Published : 28 Apr 2021 10:25 AM
Last Updated : 28 Apr 2021 10:25 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 35: வேட்டி கட்டிய அமெரிக்க ‘டாம்’

கல்யாணி நித்யானந்தன்

அது 1962 என்று நினைக்கிறேன். என் அன்யோன்ய தோழி, தொலைபேசியில் கூப்பிட்டாள். ‘‘உனக்குத் தெரியுமா? 'Experiment in international living' என்று ஒரு தன்னார்வ நிறுவனம் இருக்கிறது. இவர்கள் சில தேசங்களில் இருந்து 18 முதல் 30 வயதுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து தேசம் விட்டுத் தேசம் பரிமாற்றம் செய்கிறார்கள். இவர்கள் வேறு தேசத்தில் குடும்பங்களில் வசித்து, அந்தத் தேசத்தின் மக்கள், கலாச்சாரம் முதலியவற்றைத் தெரிந்துகொண்டு அதேபோல் தங்கள் தேசத்தைப் பற்றிய விவரங்களைப் பரப்புவார்கள். இப்படி இளைஞர்களைத் தங்க வைத்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் உள்ள என் சகோதரி எனக்கு ஒரு இளைஞனைத் தங்க வைத்துக்கொள்ளச் சம்மதமா என்று கேட்கிறாள். என்ன சொல்ல குழப்பமாய் இருக்கிறது’’ என்றாள்.

‘‘நீ கவலைப்படாதே. நான் உதவி செய்கிறேன். நல்ல அனுபவமாக இருக்கும்’’ என்றேன்.

பிறகு நாங்கள் கலந்தாலோசித்தோம். சாதாரணமாகச் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் இடங்களைத் தவிர்த்து, இந்திய சாதாரண நடுத்தர வகுப்புக் குடும்பம் வாழும் முறை, நிஜமான இந்திய வாழ்வைக் காட்டும் இடங்களையும் நிகழ்ச்சிகளையும் காண்பிப்பது என்று முடிவு செய்தோம். இப்படித்தான் நான் டாம்-ஐச் சந்தித்தேன். குழந்தைத்தனம் மாறாத 19 வயது இளைஞன். 6.2 அடி உயரம். வட அமெரிக்காவின் வடமேற்கிலிருந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரிப் படிப்பைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் சங்கோஜியாயிருந்தான்.

வீட்டில் தென்னிந்திய உணவுதான். இட்லி, தோசையிலிருந்து சாம்பார், பொரிச்ச கூட்டுதான். காரத்தை மட்டும் நன்றாகக் குறைத்துவிட்டோம். ஐயோ பாவம் என்று! கையாலே சாப்பிடக் கற்றுக்கொடுத்தோம். தோசை, இட்லியைப் பிட்டுப் பிட்டு சட்னி, சாம்பாரில் ஒத்தி ஒத்திச் சாப்பிட்டான். ஆனால் சாதமோ? தட்டிலிருந்து எடுக்கவே திண்டாடினான். என் சிநேகிதி அழகாகக் கற்பித்தாள். விரல்களால் சாதத்தை எடுத்து பெருவிரல் தவிர மற்ற நான்கு விரல்களில் வைத்து, ஸ்பூனை வாயுள் கொண்டு போவதுபோல விரல்களை வாயினுள் செலுத்தி, பெரு விரலால் சாதத்தை வாயினுள் தள்ளும்படி சொல்லிக்கொடுத்தாள். சில களவங்களுக்குப் பிறகு சுமாராகச் செய்தான், ரசித்தான். உணவு மேஜையில் அடுத்து இருந்த குழந்தைகளுக்கு ஒரே சிரிப்பு. சில நாட்களிலேயே சிந்தாமல், சிதறாமல் சாப்பிடுவதில் நிபுணன் ஆகிவிட்டான். முட்டைகூட உள்ளே நுழையாத வீட்டில் முழு சைவ உணவில் எப்படிக் காலம் தள்ளுவது என்று அவன் கண்டிப்பாகக் கவலைப்பட்டிருக்க வேண்டும்.

டாமுக்கு நம்மூர் காய்கறிகளைப் பச்சையாகக் காண்பித்துப் பிறகு சமைத்த வகைகளை அறிமுகப்படுத்தினோம். பெயர் பெற்ற உணவகங்களுக்குக் கூட்டிச் செல்லாமல், சிறிய உணவகங்களுக்கும், தேநீர் கடைகளுக்கும் கூட்டிப்போனோம். டாமுக்கு மிகவும் பிடித்தது என்ன தெரியுமா? பித்தளை டபரா டம்ளரில் காபியைத் தூக்கித் தூக்கி ஆற்றுவதைப் பார்ப்பதுதான். சில நாட்களிலேயே ‘நாம் ஒரு கஜம் காபி குடிக்கப் போகலாமா?’ (one yard coffee) என்று கேட்கத் தொடங்கினான்.

மசால் வடையையும் சமோசாவையும் அவனால் சமாளிக்க முடியவில்லை. ‘உஸ்.. உஸ்..’ என்று தவித்தான். சாதா வடை, மைசூர் போண்டா, பஜ்ஜி பிடித்தது. ‘பேல்பூரி’யை ரசித்தான். இங்கு ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். என் தாயார் முதல் முறை ‘பேல்பூரி’யைப் பார்த்தபோது என்ன சொன்னார் தெரியுமா? ‘இது என்னடி? கராஜ் (garage) பெருக்கின குப்பை மாதிரி இருக்கு?’ எங்கள் சிரிப்பு அடங்க வெகுநேரம் பிடித்தது. ஆனால், அது கொஞ்சம் நிஜம் போல இல்லை?

சின்ன, பெரிய கோயில்கள்... வேஷ்டியைக் கட்டி, அங்கவஸ்த்ரம் அணிவித்து, நெற்றிக்கு இட்டு கூட்டிப்போனோம். ‘சதிர்’ தேங்காய் உடைப்பதைப் பார்த்தான். பார்த்தசாரதி கோயில் சர்க்கரைப் பொங்கலைத் தொன்னையில் வாங்கித் தின்றான். பூ கட்டுவதையும், மாலை கட்டும் லாவகத்தையும் கண்டு வியந்தான். தாமரை மொட்டை வாங்கி இதழ்களைப் பிரித்து மலராக்குவதைக் கற்றுக்கொண்டான்.

மாட்டு வண்டியில் தலை இடிக்கப் பயணம். கடற்கரையில் அலையில் நின்றோம். தண்ணீரை வாரி அடித்துக்கொண்டோம். நண்டுகள் பக்கவாட்டில் ஓடி வளைக்குள் ஒளிவதைக் காண்பித்தோம். வலைகளைக் கட்ட மரங்கள் கரைக்கு வருவதை, பாதையோர மீன் கடைகளைக் காண்பித்தோம். அவன் இதுவரை கண்டிராத மீன்களைப் பார்த்தான். கால் புதைய மணலில் நடந்தோம். காகிதக் கூம்புகளில், வேர்க்கடலை, ‘தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல்’ தின்றோம். சுண்டலில் உள்ள பச்சை மிளகாய்த் துண்டுகளை கவனமாக நீக்கிவிட்டுத்தான் டாமுக்குக் கொடுத்தோம்.

விடிகாலையில் கொத்தவால்சாவடிக்குக் கூட்டிப்போனோம். மூட்டைகளை அனாயாசமாக இறக்குவதைப் பார்த்தான். பெரிய பெரிய காய்கறிக் கூடைகளின் பின், பெரிய உருவம். அள்ளி முடிந்த கூந்தலும், வாய் நிறைய வெற்றிலையும், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுமாய், கனத்த குரலில் விலை பேசும் பெண்மணிகளைப் புகைப்படம் பிடித்துக்கொண்டோம். சைக்கிள் ரிக்சாவில் சவாரி செய்தது மட்டுமின்றி, ஓட்டியும் பார்த்தான். கை ரிக்சாவையும் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்துச் சவாரி செய்ய வைத்தோம்.

என் தோழியின் உறவினர் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்துக்குப் போனோம். விவசாயப் பின்னணியிலிருந்து வந்த டாமுக்கு நெல் வயல்கள், தண்ணீர் இறைக்கும் முறை, இந்த நாட்டு சோளக் கொல்லை, கரும்புத் தோட்டம், புகையிலை, மிளகாய்ப் பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் அனைத்தும் வியப்பூட்டின. வீதியின் நடுவில் உள்ள பொதுக் கிணறு, 2 சகடைகள், பல பெண்கள், ‘வெள்ளைக்காரனை’க் கண்ட சிறுவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். பலருக்கு டாம் ‘ஷேக்ஹேண்ட்’ கொடுத்தான். பெண்கள் தலைகுனிந்து வாய் பொத்திச் சிரித்தார்கள். 12 - 13 வயது சிறுமிக்கு டாம் ‘ஷேக்ஹேண்ட்’ கொடுக்க நெருங்கியபோது அவசர அவசரமாகத் தடுத்தோம், பெண்களைத் தொடக் கூடாது என்று. டாம் ஒன்றும் புரியாமல் தலையாட்டினான்.

அன்று இரவு உணவு முடித்துக் கூடத்தில் பாய்கள் விரிக்கப்பட்டு வீட்டார் (ஆண் பெண் அடங்கலும்) உறங்கத் தயாரானார்கள். திண்ணையிலும் சிலர். டாம் குழம்பிக் கேட்டான். ஆண் - பெண் அனைவரும் ஒரே அறையில் உறங்குகிறீர்கள். பெண்ணுக்கு ‘ஷேக்ஹேண்ட்’ கொடுப்பது தப்பு என்கிறீர்கள். புரியவில்லை’ என்றான். ‘‘நாங்கள் இரவு உடைக்கு மாறுவதில்லை. நடு இரவில் எந்த ஆணும் இங்குள்ள பெண்களைத் தொட வேண்டும் என்றுகூட நினைக்க மாட்டார்கள்’’ என்று விளக்க முயன்றோம். அது புரிந்ததா என்று தெரியவில்லை. விறகடுப்பையும், பானைச் சமையலையும் கண்டான். தரையில் அமர்ந்து இலையில் அவன் உண்ண முயன்றது சிறுவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆந்திரக் கார சமையலில் தயிரைக் கலந்து கலந்து ஒருவாறு சாப்பிட்டான்.

சென்னைக்குத் திரும்பினோம். ஏற்கெனவே அவன் இரண்டாம் மாதம் வேறு ஒரு குடும்பத்துடன் தங்க ஏற்பாடாகி இருந்தது. அது ஒரு பெரிய தொழிலதிபரின் குடும்பம். ஒரு மாதத்தில் குடும்பத்தில் ஒருவனாகவே கலந்துவிட்ட டாமை என் தோழி பிரியாவிடை கொடுத்து அனுப்பினாள். அங்கு அவன் விருந்தாளியாக ராஜ உபசாரத்துடன் நடத்தப்பட்டானாம். பல சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். பல தேநீர் விருந்துகளுக்கும், ஐந்து நட்சத்திர உணவகங்களுக்கும் சென்றான். பல பிரமுகர்களைச் சந்திக்க சந்தர்ப்பங்கள் அமைந்தன. பெரும்பாலானவர்கள் அமெரிக்காவுக்குப் போய் வந்தவர்கள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் டாம் தொலைபேசியில் அழைத்தான். ‘நான் திரும்பிப் போகும் முன் மீண்டும் உங்களோடு சில நாட்கள் தங்கலாமா?’ என்று கேட்டான். அவன் குரலில் இருந்த ஏக்கம் எங்களுக்குத் தொண்டையை அடைத்தது. டாம் இங்கு இருக்கும்போது குழந்தைகளுக்கு ‘டாம் மாமா’வாக அவர்களைத் தூக்கிப்போட்டுப் பிடித்து, ஒளிந்து விளையாடினான். அவனுடன் கிரிக்கெட்டும், கிட்டிப்புள், பம்பரம் விளையாடக் குழந்தைகள் முயற்சி செய்து சிரிப்பில் ஆழ்ந்திருந்தார்கள். நாயும் அவர்கள் விளையாட்டில் கலந்துகொண்டது.

நாங்கள் அந்தக் குடும்பத்தைச் சந்தித்துக் குழந்தைகளின் ஆசையைக் காரணம்காட்டி அவர்களின் சம்மதம் பெற்றோம். 4 நாட்களுக்கு டாம் வந்தான். ஒரே கும்மாளம்தான். மீண்டும் ‘ஒரு கஜம் காபி’, பேல்பூரி, டாமின் தோசை வார்க்கும் முயற்சி, தோட்டத்து இளநீர் என்று நாட்கள் பறந்தன.

இந்தப் பரிமாறலில் வந்தவர்கள் இரண்டு மாதத்துக்குப் பிறகு 15 நாட்கள் இந்தியச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் குழுவினர் கூடி பிறகு போவதாக ஏற்பாடு. டாமுக்கு நம்மூர் ரயில் பயணம் அனுபவம் வேண்டும் என்பதால் அவன் ரயிலில் போகத் தீர்மானித்து இருந்தான். ரயில் நிலையத்தில் குடும்ப சகிதம் அவனைச் சந்தித்தோம். ‘‘இங்கு வந்தபோது எப்படிப் பொழுதைக் கழிப்போம், U.S.க்குத் திரும்பும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பேன் என்று நினைத்தேன். உங்கள் குடும்பத்தினருடன் இருந்த அனுபவங்களை எப்படி வர்ணித்தாலும் அது வெறும் வார்த்தைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையையும், உணர்வுகளையும், என்னுள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் புரியவைக்கவே முடியாது’’ என்றான். கண்ணில் நீருடனும் கனத்த இதயத்துடனும் புகைவண்டி நகரும்போது கையசைத்து வழியனுப்பினோம்.

பிறகு 1964-ல் இதே பரிமாற்றத்தின் கீழ் ஒரு குழுத் தலைவியாகத் தேர்வு செய்யப்பட்டு நான் வட அமெரிக்காவுக்குச் சென்றேன். அது ஒரு சுவாரசியமான அனுபவம். அதைப் பற்றிப் பின்னர் பேசலாம்.

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x