Published : 02 May 2021 03:13 am

Updated : 02 May 2021 04:34 am

 

Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 04:34 AM

சோலி ஜே.சொராப்ஜி: மாற்றங்களுக்கு வித்திட்ட சட்டநெறியாளர்

soli-sorabjee

மூத்த வழக்கறிஞர் சோலி ஜஹாங்கீர் சொராப்ஜியின் (1930-2021) மகளும் வழக்கறிஞருமான ஸியா மோதி, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்தியாவை மாற்றிய பத்து தீர்ப்புகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்துக்குப் புதிய பொருள் விளக்கங்களை அளித்து, நாட்டின் வரலாற்றை நல்வழிப்படுத்திய அந்தத் தீர்ப்புகளுக்காக வாதாடிய முன்னணி வழக்கறிஞர்களில் சோலி சொராப்ஜியும் ஒருவர்.

கேசவானந்த பாரதி வழக்கில் மூத்த வழக்கறிஞர் நானி பல்கிவாலாவுக்கு பாலி நாரிமனும் சோலி சொராப்ஜியும் இளம் வழக்கறிஞர்களாக உதவினர். 1973-ல் அவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்ற கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை நாடாளுமன்றத்தால் திருத்தி எழுத முடியாது, அத்தகைய திருத்தங்கள் நீதிமன்றத்தின் சீராய்வுக்கு உட்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின் செல்லும் தன்மையைத் தீர்மானிப்பதில் இவ்வழக்கின் தீர்ப்பு வழிகாட்டியாய் நின்றது. நெருக்கடிநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைதான அரசியல் கைதிகள் பலருக்கும் சோலி சொராப்ஜி சட்டரீதியான உதவிகளைச் செய்தார். நெருக்கடிநிலைக்கு எதிராக மும்பை வழக்கறிஞர் சங்கத்தை வழிநடத்தியதோடு, அது தொடர்பில் கருத்தரங்குகளையும் கூட்டங்களையும் ஒருங்கிணைத்தார்.


தனிமனித சுதந்திரம் என்பது கண்ணியமாக வாழும் உரிமையையும் உள்ளடக்கியது என்று தீர்ப்பளிக்கப்பட்ட மேனகா காந்தி வழக்கிலும் சோலி சொராப்ஜி வாதாடியிருக்கிறார். அவ்வழக்கில், தனிநபர் சுதந்திர உரிமையை நிர்வாக உத்தரவுகளால் மட்டுமின்றி, சட்டங்களாலும்கூடக் கட்டுப்படுத்த முடியாது என்று 1978-ல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் மனுதாரரின் வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார் சோலி சொராப்ஜி. அவ்வழக்கில் 1994-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் முழுமையானது அல்ல என்பதுடன், அது நீதிமன்றத்தின் சீராய்வுக்கும் உட்பட்டது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கறிஞர்களின் வாதங்களிலிருந்தே நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை எழுதத் தொடங்குகிறார்கள் என்பதால், வழிகாட்டும் தீர்ப்புகளில் வழக்கறிஞர்களும் துணையாசிரியர்கள்தான்.

ஸியா மோடியின் நூலில் இடம்பெற்றுள்ள மற்றொரு வழக்கு 1984-ல் போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவு தொடர்பானது. அந்தத் துயரத்தின் படிப்பினையால்தான் இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் பலவும் இயற்றப்பட்டன. அவ்வழக்கில், தமக்காக வாதிட வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் வேண்டுகோளை மறுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வாதாடினார் சோலி சொராப்ஜி. ஆனால், பின்பு அவர் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது, ஆலை அதிபர் வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரிக்க வலியுறுத்தவில்லை என்ற விமர்சனங்களும் உண்டு. உறுதியான சாட்சியங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை ஒப்படைக்கச்சொல்லி அயல்நாடுகளிடம் கேட்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று தெரிகிறது.

காவல் துறைச் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்த பிரகாஷ் சிங் வழக்கு, இணையத்தில் கருத்துரிமைக்குத் தடைவிதிக்கும் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 33 (அ) செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஷ்ரேயா சிங்கால் வழக்கு, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களை விசாரித்த மக்கள் மன்றம் என்று நீதிமன்றங்களுக்கு உள்ளும் வெளியிலுமாக மனித உரிமைகளுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் சோலி சொராப்ஜி. 1989-90, 1998-2004 ஆண்டுகளில் முறையே வி.பி.சிங், ஏ.பி.வாஜ்பாய் ஆட்சிக் காலங்களில் இருமுறை அட்டர்னி ஜெனரலாகப் பொறுப்பு வகித்தவர். கார்கில் போரை அடுத்து இந்தியாவின் மீது பாகிஸ்தான் தொடுத்த இழப்பீட்டு வழக்கை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடியவர். 1997-ல் நைஜீரியாவின் மனித உரிமை நிலைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு ஐநாவால் நியமிக்கப்பட்டார். ஆங்கிலக் கவிதைகளின் காதலரான அவர், ஜாஸ் இசை நிபுணரும் கிளாரிநெட் இசைக் கலைஞரும்கூட.

1953-ல் மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கிய சோலி சொராப்ஜி, 1971-ல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரானார். ஏறக்குறைய 70 ஆண்டு கால வழக்கறிஞர் வாழ்க்கை. இளம் வழக்கறிஞர்களின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான சோலி சொராப்ஜி, அவர்களுக்கு அடிக்கடி சொன்ன அறிவுரை இது: ‘பணம் சம்பாதிப்பதற்காக வக்கீல் தொழிலுக்கு வராதீர்கள். ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டாலோ கட்டிட ஒப்பந்ததாரராக மாறினாலோ இன்னும் எளிதாகச் சம்பாதிக்கலாம். கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும். ஏனெனில், வழக்கறிஞர்களுக்கு ஓய்வு கிடையாது. இறக்கும் வரைக்கும் அவர்கள் பணியாற்ற வேண்டும்.’

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.inசோலி ஜே.சொராப்ஜிமாற்றங்களுக்கு வித்திட்ட சட்டநெறியாளர்சோலி ஜஹாங்கீர் சொராப்ஜிSoli Sorabjee

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x