Last Updated : 03 May, 2021 03:15 AM

 

Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

பழனிசாமியின் பாதி வெற்றி

அதிமுகவைப் பொறுத்த அளவில் இந்தத் தேர்தல் அதற்கு இரட்டைச் சவாலாக இருந்தது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது என்பது வெளிப்படையாக அது எதிர்கொண்ட யுத்தம்; தமிழகத்தின் இரு பிரதானக் கட்சிகளில் ஒன்றாக அது நீடிக்குமா என்பது உள்ளுக்குள் அது எதிர்கொண்டுவரும் யுத்தம். பழனிசாமி இரண்டு யுத்தங்களுக்குமே தலைமை தாங்கினார். அதிலும் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் கனவை அந்தரங்கமாகக் கொண்டிருக்கும் பாஜகவைக் கூட்டணிக்குள்ளேயும், தலைமைப் பதவியை அந்தரங்கக் கனவாகக் கொண்டு அதற்கான தருணத்துக்காகக் காத்திருக்கும் பன்னீர்செல்வத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டும் இந்த யுத்தங்களில் அவர் பங்கேற்றார். தேர்தலை பழனிசாமி தலைமையில் சந்தித்த அதிமுக பெற்றிருக்கும் இடங்கள் முதல் யுத்தத்தில் அவருக்குத் தோல்வியைத் தந்தாலும் இரண்டாவது யுத்தத்தில் கணிசமான வெற்றியைத் தந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. தினகரன் - சசிகலாவின் அரசியலுக்கு அநேகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பழனிசாமி; அதிமுக பெற்றிருக்கும் இடங்களில் அவருடைய சொந்தப் பிராந்தியமான கொங்கு மண்டலத்தின் பங்கே பிரதானமாக இருப்பதும், பன்னீர்செல்வத்தால் அவருடைய சொந்த மாவட்டத்தில்கூட பெரிய அளவிலான வெற்றியை அதிமுகவுக்குப் பெற்றுத்தர முடியாததும் சேர்ந்து பன்னீர்செல்வத்துக்கான எல்லையையும் சுருக்கிவிட்டிருக்கின்றன.

2021 தேர்தலை உத்தேசித்து ஒரு வருடத்துக்கு முன்பே வேலைகளைத் தொடங்கினார் பழனிசாமி. அதற்கேற்ப ஆட்சியிலும் கட்சியிலும் தன்னுடைய பிடியை இறுக்கிக்கொண்டே வந்தவர், கடைசியில் முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாயாலேயே சொல்ல வைத்தார். கட்சிக்குள் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரித்தவர் ஏராளமானோரை அதிகாரம் நோக்கி நகர்த்தினார். ‘நமது அம்மா’ நாளிதழில் பக்கம் பக்கமாகப் புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் மாவட்ட, ஒன்றிய அமைப்புகளும் பிரிக்கப்பட்டன. அதிருப்தியாளர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், மிகக் கவனமாக அமைச்சர்கள், அனுபவசாலிகள், செல்வாக்குள்ளவர்களுக்கே தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கப்பட்டது. இதனால் விளையவிருக்கும் அதிருப்திக்கு முன்கூட்டியே அணை கட்டுவதாக அமைந்தது புதிய நிர்வாகிகள் நியமனம்.

சமூக வலைதளக் காலகட்டத்தில் பிரச்சார வியூகம் மாறியிருக்கிறது என்பதை 2019 மக்களவைத் தேர்தல் தோல்வி மூலமாகப் புரிந்துகொண்ட பழனிசாமி ‘அதிமுக ஐடி விங்’குக்குப் புது ரத்தம் பாய்ச்சினார். மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி அளவில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று களமாடினார்கள். திமுக தன்னுடைய தேர்தல் வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோரைத் தேர்ந்தெடுத்தபோது, அதுவரை அங்கு பொறுப்பில் இருந்த சுனிலைத் துளி தயக்கமும் இன்றி அதிமுக பக்கம் இழுத்துக்கொண்டார் பழனிசாமி.

கட்சி நிர்வாகத்தை சுமார் 80 மாவட்டச் செயலாளர்கள் வழி அதுவரை மேற்கொண்டுவந்த பழனிசாமி, இதுவரை திமுக, அதிமுக இருவருமே செய்திராத இரண்டு அணிகளை இம்முறை அறிமுகப்படுத்தினார். ‘ஸ்கீம் டீம்’, ‘அலையன்ஸ் டீம்’ என்று பெயரிடப்பட்ட இந்த அணிகளில், தேர்தல் நெருங்குவதையொட்டி மக்கள் எதிர்பார்க்கும் சிறப்புத் திட்டங்களை அதிரடியாக அமல்படுத்தும் வேலையில் இந்த ‘ஸ்கீம் டீம்’ இறங்கியது; எந்தெந்த அணிகளோடு கூட்டு சேரலாம்; சமூகரீதியாக அவர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள், வாக்குறுதிகளை அளிக்கலாம் என்று கண்டறியும் வேலைகளில் ‘அலையன்ஸ் டீம்’ இறங்கியது. கூடவே திமுக கடும் முனைப்பின் வழி கொண்டுவரும் எல்லா அறிவிப்புகளையும் தன்னுடையதாக மாற்றிக்கொள்ளவும் இவர்கள் தயங்கவில்லை.

அரசியல்ரீதியிலான கூட்டணி என்கிற வகையில் திமுக வலுவான ஒரு கூட்டணியோடு ஏற்கெனவே இருக்க, சாதிரீதியிலான கணக்குகளைக் கையாண்டார் பழனிசாமி. தெற்கே தேவேந்திரர் சமூகம், வடக்கே வன்னியர் சமூகம், மேற்கே தான் சார்ந்த கவுண்டர் சமூகம் இவை மூன்றையும் மையப்படுத்தி அவர் போட்ட கணக்குகள் எதிர்பார்த்த பலனை அவருக்கு அளிக்காவிட்டாலும், இப்போது அவர் பெற்றிருக்கக்கூடிய வெற்றியில் கணிசமான பங்கு இந்தக் கணக்குக்கு இருக்கிறது. தேர்தல் அறிக்கை உள்பட திமுகவின் பல அறிவிப்புகளை அதிமுக பிரதியெடுத்தது மறைமுகமாக வேறு ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. திமுக அறிவிப்புகளின் வீரியத்தை நீர்க்கடித்தது.

கவர்ச்சிகரமான தலைமைக்குப் பழகிய கட்சி அதிமுக. எதிரே ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என்று பல தலைவர்களோடு திமுக வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது தனி ஒருவராகச் சுமைகளை ஏந்திய பழனிசாமி கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதிகளுக்குமே சென்றார். இந்தத் தேர்தலில் 20,000 கி.மீ. அவர் பயணித்தார். தொண்டை கட்டிக்கொள்ளும் அளவுக்குப் பேசினார். முதலில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தியே பேசினார்; அது போதிய வரவேற்பைப் பெறாதபோது பத்தாண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சியின் கேடுகளைப் பேசலானார். இந்த வியூகம் ஓரளவுக்கு எடுபட்டது என்றே சொல்ல வேண்டும்.

சசிகலாவால் அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட 2011 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11/11, 2016 தேர்தலில் 10/11 தொகுதிகளைக் கட்சிக்கு வென்று கொடுத்ததும் ஒரு காரணம். ஆகையால், கட்சிக்குள் நாளை ஒரு போர் வந்தால் தன் கை உறுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர் தன்னுடைய மாவட்டம் மட்டும் இன்றி தான் சார்ந்த கொங்கு பகுதிக்கு எல்லாவற்றிலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார். 2001-ல் கட்சியின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரான அவர், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆன பிறகும் மாவட்டச் செயலர் பதவியை யாருக்கும் விட்டுத்தரவில்லை என்ற தகவல் பலருக்கு ஆச்சரியம் தரலாம். வெளியே தன்னை ஒரு பெரும் ஆளுமையாக நிலைநிறுத்திக்கொள்ள முற்பட்டவர். சொந்த ஊரில் எந்த பந்தாவும் இல்லாமல் நடந்து வந்தார்.

இவை எல்லாமும் கூடித்தான் கட்சியில் இன்றைக்கு அவர் கரத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. ‘திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும்!’ என்று ஸ்டாலின் சொல்லிவந்ததும், பல ஊடகங்கள் அதற்கு நெருக்கமான தொகுதிகளைக் கருத்துக்கணிப்புகளில் வெளியிட்டதும் உண்மைக்கு அப்பாற்பட்ட நிலை கிடையாது. திமுகவின் வேகத்தை அங்கிருந்து குறைத்து, ஒரு மெல்லிய பெரும்பான்மையுடன் கூடியதாக அதன் வெற்றியைக் குறைத்திருப்பதில் பழனிசாமியின் இவ்வளவு வேலைகளும் அடங்கியிருக்கின்றன. துடிப்பான எதிர்க்கட்சியாக அதிமுகவை அவர் வழிநடத்தினால் வெற்றிகரமான எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் உருவெடுப்பார் என்றே தோன்றுகிறது.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x