடப்பட்டது. இப்போது நவயானா பதிப்பகம் இரு தவணைகளையும் சேர்த்து, புதிய பதிப்பாக எஸ்.ஆர். ராமகிருஷ்ணாவின் திறமையான ஆங்கில மொழி பெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘உலகே, உன்னோடு ஒரு வார்த்தை’ (எ வேர்டு வித் யூ, வேர்ல்டு) புத்தகம், படிக்கப் படிக்கச் சிரிப்பலைகளை ஏற்படுத்தும்.

சாமிக்கும் நிம்மதி இல்லை

மாகடி நகருக்கு வெளியே இருந்த தலித் மக்கள் காலனியில்தான் சித்தலிங்கய்யா வளர்ந்தார். அவருடைய இளமைக்கால நினைவுகள், அவர் வசித்த ஊரின் அழகை அப்படியே அள்ளிப் பருகியதாயிருக்கிறது. மரங்கள், பாறைகள், பிராணிகள் என்று எல்லாவற்றையும் வெகு கவனமாக நினைவில் வைத்து அதைச் சுயசரிதையிலும் பதிவுசெய்திருக்கிறார்.

கிராமங்களில் ஆண்கள், பெண்கள் என்று அனைவருக்கும் அருள் வந்து சாமியாடும் காட்சிகளையெல்லாம் நன்றாக நினைவுகூர்ந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சாமி மட்டும் அடிக்கடி வராமல் எப்போதாவது வந்துபோகும். அதை அந்த பூசாரி கவனித்து அதட்டிக் கேட்கிறார். சிறுவனாக இருந்தபோது சித்தலிங்கய்யா கேட்ட அந்த உரையாடல் இதோ:

பூசாரி: இத்தனை நாளாக எங்கே போயிருந்தாய்?

சாமி: உங்க கிராமக் கவலை மட்டும்தானா எனக்கு? நான் மூவுலகப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டாமா?

பூசாரி: இங்கே நாங்கள் வாழ்க்கையை நகர்த்துவதற்கே என்ன பாடுபடுகிறோம் தெரியுமா?

சாமி: ஏதோ நான் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துவதைப்போல அலுத்துக்கொள்கிறாயே?

பள்ளியே குலுங்கியது

சித்தலிங்கய்யாவின் முதல் பொதுமேடை அனுபவம் அவருடைய கிராமத் தொடக்கப் பள்ளியிலேயே நடந்தது. அப்போதுதான் பள்ளிக்கூடத்துக்கு வந்துசென்ற பள்ளி ஆய்வாளரைப்போலவே நடந்து, அங்க சேஷ்டை கள் செய்து, அவர் குரலிலேயே பேசியபோது அவருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களின் கண்களெல்லாம் கண்ணீரால் நனைந்தது - ஆமாம், அவர்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

இதற்கிடையே அவருடைய தந்தையின் சகோதரர் மாகடி முனிசிபல் கவுன்சில் தேர்தலில் வெற்றிபெற்று, தலித் மக்கள் குடியிருப்புக்குக் குதிரையில் வந்த காட்சியை அவரால் மறக்கவே முடியவில்லை. அதுவே அவருடைய மனதில் பதிந்த முதல் அரசியல் நிகழ்வு.

மரியாதைக்குரிய தண்ணீர்த் தொட்டி அவர்களே…

சித்தலிங்கய்யா எல்லாப் புத்தகங்களையும் படிப்பார், உடன் கவிதைகளும் எழுதிவந்தார். பொதுமேடையில் பேச அவருக்குக் கற்றுத்தந்ததே அவருடைய உறவினர்தான். உன் முன்னாலிருக்கும் ஜடப் பொருள்களையெல்லாம் மனிதர்களாக நினைத்து பேசிப் பழகு என்று அவர் சொல்லிவிட்டார்.

திடீரென வீதியில் ஒரு நாள், “மரியாதைக்குரிய வெல்லக் கொப்பரை அவர்களே… மரியாதைக்குரிய தண்ணீர்த் தொட்டி அவர்களே…” என்ற கணீர்க் குரலைக் கேட்டு அவருடைய குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தாரும் வீதிக்கு வந்தபோது, சித்தலிங்கய்யாதான் பேசிப் பழகு கிறார் என்று அறிந்து விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

தெருவிலே அவர் எடுத்த பயிற்சி வீண்போகவில்லை. கல்லூரியில் படித்தபோது சிறந்த பேச்சாளர் என்று பெயரெடுத்தார். கல்லூரிகளுக்கு இடையிலான பேச்சுப் போட்டிகளுக்கு அவரையே அனுப்பிவைத்துப் பரிசுகளை அள்ளியது கல்லூரி. ஒரு நாள் மேடையில் பேசும்போது, தன்னுடைய கவிதை வரிகளையே, பிரபல கன்னடக் கவிஞர் குவெம்பு எழுதியதாகக் கூறி வாசித்தார். அரங்கமே அதிரும்வண்ணம் கைத்தட்டல் எழுந்தது.

ஆனால், அவர்களில் ஒருவர் மட்டும் இது குவெம்பு எழுதியதல்ல, இந்த இளைஞன் குறும்பு செய்கிறான் என்று கண்டுபிடித்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல, சித்தலிங்கய்யாவின் சுயசரிதை குறித்து என்னிடம் பேசிய டி.ஆர். நாகராஜ்தான்.

காலே கௌடா என்பவரால் கவரப்பட்ட சித்தலிங்கய்யா, இடதுசாரி அரசியல் ஆதரவாளர் ஆனார். காலே கௌடா அந்நாளைய சோஷலிஸ்ட்டுகளைப் போலவே பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை, வாய்மை, எளிமை ஆகியவற்றைக் கடைப்பிடித்தார். இளம் கவிஞர் சித்தலிங்கய்யா ஏராளமான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதுடன் அவற்றிலெல்லாம் பேசியும் வந்தார்.

அவற்றில் பல சந்தர்ப்பங்களில் மாற்றுக் கட்சியினரின் பலமான ஆட்சேபனைகளையும் அன்பான கவனிப்புகளையும் எதிர்கொண்டார். உடல் முழுக்கச் சிராய்ப்புக் காயங்கள், கிழிந்த சட்டைகள், அடிவாங்கிய அகங்காரங்கள் ஆகியவை அவர் கற்ற அரசியல் பாடத்தின் அங்கங்கள்.

புரட்சிக்காரன்

சித்தலிங்கய்யா, குழந்தைப் பருவம் முதலே குள்ள மாகவும் பலவீனமானவராகவும் இருந்தார். நல்ல உடையணியவும் அலங்காரம் செய்துகொள்ளவும் விரும்பாததால், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளையும் தன்னை மற்றவர்கள் அலட்சியம் செய்ததையும் தனக்கே உரியவகையில் பதிவுசெய்திருக்கிறார். அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த அரசியல் தலைவர் பி. பசவலிங்கப்பா இவரைத் தன்னுடைய சீடராக வரித்துவிட்டார்.

அவர் ஆசையாக வாங்கிக்கொடுத்த சபாரி துணியைப் போட இவர் மறுத்தபோது, அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். ஒழுங்காக உடுத்தாதவன், அலங்காரம் செய்துகொள்ளாதவன் என்றே நான் பிரபலமடைந்திருக்கிறேன் என்று அவரே தன்னைப்பற்றிக் கூறிக்கொள்கிறார். ஒரு புரட்சிக்காரனாக என்னைச் சித்தரித்துக்கொள்ள எனக்கு எந்தவித ஒப்பனையும் தேவைப்படவில்லை. ஏனென்றால், நான் ஏற்கெனவே புரட்சிக்காரனாகத்தான் இருந்தேன் என்கிறார்.

சித்தலிங்கய்யா நகைச்சுவை எழுத்தாளர் மட்டுமல்ல, தாராள மனம் கொண்டவரும்கூட. ‘உன்னோடு ஒரு வார்த்தை, உலகே’ என்ற நூலில் கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரையுலக இயக்குநர்கள் என்று எல்லோரையும் மனதாரப் பாராட்டியிருக்கிறார். இயக்குநர் பிரசன்னா, தத்துவவாதி ஜி. ராமகிருஷ்ணா, ஆசிரியர் எஸ். சீனிவாஸ், சிறுகதை எழுத்தாளர் தேவனூர் மகாதேவா என்று எல்லோரையும் புகழ்ந்திருக்கிறார்.

குறுகிய எண்ணம் எதுவும் இல்லாதவர் என்பதை தலித் அல்லாத எழுத்தாளர்களான சிவராம கரந்த், சமூக சீர்திருத்தவாதிகளான ஆர். கோபால்சாமி ஐயர், டாக்டர் எச். நரசிம்மய்யா போன்றோரைப் பாராட்டி எழுதியிருப்பதிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதும் நினைவுக் குறிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் பவித்திரமாகவும் தங்களைப் பற்றிய மெய்க்கீர்த்தி களையே அடுக்கியதாகவும் இருக்கும். அன்பும் மனிதத்தன்மையும் பொங்க எழுதப்பட்டிருக்கும் சித்தலிங் கய்யாவின் இந்த நூலைப் படித்த பிறகு, ஒருவருடைய குழந்தைப் பருவத்தைப் பற்றியும் அறிவுலகத்துக்கு அவர் ஈர்க்கப்பட்ட விதம்குறித்தும் வேறுவிதமாகக்கூட எழுதலாமே என்று தோன்றுகிறது.

சித்தலிங்கய்யாவை இன்னொரு முறை பார்த்தால், கோஷியின் கடையிலேயே சந்தித்துப் பேசலாம் என்று அழைப்பேன். அவருடைய குறும்புக்கார சகா டி.ஆர். நாகராஜ் நினைவாக ரம் அல்லது விஸ்கி, காபி அல்லது மோர் (எனக்கு) என்று ஆர்டர் செய்துவிட்டு, சித்தலிங்கய்யாவுடன் பேசுவேன்.

தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x